தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒப்பந்தத் தொழிலாளி முறை ஒழிப்பு

Go down

ஒப்பந்தத் தொழிலாளி முறை ஒழிப்பு Empty ஒப்பந்தத் தொழிலாளி முறை ஒழிப்பு

Post  birundha Sat Mar 23, 2013 4:37 pm

வெளிப் புயல்களையும் உட்புயல்களையும் ஆரம்பத்திலேயே சமாளிக்க வேண்டியதாயிருந்த ஆசிரமத்தின் கதையை இப்போதைக்கு நிறுத்திவிட்டு அப்பொழுது என் கவனத்தைக் கவர்ந்திருந்த மற்றொரு விஷயத்தைக் கொஞ்சம் கவனிப்போம். ஐந்து ஆண்டுகளுக்கும், அதற்குக் குறைவான காலத்திற்கும் வேலை செய்வது என ஒப்பந்தம் செய்து கொண்டு, அதன்பேரில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களே ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேட்டாலுக்கு ஒப்பந்தப்படி சென்றிருந்தவர்களுக்கு விதித்திருந்த மூன்று பவுன் வரி, 1914-இல் ஏற்பட்ட ஸ்மட்ஸ்-காந்தி ஒப்பந்தத்தின்படி ரத்தாயிற்று. என்றாலும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விஷயமே கவனிக்க வேண்டியதாக இருந்தது. ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ரத்துச் செய்துவிட வேண்டும் என்று 1916 மார்ச்சில் பண்டித மதன் மோகன மாளவியா இம்பீரியல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை லார்டு ஹார்டிஞ்சு ஏற்றுக் கொண்டார். அதோடு, அம்முறையை, உரிய காலத்தில் ரத்துச் செய்து விடுவதாகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தினிடமிருந்து வாக்குறுதி கிடைத்திருக்கிறது என்றும் அறிவித்தார்.

ஆயினும் இவ்விதமான திட்டமில்லாத ஒரு வாக்குறுதியைக் கொண்டு இந்தியா திருப்தி அடைந்துவிட முடியாது என்றும், அம்முறையை உடனே ரத்துச் செய்துவிட வேண்டுமெனக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றும் கருதினேன். அசிரத்தையினாலேயே அம்முறையை இந்தியா சகித்து வந்திருக்கிறது; அதற்குப் பரிகாரம் வேண்டும் என்று மக்கள் வெற்றிகரமாகக் கிளர்ச்சி செய்ய வேண்டிய சமயம் வந்துவிட்டது என்றும் கருதினேன். தலைவர்களில் சிலரைச் சந்தித்துப் பேசினேன்; பத்திரிக்கைகளுக்கும் எழுதினேன். அம்முறையை உடனே ரத்துச் செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரமாகவே பொதுஜன அபிப்பிராயம் இருக்கிறது என்பதையும் கண்டேன். சத்தியாக்கிரகம் செய்வதற்கு இது ஏற்ற விசயமா? ஏற்ற விசயமே என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால், அதை எம் முறையில் நடத்துவது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. இதற்கிடையில் வைசிராய், முடிவாக ரத்துச் செய்வது என்பதன் பொருள் இன்னதென்பதைக் குறித்து எந்த ஒளிவு மறைவும் செய்யவில்லை. இதற்கு மாறானதொரு ஏற்பாட்டைக் கொண்டு வருவதற்கு நியாயமாக வேண்டிய காலத்திற்குப் பிறகு அம்முறை ரத்துச் செய்யப்படும் என்று அவர் கூறினார். ஆகவே, அம்முறையை உடனே ரத்து செய்வதற்கு ஒரு மசோதாவைக் கொண்டுவரப் பண்டித மாளவியாஜி 1917 பிப்ரவரியில் அனுமதி கோரினார்.

அனுமதி கொடுக்க லார்டு செம்ஸ்போர்டு மறுத்து விட்டார். இந்தியா முழுவதிலும் இதைக் குறித்துக் கிளர்ச்சி செய்வதற்காக நான் சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டியதாயிற்று. கிளர்ச்சியை ஆரம்பிப்பதற்கு முன்னால் வைசிராயைக் கண்டு பேசுவதே முறை என்று கருதினேன். கண்டு பேச விரும்புவதாக எழுதினேன். வைசிராயும் உடனே அனுமதி கொடுத்தார். ஸ்ரீமேபி (இப்பொழுது ஸர் ஜான் மேபி) அப்பொழுது வைசிராயின் அந்தரங்கக் காரியதரிசி. அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டேன். லார்டு செம்ஸ்போர்டுடன் நான் பேசியது திருப்திகரமாகவே இருந்தது. திட்டமாகச் சொல்லாமல், தாம் உதவியாக இருப்பதாக அவர் வாக்களித்தார். என் சுற்றுப் பிரயாணத்தைப் பம்பாயிலிருந்து ஆரம்பித்தேன். ஏகாதிபத்தியப் பிரஜாவுரிமைச் சங்கத்தின் ஆதரவில் அங்கே ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த ஜஹாங்கீர் பெடிட் ஒப்புக்கொண்டார். அக்கூட்டத்தில் கொண்டுவர வேண்டிய தீர்மானத்தைத் தயாரிப்பதற்காக அச்சங்கத்தின் நிர்வாகக் கமிட்டி முதலில் கூடியது. டாக்டர் ஸ்டான்லி ரீட், (இப்பொழுது ஸர்) ஸ்ரீலல்லுபாய் சாமளதாஸ், ஸ்ரீநடராஜன், பெடிட் ஆகியவர்கள் கமிட்டிக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் முறையை எந்தக் காலத்திற்குள் நீக்கிவிட வேண்டும் என்று சர்க்காரைக் கேட்பது என்பதை நிர்ணயிப்பதைப் பற்றியே விவாதம் நடந்தது.

மூன்று யோசனைகள் கூறப்பட்டன. முடிந்த வரையில் சீக்கிரமாக ரத்துச் செய்வது, ஜூலை 31-ஆம் தேதிக்குள் ரத்துச் செய்வது, உடனே ரத்துச் செய்வது என்பவையே அந்த மூன்று யோசனைகள். குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் அரசாங்கம் நமது கோரிக்கைக்கு இணங்கத் தவறிவிட்டால் அதன் பிறகு என்ன செய்வது என்பதை நாங்கள் அப்போது முடிவு செய்ய இயலும் என்ற நிலையில், திட்டமான தேதி ஒன்றைக் குறிப்பிட்டுவிட வேண்டும் என்று கூறினேன். உடனே ரத்துச் செய்துவிட வேண்டும் என்பதை ஸ்ரீலல்லுபாய் கூறினார். ஜூலை 31-ஆம் தேதியைவிட மிகக் குறைந்த காலத்தையே உடனே என்ற சொல் குறிக்கிறது என்றார் அவர். உடனே என்ற சொல்லை மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று நான் விளக்கினேன். அவர்கள் ஏதாவது செய்யும்படி பார்க்கவேண்டும் என்று நாம் விரும்பினால், இன்னும் திட்டவட்டமான சொல் அவர்களுக்கு வேண்டும் என்றேன் உடனே என்ற சொல்லுக்கு ஒவ்வொருவரும் அவரவர்கள் இஷ்டம்போல் வியாக்கியானம் செய்துகொள்ளுவார்கள். அரசாங்கம் ஒரு வழியிலும், மக்கள் மற்றொரு வழியிலும் பொருள் கொள்ளுவர். ஜூலை 31-ஆம் தேதிக்குள் என்பதை யாரும் தவறாகப் புரிந்துகொண்டு விடுவதற்கில்லை. அதே தேதிக்குள் ஒன்றும் செய்யப்படவில்லையென்றால், நாம் மேற்கொண்டும் செய்ய வேண்டியதைக் கவனிக்க முடியும். என்னுடைய வாதத்தில் நியாயம் இருப்பதை டாக்டர் ரீட் கண்டுகொண்டார். முடிவாக ஸ்ரீலல்லுபாயும் சம்மதித்தார். அம்முறையை ரத்துச் செய்வதை அறிவித்துவிட வேண்டும். என்பதற்கு ஜூலை 31-ஆம் தேதியை இறுதியாக நிர்ணயித்தோம். அதேமாதிரி பொதுக்கூட்டத்திலும் ஒரு தீர்மானம் நிறைவேறியது. இந்தியா முழுவதிலும் நடந்த பொதுக்கூட்டங்களும் இதேபோன்று தீர்மானம் செய்தன.

வைசிராயிடம் பெண்கள் தூதுகோஷ்டி ஒன்று போவதற்கு ஏற்பாடு செய்வதில் முழுச் சிரத்தையையும் ஸ்ரீமதி ஜெய்ஜி பெடிட் எடுத்துக்கொண்டார். பம்பாயிலிருந்து தூது சென்ற பெண்களில் லேடிடாட்டா, காலஞ்சென்ற தில்ஷாத் பீகம் ஆகியோரின் பெயர்கள் எனக்கு ஞாபகம் இருக்கின்றது. அத் தூது கோஷ்டி சென்றதால் அதிக நன்மை ஏற்பட்டது. நம்பிக்கை ஏற்படும் வகையில் வைசிராய் அத் தூது கோஷ்டிக்குப் பதில் சொன்னார். கராச்சி, கல்கத்தா முதலிய அநேக இடங்களுக்கு நான் சென்றேன். அங்கெல்லாம் சிறப்பான பொதுக்கூட்டங்கள் நடந்தன. எங்கும் எல்லையற்ற உற்சாகம் இருந்தது. இது போலெல்லாம் இருக்கும் என்று, கிளர்ச்சியை ஆரம்பித்தபோது நான் எதிர் பார்க்கவில்லை. அந்த நாளில் நான் தனியாகவே பிரயாணம் செய்தேன். ஆகையால், அற்புதமான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. ரகசியப் போலீஸார் என் பின்னால் வந்துகொண்டே இருந்தனர். ஆனால், ஒளிப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லாததால், அவர்கள் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. அவர்களுக்கும் நான் எந்த விதமான கஷ்டமும் கொடுக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் அப்போது மகாத்மா பட்ட முத்திரையைப் பெற்றுவிட வில்லை. ஆனால், என்னைத் தெரிந்த இடங்களில் மக்கள் அப்பெயர் சொல்லிக் கோஷிப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. ஒரு சமயம் ரகசியப் போலீஸார் பல ஸ்டேஷன்களிலும் என்னைத் தொந்தரவு செய்துவிட்டார்கள்.

என்னிடமிருந்த டிக்கெட்டைக் காட்டச் சொல்லி, அதன் நம்பரைக் குறித்துக் கொண்டனர். நானோ, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் சொல்லி வந்தேன். என்னுடன் அந்த வண்டியில் இருந்த பிரயாணிகள், நான் யாரோ சாது அல்லது பக்கிரி என்று எண்ணிக்கொண்டு விட்டனர். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நான் தொந்தரவு செய்யப்படுகிறேன் என்பதைக் கண்டதும் அவர்கள் ஆத்திரமடைந்து ரகசியப் போலீஸாரைத் திட்டினார்கள்: அனாவசியமாக அந்தச் சாதுவை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? என்றும் கேட்டனர். இந்தப் பாதகர்களிடம் உங்கள் டிக்கெட்டைக் காட்டாதீர்கள் என்றும் அவர்கள் எனக்குக் கூறினர். என்னுடைய டிக்கெட்டை அவர்களிடம் காட்டுவதில் எனக்குக் கஷ்டம் எதுவும் இல்லை. அவர்கள், அவர்களுடைய கடமையைச் செய்கிறார்கள் என்று நான் சாந்தமாக அவர்களுக்குச் சமாதானம் கூறினேன். ஆனால், பிரயாணிகள் சமாதானம் அடையவில்லை. என்னிடம் மேலும் மேலும் அனுதாபம் கொண்டார்கள். ஒரு பாவமும் அறியாதவர்கள் இவ்விதம் தொந்தரவு செய்யப்படுவதைப் பலமாகக் கண்டித்தார்கள். ஆனால், ரகசியப் போலீஸாரின் தொல்லை பெரிய தொல்லை அல்ல. உண்மையான கஷ்டமெல்லாம் மூன்றாம் வகுப்புப் பிரயாணந்தான். லாகூரிலிருந்து டில்லிக்குப் போன போதுதான் எனக்கு மிகுந்த கஷ்டமான அனுபவம் ஏற்பட்டது. கராச்சியிலிருந்து லாகூர் வழியாகக் கல்கத்தாவுக்குப் போய்க் கொண்டிருந்தேன்.

லாகூரில் வண்டி மாறி ஏற வேண்டும். வண்டியில் கொஞ்சமும் இடம் கிடைக்கவில்லை. வண்டி நிறையக் கூட்டம் இருந்தது. வண்டிக்குள் ஏற முடிந்தவர்கள், இடித்துத் தள்ளிக் கொண்டு பலவந்தமாக ஏறியவர்களே. கதவுகள் பூட்டப்பட்டிருந்த வண்டிகளில் ஜன்னல் வழியாகச் சிலர் ஏறிக் குதித்தனர். பொதுக் கூட்டத்திற்குக் குறிப்பிட்டிருந்த தேதியில் நான் கல்கத்தாவுக்குப் போய்ச் சேர்ந்தாக வேண்டும். இந்த வண்டியை நான் விட்டு விட்டால் உரிய காலத்தில் நான் கல்கத்தா போய்ச் சேர முடியாது. உள்ளே புகுந்துவிடமுடியும் என்ற நம்பிக்கையையெல்லாம் விட்டுவிட்டேன். நான் ஏறிக்கொள்ளுவதை அனுமதிக்க யாரும் தயாராயில்லை. நான் இவ்விதம் திண்டாடு வதைக் கண்ட ஒரு போர்ட்டர், என்னிடம் வந்து, எனக்குப் பன்னிரெண்டு அணாக் கொடுங்கள். நான் உங்களுக்கு ஓர் இடம் தேடித் தருகிறேன் என்றார். சரி; எனக்கு இடம் தேடிக் கொடுத்து விட்டால் உமக்கு பன்னிரண்டு அணா தருகிறேன் என்றேன். அந்த வாலிபர், வண்டி வண்டியாகப் போனார். பிரயாணிகளைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால், ஒருவர்கூட அவர் கெஞ்சலுக்குச் செவி சாய்க்கவில்லை. ரெயில் புறப்படவிருந்த சமயத்தில் சில பிரயாணிகள், இங்கே இடம் கிடையாது; வேண்டுமானால், அவரை உள்ளே தள்ளு; அவர் நின்று கொண்டுதான் வரவேண்டும் என்றார்கள். என்ன சொல்லுகிறீர்கள்? என்று வாலிபப் போர்ட்டர் என்னைக் கேட்டார். நான் உடனே சம்மதித்தேன். என்னை அவர் அப்படியே தூக்கி ஜன்னல் வழியாக உள்ளே தள்ளினார். இவ்வாறு உள்ளே புகுந்தேன்; போர்ட்டரும் பன்னிரெண்டு அணா சம்பாதித்துவிட்டார்.

இரவு பெரும் சோதனையாகிவிட்டது. மற்றப் பிரயாணிகள் எப்படியோ சமாளித்து உட்கார்ந்திருந்தார்கள். மேல் தட்டின் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு இரண்டு மணி நேரம் நின்று கொண்டே இருந்தேன். இதன் நடுவில் சில பிரயாணிகள் இடைவிடாமல் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர். கீழே உட்காருகிறதுதானே? என்று என்னைக் கேட்டனர். உட்காருவதற்கு இடமே இல்லை என்று அவர்களுக்குச் சமாதானம் கூற முயன்றேன். அவர்கள் மேல் தட்டுகளில் நன்றாகக் காலை நீட்டிக்கொண்டு படுத்திருந்தபோதிலும், நான் நின்று கொண்டிருப்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை. என்னை ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். நானும் சளைக்காமல் சாந்தமாக அவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டே வந்தேன். கடைசியில் ஒருவாறு சமாதானம் அடைந்தார்கள். அவர்களில் சிலர், என் பெயர் என்ன என்று விசாரித்தனர். நான் அதைச் சொன்னதும் வெட்கமடைந்தனர். என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு எனக்கு இடமும் ஒளித்துத் தந்தார்கள். இவ்விதம் பொறுமைக்குப் பலன் கிடைத்தது. நான் அதிகக் களைப்படைந்து விட்டேன். தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. உதவி மிகவும் தேவையாக இருந்த நேரத்தில் கடவுள் உதவியை அனுப்பினார். இவ்விதமாக ஒருவாறு டில்லி சேர்ந்தேன்; பின்னர் கல்கத்தாவுக்குப்போய்ச் சேர்ந்தேன்.

கல்கத்தாப் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த காஸிம்பஜார் மகாராஜாவின் விருந்தினனாகத் தங்கியிருந்தேன். கராச்சியில் இருந்ததைப் போன்றே இங்கும் மக்கள் அளவில்லாத உற்சாகம் கொண்டு இருந்தனர். அக்கூட்டத்திற்கு அநேக ஆங்கிலேயர்களும் வந்திருந்தார்கள். இந்தியாவிலிருந்து ஒப்பந்தத்தின் பேரில் தொழிலாளரை அனுப்புவது நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னாலேயே அரசாங்கம் அறிவித்துவிட்டது. இம் முறையை ஆட்சேபித்து நான் முதல் மனுவைத் தயாரித்தது 1894-ஆம் ஆண்டில்; இம்முறையைக் குறித்து ஸர்ஹன்டர் கூறி வந்ததுபோல் பாதி அடிமைத்தனமான இது ஒரு நாளைக்கு ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று நான் அப்பொழுதே நம்பினேன். 1894-இல் ஆரம்பமான கிளர்ச்சிக்கு உதவி செய்தவர்கள் அநேகர். ஆனால், இம்முறையை ஒழிப்தற்குச் சத்தியாக் கிரகத்தை ஆரம்பிப்பது என்ற உறுதியே அது சீக்கிரத்தில் ஒழியும் படி செய்துவிட்டது என்பதை நான் சொல்லாமல் இருப்பதற்கில்லை. இக்கிளர்ச்சியைப் பற்றிய விவரங்களையும் அதில் யார் பங்கு எடுத்துக் கொண்டார்கள் என்பதுபற்றியும் அறிவதற்கு நான் எழுதிய தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம் என்ற நூலை வாசகர்கள் படிக்கவும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum