தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரம்பக் கஷ்டங்கள்

Go down

ஆரம்பக் கஷ்டங்கள் Empty ஆரம்பக் கஷ்டங்கள்

Post  birundha Sat Mar 23, 2013 4:37 pm

ஆசிரமம் ஆரம்பமாகிச் சில மாதங்களே ஆயிற்று. அதற்குள் நான் எதிர்பார்த்தே இராத வகையில் நாங்கள் சோதனைக்கு ஆளானோம். அமிர்தலால் தக்கரிடமிருந்து பின்வருமாறு ஒரு கடிதம் வந்தது: அடக்கமும் நேர்மையும் உள்ள ஒரு தீண்டாதாரின் குடும்பம் உங்கள் ஆசிரமத்தில் சேர்ந்துகொள்ள விரும்புகிறது. அவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நான் கலக்கமடைந்தேன். தீண்டாதாரின் குடும்பம் ஒன்று, தக்கர் பாபா போன்ற ஒரு முக்கியமானவரிடமிருந்து அறிமுகக் கடிதத்துடன் எங்கள் ஆசிரமத்தில் சேர மனுச் செய்துகொள்ளும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அக்கடிதத்தை என் சகாக்களுக்குக் காட்டினேன். அவர்கள் அதை வரவேற்றார்கள். அமிர்தலால் தக்கருக்குப் பதில் எழுதினேன்.அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே ஆசிரமத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடக்கச் சம்மதிப்பதாக இருந்தால் அக் குடும்பத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று அவருக்குத் தெரிவித்தேன்.

தூதாபாய், அவருடைய மனைவி தானிபென், அப்பொழுது தவழும் குழந்தையாக இருந்த அவர்கள் பெண் லட்சுமி ஆகியவர்களைக் கொண்டது அக்குடும்பம். தூதாபாய் பம்பாயில் உபாத்தியாயராக இருந்தார். விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். நாங்களும் அவர்களை ஏற்றுக்கொண்டோம். ஆனால், அவர்களைச் சேர்த்துக் கொண்டது, ஆசிரமத்திற்கு உதவி செய்து வந்த நண்பர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கி விட்டது. கிணற்றை உபயோகிப்பது சம்பந்தமாக முதலில் கஷ்டம் ஏற்பட்டது. அந்தக் கிணற்றை அந்தப் பங்களாவின் சொந்தக்காரரும் உபயோகித்து வந்தார். அதிலிருந்து தண்ணீர் இறைப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தவர், எங்கள் வாளியிலிருந்து தண்ணீர்த் துளிகள் விழுவதால் தமக்குத் தீட்டுபட்டுப்போகும் என்று கூறி ஆட்சேபித்தார். ஆகவே, எங்களைத் திட்டினார்; தூதாபாயைத் தொந்தரவும் செய்தார். அவர் திட்டுவதையெல்லாம் சகித்துக் கொண்டு, என்ன வந்தாலும் சரி என்று கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கும்படி எல்லோரிடமும் கூறினேன். தாம் திட்டினாலும் நாங்கள் திருப்பித் திட்டுவதில்லை என்பதைக் கண்டதும் அவருக்கே வெட்கமாகப் போய் விட்டது.

எங்களுக்குத் தொந்தரவு கொடுப்பதை விட்டு விட்டார். என்றாலும், எங்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்த உதவியெல்லாம் நின்றுவிட்டன. ஆசிரம விதிகளையெல்லாம் அனுசரிக்கக் கூடிய ஒரு தீண்டாதார் கிடைப்பாரா என்று கேள்வி கேட்ட நண்பர், அப்படிப்பட்ட ஒரு தீண்டாதார் ஆசிரமத்தில் சேர முன்வருவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. பண உதவியெல்லாம் நிறுத்திவிட்டதோடு எங்களைச் சமூக பகிஷ்காரம் செய்வதற்கும் யோசிக்கிறார்கள் என்றும் வதந்திகள் கிளம்பின. இவைகளினால் நாங்கள் கலக்கமடைந்தோம். நாம் பகிஷ்காரம் செய்யப்பட்டுச் சாதாரண வசதிகளெல்லாம் மறுக்கப் பட்டாலும் அகமதாபாத்தைவிட்டு நாம் போய்விடக் கூடாது என்று என் சகாக்களுக்குக் கூறினேன். வெளியேறி விடுவதைவிடத் தீண்டாதாரின் இடத்திலேயே போய் வசித்து, உடலை வருத்தி வேலை செய்வதால் கிடைப்பதைக்கொண்டு வாழ்வதே மேல் என்றும் கூறினேன். நம்மிடம் பணம் இல்லை. அடுத்த மாதச் செலவுக்கு நம்மிடம் ஒன்றும் கிடையாது என்று ஒரு நாள் மகன்லால் காந்தி எனக்கு அறிவித்துவிட்டார். நிலைமை அத்தகைய நெருக்கடியான கட்டத்திற்கு வந்துவிட்டது.

அப்படியானால், தீண்டாதார் வசிக்கும் இடத்திற்கே நாம் போய்விடுவோம் என்று நான் அமைதியோடு பதில் சொன்னேன். இதுபோன்ற சோதனை எனக்கு ஏற்பட்டது இது முதல் தடவை அல்ல. இத்தகைய நிலைமைகளிலெல்லாம் கடைசி நேரத்தில் கடவுளே எனக்கு உதவியை அனுப்பியிருக்கிறார். எங்களுக்கு ஏற்பட்டுவிட்ட பணக் கஷ்டத்தைக் குறித்து மகன்லால் எனக்கு எச்சரிக்கை செய்த பிறகு ஒரு நாள் காலை, குழந்தைகளில் ஒன்று ஓடி வந்து, ஒரு சேத் வெளியில் மோட்டாரில் இருக்கிறார் என்றும், என்னைப்பார்க்க விரும்புகிறார் என்றும் கூறியது. அவரைப் பார்க்க வெளியே போனேன். ஆசிரமத்திற்குக் கொஞ்சம் உதவி செய்ய விரும்புகிறேன். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுவீர்களா? என்று அவர் என்னைக் கேட்டார். நிச்சயமாக ஏற்றுக்கொள்ளுவோம். எங்கள் கையில் இருந்ததெல்லாம் செலவழிந்து போய்விட்ட நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்பதையும் உங்களிடம் கூறுகிறேன் என்றேன்.

நாளை இதே நேரத்தில் இங்கு வருகிறேன். நீங்கள் இருப்பீர்களல்லவா? என்றார். ஆம் என்று நான் சொன்னதும் அவர் போய்விட்டார். அடுத்த நாள், சரியாக அந்த நேரத்தில் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் மோட்டார் வந்து நின்றது. வந்ததற்கு அறிகுறியாகச் சப்தம் கொடுக்கப்பட்டது. குழந்தைகளும் ஓடிவந்து சமாச்சாரத்தைச் சொன்னார்கள். சேத் உள்ளே வரவில்லை; நானே அவரைப் பார்க்க போனேன். அவர் என் கையில் ரூ.13,000-க்கு நோட்டுகளைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். இந்த உதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை. எப்படிப்பட்ட புதிய வகையில் உதவி! அந்தக் கனவான் இதற்கு முன்னால் ஆசிரமத்திற்கு வந்ததே இல்லை. ஒரே ஒரு முறைதான் அவரை நான் சந்தித்திருக்கிறேன் என்று எனக்கு ஞாபகம். உள்ளே வரவும் இல்லை; விசாரிக்கவும் இல்லை! உதவியை மாத்திரம் செய்து விட்டுப் போய்விட்டார். எனக்கு இது ஒப்பற்றதோர் அனுபவம்.

தீண்டாதார் வசிக்கும் இடத்திற்குப் போய்விடுவதை இந்த உதவி தடுத்தது. இனி ஓர் ஆண்டுக்குக் கவலை இல்லை என்று இப்பொழுது உணர்ந்தோம். வெளியில் புயல் இருந்து வந்ததைப் போன்றே ஆசிரமத்திற்குள்ளும் புயல் இருந்து வந்தது. தீண்டாத வகுப்பைச் சேர்ந்த நண்பர்கள் தென்னாப்பிரிக்காவில் என் வீட்டிற்கு வந்து இருப்பதுடன் என்னுடன் சாப்பிடுவதும் வழக்கமாக இருந்தது. இருந்தும் இங்கே ஆசிரமத்தில் தீண்டாத நண்பர்களைச் சேர்த்துக்கொண்டது என் மனைவிக்கும் மற்ற பெண்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. தானி பென்னிடம் அவர்கள் கொண்டிருந்த வெறுப்பை, அல்லது அசிரத்தையை என் காதுகளும் கண்களும் எளிதில் கண்டு கொண்டன. பணக் கஷ்டம்கூட எனக்கு அவ்வளவு கவலையை உண்டுபண்ணவில்லை. ஆனால், உள்ளுக்குள்ளேயே இருந்த இப்புயலை என்னால் சகிக்க முடியவில்லை. தானி பென் ஒரு சாதாரணப்பெண். தூதாபாய் கொஞ்சம் படிப்பு உள்ளவர்; அதோடு நல்ல அறிவும் உள்ளவர்.

அவருடைய பொறுமை எனக்குப் பிடித்திருந்தது. சில சமயங்களில் அவர் கோபமடைந்து விடுவதும் உண்டு. என்றாலும், மொத்தத்தில் அவருடைய சகிப்புத்தன்மை என் மனத்தைக் கவர்ந்தது. சில்லறை அவமதிப்புகளையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம் என்று அவரைக் கேட்டுக்கொண்டேன். இதற்கு அவர் உடன்பட்டது மாத்திரம் அல்ல, அவர் மனைவியையும் அதேபோலப் பொறுமையுடன் இருக்கும்படி செய்தார். இந்தக் குடும்பத்தைச் சேர்த்துக் கொண்டது, ஆசிரமத்திற்கு சிறந்ததொரு படிப்பினையாயிற்று. ஆசிரமம் தீண்டாமையைப் பாராட்டாது என்பதை ஆரம்பத்திலேயே உலகிற்கு எடுத்துக் காட்டினோம். ஆசிரமத்திற்கு உதவ விரும்பியவர்களுக்கு இவ்விதம் எச்சரிக்கை செய்துவிட்டோம். இவ் வழியில் ஆசிரமத்தின் வேலைகள் அதிக அளவுக்குச் சுலபமாகி விட்டன. தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே போன ஆசிரமத்தின் செலவுகளுக்கு எல்லாம், உண்மையில் வைதிகர்களான ஹிந்துக்களே பணம் கொடுத்து வந்தார்கள், இந்த உண்மை, தீண்டாமையின் அடிப்படையே ஆட்டங்கண்டு விட்டது என்பதற்குத் தெளிவான அறிகுறியாகவும் இருக்கக் கூடும்.

உண்மையில் இதற்கு மற்றும் பல சான்றுகளும் உண்டு. என்றாலும், தீண்டாதாருடன் சேர்ந்து சாப்பிடும் அளவுக்குகூடப் போய்விடும் ஓர் ஆசிரமத்திற்கு உதவி செய்ய நல்ல ஹிந்துக்கள் தயங்குவதில்லை என்பது மிகச் சிறந்த சான்றாகும். இந்த விஷயத்தைப் பற்றிய அநேக சமாச்சாரங்களைக் கூறாமல் விட்டுவிட்டு மேலே போக வேண்டி இருப்பதற்காக வருந்துகிறேன். முக்கியமான இவ்விஷயத்தின் மீது எழுந்த கஷ்டமான பிரச்னைகளையெல்லாம் எப்படிச் சமாளித்தோம்? எதிர்பாராத சிலகஷ்டங்களையெல்லாம் எவ்விதம் சமாளித்துச் சென்றோம் என்பன போன்ற பல விஷயங்களை, சத்திய சோதனையில் விவரிப்பதற்குப் பொறுத்தமானவைகளை, கூறாமல் விட்டுவிட்டே நான் மேலே போக வேண்டியிருக்கிறது. இனி வரும் அத்தியாயங்களிலும் இதேபோன்ற குறைகள் இருக்கும். முக்கியமான விவரங்களை நான் விட்டுவிடவே வேண்டியிருக்கும். ஏனெனில், இவ்வரலாற்றில் சம்பந்தமுடையவர்களில் அநேகர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களைக் கூறும்போது, அவர்களுடைய அனுமதியைப் பெறாமல் அவர்கள் பெயரை உபயோகிப்பது சரியல்ல.

அவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதென்பதோ, சம்பந்தப்பட்ட அத்தியாயங்களை அப்போதைக்கப்போது அவர்களுக்குக் காட்டிச் சரிபார்த்து வெளியிடுவதோ, அனுபவ சாத்தியமானதும் அன்று. மேலும் அத்தகைய முறையை அனுசரிப்பது இந்தச் சுய சரிதையின் எல்லைக்குப் புறம்பான காரியமும் ஆகும். ஆகையால், மீதமிருக்கும் வரலாறு, சத்தியத்தை நாடுவோருக்கு மிக முக்கியமானது என்பதே என் கருத்தாயினும், தவிர்க்க முடியாத விலக்குகளுடனேயே அதைக் கூறவேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறேன். என்றாலும், கடவுள் அருள் இருந்தால், இவ்வரலாற்றை ஒத்துழையாமை நாட்கள் வரைக்கும் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதே என் ஆசையும் நம்பிக்கையுமாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum