தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மறக்க முடியாத அந்த வாரம்! - 2

Go down

மறக்க முடியாத அந்த வாரம்! - 2 Empty மறக்க முடியாத அந்த வாரம்! - 2

Post  birundha Sat Mar 23, 2013 4:28 pm

கமிஷனர் ஸ்ரீ கிரிபித்தின் காரியாலயத்திற்குச் சென்றேன். அக்காரியாலயத்திற்குப் போகும் மாடிப் படிக்கட்டுகளிலெல்லாம் சிப்பாய்கள், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் முற்றும் ஆயுதபாணிகளாக இருந்ததைக் கண்டேன். ராணுவ நடவடிக்கைக்குத் தயாராக இருப்பது போல அவர்கள் இருந்தனர். தாழ்வாரத்திலும் சிப்பாய்கள் அதிகம் இருந்தார்கள். உள்ளே செல்ல என்னை அனுமதித்தனர். நான் உள்ளே சென்றபோது ஸ்ரீ கிரிபித்துடன் ஸ்ரீ பௌரிங்கும் உட்கார்ந்திருந்ததைக் கண்டேன். நான் நேரில் கண்ட காட்சிகளையெல்லாம் கமிஷனருக்கு விவரித்துச் சொன்னேன். அவர் பின்வருமாறு சுருக்கமாகப் பதில் கூறினார்: ஊர்வலம் கோட்டைக்குப் போனால், அங்கே நிச்சயமாகக் கலகம் நேர்ந்திருக்குமாகையால், கோட்டையை நோக்கி ஊர்வலம் போவதை நான் விரும்பவில்லை. கேட்டுக் கொள்ளுவதற்குக் கூட்டத்தினர் செவிசாய்க்க மாட்டார்கள் என்பதைக் கண்டேன். ஆகையால், கூட்டத்திற்குள் புகுந்து தாக்கும்படி குதிரைப்படையினருக்கு நான் உத்தரவிடுவது அவசியமாயிற்று. அதற்கு நான் ஆனால் அதன் விளைவு என்னவாகும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவே வேண்டுமே. குதிரைகள் மக்களை மிதித்தே தீரும். அந்தக் குதிரைப் படையை அனுப்பியிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றே நினைக்கிறேன் என்றேன்.

ஸ்ரீ கிரிபித் கூறியதாவது: அதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. உங்கள் உபதேசத்தினால் மக்களிடையே என்ன பலன் ஏற்படும் என்பதை உங்களைவிடப் போலீஸ் அதிகாரிகளாகிய நாங்கள் நன்கு அறிவோம். ஆரம்பத்திலேயே கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லையென்றால் நிலைமை மீறிப் போய்விடும். உங்கள் கட்டுக்கும் ஜனங்கள் அடங்காதவர்களாகப் போய்விடுவது நிச்சயம் என்பதை உங்களுக்குச் சொல்லுகிறேன். சட்டத்தை மீறி நடப்பதென்பது வெகு சீக்கிரத்தில் அவர்களுக்குப் பிடித்தமான தாகிவிடும். ஆனால், அமைதியாக இருக்க வேண்டிய கடமையை அவர்களால் தெரிந்துகொள்ள முடியாது. உங்களுடைய நோக்கங்கள் நல்லவையே என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் பொதுஜனங்கள் அவற்றைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய இயற்கையான சுபாவத்தை அனுசரித்துத்தான் அவர்கள் நடப்பார்கள். இதில்தான் உங்கள் கருத்துக்கு நான் மாறுபடுகிறேன். பொதுஜனங்கள் இயற்கையாகவே அமைதியானவர்களே அன்றிப் பலாத்கார சுபாவம் உடையவர்கள் அல்ல என்றேன். இவ்வாறு நீண்ட நேரம் விவாதித்தோம். முடிவாகக் கிரிபித், உங்கள் போதனைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்பதை நீங்கள் நிச்சயமாகத் தெரிந்துகொள்ளுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். எனக்கு நிச்சயமாகத் தெரிந்தால் சாத்விகச் சட்ட மறுப்பை நான் நிறுத்தி வைத்துவிடுவேன் என்றேன். அப்படியா சொல்லுகிறீர்கள்? நீங்கள் விடுதலையானதுமே பாஞ்சாலத்திற்குப் போவீர்கள் என்று ஸ்ரீ பௌரிங்கிடம் கூறினீர்களே என்று ஸ்ரீ கிரிபித் கேட்டார்.

ஆம். அடுத்த ரெயிலிலேயே புறப்பட்டுவிட விரும்பினேன். ஆனால், இன்று அது ஆகாத காரியம். நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களாயின், உங்கள் போதனைகளை மக்கள் கேட்கவில்லை என்ற நிச்சயம் உங்களுக்குக் கட்டாயம் ஏற்படும். அகமதாபாத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அமிர்தசரஸில் என்ன நடந்திருக்கிறது? எல்லா இடங்களிலுமே மக்கள் வெறி கொண்டுவிட்டார்கள். எல்லா விவரங்களும் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை. சில இடங்களில் தந்திக் கம்பிகள் அறுக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் கலவரங்களுக்கெல்லாம் பொறுப்பு உங்களையே சாரும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார், ஸ்ரீ கிரிபித். அதற்கு நான் பின்வருமாறு கூறினேன்: அவ்வாறு நான் கண்டால், அதன் பொறுப்பைத் தயங்காமல் நான் ஏற்றுக் கொள்ளுவேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். ஆனால், அகமதாபாத்தில் கலவரங்கள் நடந்தன என்று நான் கண்டால் மிகவும் மனவேதனை அடைவதோடு ஆச்சரியமும் படுவேன். அமிர்தசரஸில் நடந்ததுபற்றி நான் எதுவும் சொல்லுவதற்கில்லை. அங்கே நான் போனதே இல்லை.

அங்கே யாருக்கும் என்னைத் தெரியாது. ஆனால், பாஞ்சாலத்தைப் பற்றியும் கூட ஒரு விஷயத்தை நான் நிச்சயமாக அறிவேன். பாஞ்சாலத்திற்குள் நான் போவதைப் பாஞ்சால அரசாங்கம் தடுக்காமல் இருந்திருக்குமாயின், அங்கே அமைதி நிலவும்படி செய்வதற்கு நான் பெருமளவு உதவியாக இருந்திருப்பேன். என்னைத் தடுத்ததன் மூலம் அனாவசியமாக மக்களுக்கு ஆத்திரம் மூட்டிவிட்டார்கள். இவ்விதம் மேலும் மேலும் விவாதித்துக்கொண்டே போனோம். இருவர் கருத்தும் ஒத்துப்போவதற்குச் சாத்தியமே இல்லை. சௌபாத்தியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி, அமைதியாக இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளுவது என்று இருக்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு விடை பெற்றுக் கொண்டேன். சௌபாத்திக் கடற்கரையில் பொதுக் கூட்டம் நடந்தது. அகிம்சையின் கடமையைக் குறித்தும், சத்தியாக்கிரகத்தின் எல்லைகளைக் குறித்தும், விரிவாக எடுத்துக் கூறினேன். முக்கியமாகச் சத்தியாக்கிரகம் உண்மையோடிருப்பவர்களுக்கே ஆயுதம். சத்தியாக்கிரகி, அகிம்சையை அனுசரிக்கப் பிரதிக்ஞை செய்துகொண்டிருக்கிறான். இதை மக்கள் எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் அனுசரித்தாலன்றிப் பொதுஜன சத்தியாக்கிரகத்தை நான் நடத்த முடியாது என்றும் சொன்னேன்.

அகமதாபாத்தில் கலவரங்கள் நடந்ததாக அனுசூயா பென்னுக்கும் செய்திகள் கிடைத்தன. அவரையும் கைது செய்து விட்டார்கள் என்று யாரோ வதந்தியைக் கிளப்பி விட்டார்கள். அவர் கைதானார் என்ற வதந்தியைக் கேட்டு மில் தொழிலாளர்கள் வெறி கொண்டு வேலை நிறுத்தம் செய்ததோடு பலாத்காரச் செயல்களையும் செய்து விட்டார்கள். ஒரு சார்ஜண்டு அடித்துக் கொல்லப்பட்டு விட்டார். நான் அகமதாபாத்துக்குச் சென்றேன். நதியாத் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் தண்டவாளங்களைப் பெயர்த்துவிட முயற்சிகள் நடந்தன என்றும், வீரம்காமில் அரசாங்க அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும், அகமதாபாத்தில் ராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும் அறிந்தேன். பொதுஜனங்கள் பயப்பிராந்தியில் இருந்தனர். பலாத்காரச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டு விட்டார்கள். அவர்கள் அதற்கு வட்டியும் சேர்த்து அனுபவிக்கும்படி செய்யப்பட்டுவிட்டனர். கமிஷனர் ஸ்ரீ பிராட்டிடம் என்னை அழைத்துக்கொண்டு போவதற்காக ஒரு போலீஸ் அதிகாரி ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருந்தார். கோபத்தினால் அவர் துடிதுடித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவரிடம் சாந்தமாகவே பேசினேன்.

நடந்து விட்ட கலவரங்களுக்காக என் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். ராணுவச் சட்டம் அனாவசியமானது என்று நான் சொன்னதோடு, அமைதியை நிலை நாட்டுவதற்கான முயற்சிகளிலெல்லாம் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் சொல்லி, சபர்மதி ஆசிரம மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதிக்கும்படியும் கேட்டேன். இந்த யோசனை அவருக்குப் பிடித்திருந்தது. பொதுக்கூட்டமும் நடந்தது. அது ஏப்ரல் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன். அன்றோ, அதற்கு மறுநாளோ, ராணுவச் சட்ட ஆட்சியும் ரத்தாயிற்று. பொதுக்கூட்டத்தில் பேசுகையில் மக்கள் தாங்கள் செய்து விட்ட தவறை உணரும்படி செய்ய முயன்றேன். அவர்களுடைய செய்கைகளுக்குப் பிராயச்சித்தமாக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்றும் தெரிவித்தேன். அதேபோல் ஒரு நாளைக்கு உண்ணாவிரதம் இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டேன். பலாத்காரச் செயல்களைச் செய்துவிட்டவர்கள், தங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு யோசனை கூறினேன். என்னுடைய கடமை என்ன என்பது பட்டப்பகல் போல் எனக்கு விளங்கியது. அகமதாபாத் தொழிலாளர்களிடையே நான் அதிக காலம் செலவிட்டிருக்கிறேன்.

அவர்களுக்குச் சேவையும் செய்திருக்கிறேன். அவர்களிடமிருந்து சிறந்த காரியங்களை நான் எதிர்பார்த்திருக்கும் போது, அத்தொழிலாளர்கள் கலகங்களில் ஈடுபட்டது என்னால் சகிக்க முடியாததாயிற்று. அவர்களுடைய குற்றத்தில் எனக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்தேன். மக்கள் தாங்கள் செய்துவிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட வேண்டும் என்று அவர்களுக்கு நான் கூறியதுபோலவே, அக்குற்றங்களை மன்னித்து விடுமாறு அரசாங்கத்திற்கும் யோசனை கூறினேன். இரு சாரரும் என் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. காலஞ்சென்ற ஸர் ராமாபாயும், அகமதாபாத் நகரவாசிகள் சிலரும், என்னிடம் வந்து சத்தியாக்கிரகத்தை நிறுத்தி வைக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அமைதியின்மையின் படிப்பினையை மக்கள் அறிந்துகொள்ளும் வரையில் சத்தியாக்கிரகத்தை நிறுத்தி வைப்பதென்று நான் தீர்மானித்துக் கொண்டு விட்டதால், அவர்களுடைய வேண்டுகோளுக்கே அவசியமில்லை. அந்த நண்பர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பினர். ஆனால், நான் செய்துவிட்ட இத்தீர்மானத்தைக் குறித்துத்
துக்கப்பட்டவர்களும் உண்டு.

எல்லா இடங்களிலுமே அமைதி நிலவவேண்டும் என்று நான் எதிர்பார்த்தால், சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்தாக வேண்டிய நிபந்தனை என்று நான் அதைக் கருதுவதானால், பொதுஜன சத்தியாக்கிரகம் என்பதே அசாத்தியமானதாகி விடும் என்று அவர்கள் கருதினார்கள். அவர்களுடன் மாறுபட்ட கருத்தை நான் கொள்ள வேண்டியிருந்ததற்காக வருந்தினேன். நான் யாருடன் இருந்து வேலை செய்து வந்தேனோ அவர்கள், அகிம்சைக்கும் துன்பங்களை அனுபவிப்பதற்கும் தயாராயிருப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தவர்களே, அகிம்சையை அனுசரிக்க முடியவில்லையென்றால், சத்தியாக்கிரகம் நிச்சயமாகச் சாத்தியமில்லாததே. சத்தியாக்கிரகத்திற்கு மக்களை நடத்திச் செல்ல விரும்புகிறவர்கள், அகிம்சையின் குறிப்பிட்ட எல்லைக்குள் மக்களை வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியான கருத்துக் கொண்டிருந்தேன். அதே அபிப்பிராயமே எனக்கு இன்றைக்கும் இருந்துவருகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum