நான் ஈ விமர்சனம்
Page 1 of 1
நான் ஈ விமர்சனம்
ஒரு சாதாரண கதைக் கருவை தைரியமாகத் தேர்ந்தெடுத்து, அதை கற்பனைக்கெட்டாத வகையில் மெருகூட்டி, ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியான திரைமொழியில் வார்த்தெடுத்து படம் நெடுகிலும் பரவச அனுபவத்தைப் படரவிட்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெüலியும் இப்படிப்பட்ட ஒரு கதையைப் படமாக்க முன் வந்த தயாரிப்பாளர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
தன் வீட்டுக்கு எதிரே குடியிருக்கும் நாயகி பிந்துவை மனதாரக் காதலிக்கிறான் நாயகன் நானி. அவனுடைய காதல் குறும்புகளை அலட்சியப்படுத்தி புறந்தள்ளும் நாயகி உள்ளுக்குள் அவற்றை ரசித்து உருகி மருகுகிறாள். இந்நிலையில் தான் நடத்தி வரும் சமூக சேவை நிறுவனத்துக்கு நன்கொடை பெறுவதற்காக தொழிலதிபர் சுதீப்பை சந்திக்கிறாள் நாயகி. அவளைக் காணும் கணப்பொழுதில் - காமுறும் சுதீப், தன்னுடைய பண பலத்தாலும் பாசாங்கு மொழிகளாலும் கவரத்துடிக்கிறான். ஆனால் பிந்துவின் மனதில் நானி இருப்பதை அறிந்து அவனைத் துடிதுடிக்க கொல்கிறான் சுதீப். கொல்லப்பட்ட நானியின் ஆத்மா, ஓர் ஈயின் கருமுட்டைக்குள் நுழைந்து ஈயாக மறுபிறவி எடுக்கிறது.
நானியின் பிரிவால் வாடும் பிந்துவுக்கு ஆறுதல் கூறுவதுபோல் நடித்து அவளை அடையத் துடிக்கிறான் சுதீப். அவனிடமிருந்து நாயகியைக் காப்பாற்றத் துடிக்கும் ஈ, அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை - ரம்மியமான காதல், மெல்லிய சோகம், நயத்தக்க நகைச்சுவை, அசாத்தியமான அதிரடிக் காட்சிகள் மூலம் விறுவிறுப்பாகச் சொல்லுவதே படத்தின் கதை.
நாயகன் நானி, சிறிது நேரமே வந்தாலும் கலகலப்பூட்டுகிறார். தன்னைப் பரிகசித்து கண்டும் காணாமல் இருக்கும் காதலியின் நடவடிக்கைகளை "பாஸிட்டிவ்' ஆக எடுத்துக்கொள்வதன் மூலம் தன்னுடைய தூய்மையான காதலைப் புரிய வைக்கிறார். அவருடைய எல்லை மீறாத இனிமைக் குறும்புகளில் இளமை ஊஞ்சலாடுகிறது.
நாயகி பிந்துவாக வரும் சமந்தா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நானியுடனான "நட்புக்குப் பிந்தைய காதலுக்கு முந்தைய' நிலையை மிக அழகாக பிரதிபலித்திருக்கிறார். சமந்தாவின் நடிப்பு, வசனங்கள், காஸ்ட்யூம், மேக்-அப் போன்றவை அவருடைய கதாபாத்திரத்துக்கு கண்ணியம் கூட்டியுள்ளன. நானியின் இழப்பைத் தாங்க முடியாமல் தவிக்கும்போதும் நானி ஈயாக மறுபிறவி எடுத்ததை அறிந்து மீண்டும் புத்துணர்வு பெறும்போதும் ஈர்க்கிறார். வில்லனைப் பழிவாங்குவதற்காக ஈயாக மாறிய தன்னுடைய காதலனுக்கு தன்னுடைய "மினியேச்சர் ஆர்ட்' திறமை மூலம் உதவுது சுவாரஸ்யம்.
வில்லனாக வரும் கன்னட திரையுலக ஹீரோ சுதீப், ஒட்டுமொத்தப் பார்வையாளர்களையும் கவர்கிறார். அவருடைய அலட்சியமான நடிப்பு, அதற்கேற்ற குரல் வளம், ஈயால் நிம்மதி இழந்து தவிக்கும்போது அவர் செய்யும் "காமெடி பிளஸ் டிராஜடி' விஷயங்கள் ரசிக்க வைக்கின்றன. மறைந்த ரகுவரனைப் போன்று தேர்ந்த நடிப்பைப் பதிவு செய்துள்ளார்.
படத்தில் ஈ செய்யும் காமெடிகள் போதாது என்று இரண்டாம் பாதியில் சந்தானமும் தன் பங்குக்கு கலக்குகிறார். தன்னுடைய வழக்கமான "அப்பாடக்கர்' வகையறா காமெடிகளையெல்லாம் சற்று ஒதுக்கிவிட்டு செறிவான நகைச்சுவையை நிறைவாகக் கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் முடிந்தவுடன் இடம்பெறும் அந்த சில நிமிட காட்சிகள் "போனஸ் காமெடி'.
படத்தின் முக்கிய தூண் ஈ. கிராஃபிக்ஸ் ஈதான் என்றாலும் அந்த எண்ணம் இரண்டு மூன்று நிமிடங்களிலேயே மறைந்துவிடுவது கதை மற்றும் திரைக்கதையின் பலம். படத்தின் நாயகன் ஆரம்பத்திலேயே இறந்துவிட்டாலும் படத்தின் இறுதி வரை அவர் வியாபித்திருக்கும் உணர்வை ஏற்படுத்தியிருப்பதில் திரைக்கதை பளிச்சிடுகிறது.
ஈ என்பது மனிதர்கள் வெறுத்து ஒதுக்கும் ஓர் அருவருக்கத்தக்க ஜந்து என்றாலும் அந்த ஈயையும் ஒரு ஹீரோவாகப் பாவித்து ஆராதிக்கும் அளவுக்கு ரசனையுடன் உருவாக்கி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளும் வகையில் படத்தை எளிமையாகக் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.
இரண்டாம் பாதியில் இடம்பெறும் ஒரு சில காட்சிகளில் தெலுங்கு வாடையைக் குறைத்திருக்கலாம்.
கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை எந்த ஒரு காட்சியிலும் கண்களை உறுத்தாதவாறு காட்சிப்படுத்தியதில் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் "சபாஷ்' பெறுகிறார்கள். கிரேஸி மோகனின் "டைமிங்' வசனங்கள், காதல் காட்சிகளிலும் காமெடி காட்சிகளிலும் வசீகரிக்கின்றன. கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் மரகதமணியின் இசையும் - இதுதான் ஒளிப்பதிவு, இதுதான் இசை - என தனியே முன்னிலைப்படுத்தப்படாமல் இயல்பாய் அமைந்திருப்பது கூடுதல் பலம். வில்லனை ஈ துரத்தும் காட்சிகளில் பின்னணி இசை பிரமாதப்படுத்தியிருக்கிறது. வெங்கடேஸ்வர ராவின் படத்தொகுப்பு படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறது.
என்னதான் கிராஃபிக்ஸ், பிரம்மாண்டம், காஸ்ட்லி லொகேஷன்கள் போன்றவை இருந்தாலும் மனித உணர்வைத் தட்டியெழுப்பும் யதார்த்தமான அதே சமயம் அழுத்தமான காட்சிகளைப் படத்தின் அடிநாதமாக இழையோட விட்டிருப்பதில் தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி.
"ஈ' - ரசிகர்கள் கூட்டம் மொய்க்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் அவனில்லை 2 – விமர்சனம்
» நான் சிவனாகிறேன் – திரை விமர்சனம்
» நான் மகான் அல்ல – திரை விமர்சனம்
» நான் திமிர் பிடித்தவளா? அப்படிபட்ட குடும்பத்திலிருந்து நான் வரவில்லை – ஸ்ருதிஹாசன்
» சீடன் – பட விமர்சனம்
» நான் சிவனாகிறேன் – திரை விமர்சனம்
» நான் மகான் அல்ல – திரை விமர்சனம்
» நான் திமிர் பிடித்தவளா? அப்படிபட்ட குடும்பத்திலிருந்து நான் வரவில்லை – ஸ்ருதிஹாசன்
» சீடன் – பட விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum