பச்சை என்கிற காத்து
Page 1 of 1
பச்சை என்கிற காத்து
ஒரு மரண வீடு. வாழ்க்கையை உத்வேகத்துடன் தொடங்க வேண்டிய 27-ம் வயதில் பச்சை என்கிற நாயகன் உயிரற்ற சடலமாகக் கிடத்தப்பட்டிருக்கிறான். அந்த வீட்டு வாசலின் முன் குழுமியிருக்கும் மனிதர்களின் முகங்களில் வருத்தமோ துயரமோ ஏதும் இல்லை. அந்த இளைஞனின் மரணம் யாரையுமே பாதித்ததாகத் தெரியவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக அவனுடைய மனைவி ஒரு படி மேலே போய் தந்தையை பிரியாணி வாங்கி வரச் செய்து ஆசையுடன் சாப்பிடுகிறாள். இப்படித் தொடங்குகிறது படம்...
எல்லாம் முடிந்து பச்சையின் சிதை எரியும்போது அந்தப் பின்னணியில் இரு நண்பர்களின் வாயிலாக பச்சையின் வாழ்வு விவரிக்கப்படுகிறது.
"ஏதோ மனிதன் வாழ்க்கையில் ஜாலியாக இருக்க வேண்டும்; அதைத்தானே நான் தினந்தோறும் செய்துகொண்டிருக்கிறேன்' என்று பேசியபடியே வாழ்க்கையைத் தனது மனம் போன போக்கில் செலுத்துகிறான் பச்சை. இளைஞர்கள் பலர், அரசியலைத் தொழிலாகத் தேர்வு செய்து அதை பணமீட்டும் இயந்திரமாகக் கையாள்வதைக் கண்டு பள்ளிப் பருவத்திலேயே அரசியல் அபிலாஷை கொள்கிறான்.
விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் பல "தில்லாலங்கடி' வேலைகளைச் செய்து அரசியலில் முன்னேறத் துடிப்பவனுக்கு கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்புகிறது. இதையடுத்து மாற்றுக் கட்சிக்காரர்கள் ஆதரவு தர, பச்சையின் அடாவடி தொடருகிறது. இதற்கிடையில் பூக்காரி செல்வியுடன் காதல். அன்பையும் அதிரடியாகவே காட்டத் தெரியும் பச்சையால் தனது காதலைத் தக்க வைக்க முடியாத சூழ்நிலை.
கட்டுப்பாடற்று வாழும் ஒருவன் தன் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் இழக்க நேரிடும் என்பதை பச்சை கதாபாத்திரத்தின் மூலம் பாடமாகச் சொல்லியிருப்பதே படத்தின் கதை.
அரசியல் பின்புலத்தில் காதலும் அடிநாதமாய் தொடர, யூகிக்க முடியாத காட்டாற்று வேகத் திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கிறது. செல்வியின் காதலும் அதன் ஆழமும் உணர்த்தப்படும் காட்சியில் பச்சையைப் போலவே ரசிகர்களையும் அந்த எதிர்பாராத அதிர்ச்சி தாக்குகிறது.
பச்சையின் மரணம் நிகழ்ந்த அந்த ஃபிளாஷ்பேக் காட்சி தமிழ் சினிமாவுக்குப் புதிது. கதைக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து உயிர்ப்புடன் உலவ விட்டிருப்பதில் தேர்ந்த இயக்குநராகப் பளிச்சிடுகிறார் கீரா. பச்சையின் தந்தையாக வரும் பேராசிரியர் மு.ரா., தாயாக நடித்துள்ள சத்தியபாமா, உடன்பிறவா தம்பிகளாக வரும் துருவன், வளவன், அலசுவாக வரும் அப்புக்குட்டி என அனைத்துக் கதாபாத்திரப் படைப்புகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
பச்சையாக நடித்துள்ள வாசகரின் உடல் மொழி, வசன உச்சரிப்பு, தேர்ந்த நடிப்பு ஆகியவை பாராட்டப்பட வேண்டியவை. நகைச்சுவைக் காட்சிகளிலும் நக்கல் வசனங்களைப் பேசும்போதும் "புதிய பாதை' பார்த்திபன், "பருத்திவீரன்' கார்த்தி ஆகியோரின் கலவையாக மிளிர்கிறார். நாயகி தேவதை ஓ.கே. ரகம்.
அரிபாபுவின் பின்னணி இசையும் பாடலிசையும் வரவேற்கத்தக்கவை. சாவீ எழுதியுள்ள "நான் உன்னைப் பார்த்தேன்...', "மீசையில்லா சூரப்புலி...', "சிரிக்கிறாளே சிரிக்கிறாளே...' பாடல்கள் காதலையும் சோகத்தையும் புதிய பரிமாணத்தில் பிரதிபலிக்கின்றன. அதே நேரம் "வணங்கா மண் கப்பல் தரையைத் தட்டி நிக்குதே...', "இனம் காக்க போரிடுதல் கொலை என்று ஆகிடுமா' பாடல்களினூடே இழையோடும் வரிகளில் ஈழத்தின் வலி இலை
மறை காயாய் வெளிப்பட்டு இதயத்தைக் கனக்கச் செய்கிறது.
ஒளிப்பதிவைப் பொருத்தவரை அன்பு ஸ்டாலினின் கேமரா கோணங்கள் சிறப்பாக இருந்தாலும் லைட்டிங், கலர் கான்ட்ராஸ்ட் உள்ளிட்ட சில விஷயங்களில் இன்னும் நவீன தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டிருக்கலாம். படத்தொகுப்பாளர் அருண்துரைராஜ் சில காட்சிகளையும் இரு பாடல்களையும் சற்று "ட்ரிம்' செய்திருக்கலாம்.
தொழில்நுட்ப ரீதியாக சில குறைபாடுகள் இருந்தாலும் அவை படைப்பைப் பாதிக்காதவாறு சிறு பட்ஜெட்டில் படத்தை சிறப்பாக உருவாக்கிக் காட்டியுள்ள இளம் படக்குழுவினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.
அகிரா குரோசவாவின் "ரஷோமான்' பட பாணியில் ஒரு மரணத்தின் பின்னணியில் பச்சையின் வாழ்வு விவரிக்கப்படும் அறிமுகக் காட்சி முதல் கிளைமாக்ஸ் காட்சி வரை பல இடங்களில் இது ஒரு சராசரிப் படம் அல்ல என நிரூபித்திருக்கிறார் இயக்குநர் கீரா. "பச்சை என்கிற காத்து' - தென்றலும் சூறாவளியும் கலந்த கலவை.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விரைவில் வீச வருகிறது 'பச்சை என்கிற காத்து'
» அஜீத் படத்தில் மனோசித்ரா என்கிற நந்தகி என்கிற மனோசித்ரா
» கார்த்தியின் பச்சை துரோகமா? பச்சை நோட்டு பாசமா?:பரப்பாகும் வில்லங்க வீடியோ!
» பாஸ் என்கிற பாஸ்கரன் – திரை விமர்சனம்
» காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற
» அஜீத் படத்தில் மனோசித்ரா என்கிற நந்தகி என்கிற மனோசித்ரா
» கார்த்தியின் பச்சை துரோகமா? பச்சை நோட்டு பாசமா?:பரப்பாகும் வில்லங்க வீடியோ!
» பாஸ் என்கிற பாஸ்கரன் – திரை விமர்சனம்
» காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum