தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுத்தரத்தினேஸ்வரர் கோவில்

Go down

சுத்தரத்தினேஸ்வரர் கோவில் Empty சுத்தரத்தினேஸ்வரர் கோவில்

Post  birundha Sun Mar 31, 2013 2:39 pm

ஸ்தல வரலாறு......

பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

காயத்துடன் சிவலிங்கம்.......... ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

தீர்த்தத்தின் சிறப்பு......... உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்துள்ளார் என்றும், இதனால் இந்த தீர்த்தம் மேலும் சிறப்பு பெற்று உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ராஜராஜசோழன் உடல் நலம் இல்லாமல் இருந்தபோது, ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு குணம் அடைந்து ஆயுட்காலம் நீடிக்கப்பெற்றார் என்றும் கர்ண பரம்பரை கதைகள் மூலம் அறிய முடிகிறது.

அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடாலூர் என அழைக்கப்பட்டது.

இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம்.......... ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால், சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு.

ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கோவில் அமைப்பு........... ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின்போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது.

இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கி நந்தி........... மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.

பஞ்சாட்சர மந்திரம்......... இக்கோவிலில் வானளாவிய பெரிய ராஜகோபுரம் உள்ளது. கோவிலின் நடுவில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இக்கோவிலில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியே ஊரில் உள்ள மற்றொரு கோவிலான பெருமாள் கோவிலுக்கு பிரம்ம தீர்த்தம் எடுத்து சென்றதாக வரலாறு கூறுகிறது. நான்கு புறமும் பெரிய மதில் சுவர் உள்ளது.

இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று. மாசி மாதம் வளர்பிறையில் பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜெபம் செய்தால் பல தோஷங்கள் நிவர்த்தி ஆகிறது. சுவாமிக்கு குத்துக்கடலையை மாலையிட்டு குத்துக்கடலை சுண்டல் பூஜையை விடியற்காலை 4.30 மணி முதல் 7 மணிக்குள் குரு ஓரையில் வழிபட வேண்டும். இந்த பூஜையை 11 வாரம் செய்து வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

பாறைகளின் சிறப்பு....... ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன.

சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. நடராஜர் சிலைக்கு அருகில் இறைவி சிவகாம சுந்தரியின் திருவுருவ சிலை அமைந்துள்ளது. இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பாகும். அந்த அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார்.

அபூர்வ நடராஜர்...... இந்த கோவிலில் உள்ள துர்க்கை கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு காட்சி அளிக்கிறார். இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சர்க்கரைப்பொங்கல் அல்லது பாயாசம் வைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார். ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவிலான இந்த கோவில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடாலூரில் இருந்து அடிக்கடி பஸ் போக்குவரத்து வசதி உள்ளது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum