தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பசுப் பாதுகாப்புக்கு பதிலாகக் கிலாபத்?

Go down

பசுப் பாதுகாப்புக்கு பதிலாகக் கிலாபத்? Empty பசுப் பாதுகாப்புக்கு பதிலாகக் கிலாபத்?

Post  birundha Sat Mar 23, 2013 4:26 pm

பாஞ்சாலத்தில் நடந்த அட்டூழியங்களைத் தற்சமயத்திற்கு நாம் நிறுத்திவிட்டு மற்ற விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பாஞ்சாலத்தில் நடந்த டயர் ஆட்சிக் கொடுமைகளைக் குறித்துக் காங்கிரஷ் விசாரணையைத் தொடங்கிய அச்சமயத்தில் எனக்கு ஓர் அழைப்பு வந்தது. கிலாபத் பிரச்சனையைக் குறித்து ஆலோசிப்பதற்காக டில்லியில் நடக்கவிருந்த ஹிந்து, முஸ்லிம் கூட்டு மகாநாட்டுக்கு வருமாறு என்னை அழைத்திருந்தார்கள். அந்த அழைப்பில் கையொப்பமிட்டிருந்தவர்களில் காலஞ்சென்ற ஹக்கீம் அஜ்மல் கான் சாகிபும், ஸ்ரீ ஆஸப் அலியும் இருந்தனர். காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜியும் அம்மகாநாட்டுக்கு வருவார் என்று கூறப்பட்டது. அந்த வருடம் நவம்பரில் கூடவிருந்த மகாநாட்டிற்கு அவர் உபதலைவராக இருப்பது என்று இருந்ததாகவும் எனக்கு ஞாபகம். கிலாபத் விஷயமாகச் செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகத்தினால் ஏற்பட்ட நிலைமையைக் குறித்தும், யுத்த சமாதான வைபவங்களில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கலந்துகொள்ளுவதா என்பதைப் பற்றியும் அம்மகாநாடு விவாதிக்க இருந்தது. அழைப்புக் கடிதத்தில் இன்னுமொன்றும் கூறியிருந்தார்கள். மகாநாட்டில் கிலாபத் விஷயம் மாத்திரமே அன்றிப் பசுப் பாதுகாப்பைப்பற்றிய விஷயமும் விவாதிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.

பசுப் பிரச்சனையைக் குறித்து இப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அழைப்புக்குப் பதிலளித்து நான் எழுதிய கடிதத்தில் மகாநாட்டுக்கு வருவதற்கு என்னாலான முயற்சியைச் செய்வதாகக் கூறினேன். அதோடு, இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றாகக் கவனிக்கவோ அல்லது பேரம் பேசும் உணர்ச்சியுடன் அவற்றைக் கலப்பதோசரியல்ல என்றும், அதனதன் தகுதிக்கு ஏற்பத் தனித்தனியாக இவ்விஷயங்களை விவாதித்து முடிவுக்கு வரவேண்டும் என்றும் எழுதினேன். இவ்விதமான எண்ணங்களோடேயே நான் அம்மகாநாட்டிற்குச் சென்றேன். அதற்குப் பின்னால் நடந்த மகாநாடுகளுக்கு பத்தாயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தார்கள். அவைகளைப் போல் இம்மகாநாடு இல்லாவிட்டாலும், இதற்கும் அநேகர் வந்திருந்தார்கள். காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜியும் மகாநாட்டுக்கு வந்திருந்தார். மேலே சொன்ன விஷயத்தைக் குறித்து அவருடன் விவாதித்தேன். என்னுடைய வாதத்தை அவரும் ஏற்றுக்கொண்டார். மகாநாட்டில் அதை எடுத்துக்கூறும் வேலையை அவர் எனக்கே அளித்தார். இதே போலக் காலஞ்சென்ற ஹக்கீம் சாகிப்பிடமும் இதைப் பற்றி விவாதித்தேன்.

மகாநாட்டின் முன்பு நான் பேசியபோது கூறியதாவது: கிலாபத் பிரச்சனைக்குள்ள அடிப்படை, நியாயமானது, நீதியானது என்று நம்புகிறேன். அப்படி இருக்குமாயின் அரசாங்கம் மோசமான அநீதியையே இதற்கு முன்னால் செய்திருக்கிறது என்றால், கிலாபத் தவறுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கோருவதில் முஸ்லிம்களுடன் ஒன்றுபட்டு நிற்க ஹிந்துக்களும் கடமைப்பட்டிருக்கிறார்கள். கிலாபத் பிரச்னைக்கு ஹிந்துக்களின் ஆதரவைப் பெறுவதற்கு விலை கொடுப்பதுபோலப் பசுவைக் கொல்லுவதில்லை என்று முஸ்லிம்கள் சொல்லுவது எவ்விதம் சரியல்லவோ, அதேபோல முஸ்லிம்களுடன் இதில் ஒரு சமரசத்திற்கு வர இச்சந்தர்ப்பத்தை ஹிந்துக்கள் பயன்படுத்திக் கொள்ளுவதும் அழகல்ல. ஆகையால், இதன் சம்பந்தமாகப் பசுப் பிரச்னையைக் கொண்டு வருவதே முறையாகாது. ஆனால், ஹிந்துக்களின் மத உணர்ச்சியை மதித்தும், அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் ஒரே நாட்டின் மக்கள் என்ற வகையில் அவர்கள்பால் கொள்ள வேண்டிய கடமை உணர்ச்சியினாலும், முஸ்லிம்கள் தாங்களாகவே விரும்பிப் பசுவைக் கொல்லுவதை நிறுத்திவிடுவார்களானால், அது முற்றும் வேறான விஷயம்.

இது முஸ்லிம்களுக்குப் பெருந்தன்மையாவதோடு அவர்களுக்கு அதிகக் கௌரவத்தையும் அளிக்கும். இவ்விதம் ஒரு சுயேச்சையான முடிவுக்கு வருவது முஸ்லிம்களின் கடமை. இது அவர்கள் நடத்தையின் கௌரவத்தையும் உயர்த்தும். ஆனால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ற வகையில் முஸ்லிம்கள், பசுக்களைக் கொல்லுவதை நிறுத்துவதாயிருந்தால் கிலாபத் விஷயத்தில் ஹிந்துக்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும் அவ்விதம் செய்ய வேண்டும். நிலைமை இதுவாகையால், இவ்விரு விஷயங்களையும் தனித்தனியாக விவாதித்து முடிவுக்கு வர வேண்டும். இந்த மகாநாட்டில் கிலாபத் பிரச்னையைக் குறித்து மாத்திரமே விவாதிக்க வேண்டும். மகாநாட்டிற்கு வந்திருந்தவர்களுக்கு என்னுடைய வாதம் சரி என்று பட்டது. இதன் பலனாக, பசுப் பாதுகாப்பு விஷயம் இம்மகாநாட்டில் விவாதிக்கப்படவில்லை. ஆனால், என்னுடைய எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மௌலானா அப்துல் பாரிசாகிப், நமக்கு ஹிந்துக்கள் உதவி செய்தாலும் உதவி செய்யாது போனாலும் சரி, நாம் ஹிந்துக்களின் நாட்டினர் என்ற வகையில், ஹிந்துக்களின் மத உணர்ச்சியை மதித்து முஸ்லிம்கள் பசுக்களைக் கொல்வதை விட்டுவிட வேண்டும் என்றார். பசுக்களைக் கொல்லுவதை அவர்கள் அடியோடு விட்டுவிடுவார்கள் என்றே அநேகமாகத் தோன்றியது. கிலாபத் தவறு பற்றிய விஷயத்துடன் பாஞ்சால விஷயத்தையும் பிணைத்துவிட வேண்டும் என்று சிலர் ஒரு யோசனை கூறினார்கள்.

அந்த யோசனையை நான் எதிர்த்தேன். பாஞ்சாலப் பிரச்னை உள்நாட்டு விஷயமாகையால், யுத்த சமாதான வைபவங்களில் கலந்து கொள்ளுவதா, இல்லையா என்று நாம் முடிவுக்கு வருவதற்கு இது நமக்குப் பொருத்தமானதாகாது என்றேன். கிலாபத் பிரச்னை, யுத்த சமாதான ஒப்பந்தம் காரணமாக நேரடியாக எழுந்துள்ளது. அதில் போய் உள்நாட்டு விஷயத்தையும் கலந்து விடுவோமாயின், பகுத்தறியாத பெருங் குற்றத்தை செய்தவர்களாவோம் என்றேன். என்னுடைய வாதத்தை எல்லோரும் எளிதில் ஏற்றுக்கொண்டு விட்டனர். இக்கூட்டத்தில் மௌலானா ஹஸரத் மோகானி பிரசன்னமாகி இருந்தார். அதற்கு முன்பே அவரை நான் அறிவேன். ஆனால், அவர் எவ்வளவு சிறந்த போராட்ட வீரர் என்பதை நான் அங்கேதான் தெரிந்துகொண்டேன். ஆரம்பம் முதற்கொண்டே நாங்கள் இருவரும் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களாக இருந்தோம். அநேக விஷயங்களில் இக்கருத்து வேற்றுமைகள் தொடர்ந்து இருந்து வந்தன.

இம்மகாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேறின. அத்தீர்மானங்களில் ஒன்று, ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சுதேசி விரதம் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, அதை அனுசரிப்பதையொட்டி, அந்நியச் சாமான்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அப்பொழுது கதர், இன்னும் அதற்குரிய ஸ்தானத்தை அடைந்துவிடவில்லை. ஹஸரத் சாகிப் ஒப்புக்கொண்டு விடக்கூடிய தீர்மானமன்று இது. கிலாபத் விஷயத்தில் நீதி மறுக்கப்படுமானால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர் நோக்கம். ஆகையால், முடிந்தவரையில் பிரிட்டிஷ் சாமான்களை மாத்திரமே பகிஷ்கரிக்க வேண்டும் என்றுபோட்டித் தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்தார். அந்தக் கொள்கையே தவறானது என்றும், அது அனுபவ சாத்தியமில்லை என்றும் கூறி நான் அத்தீர்மானத்தை எதிர்த்தேன்.

நான் அப்பொழுது கூறிய வாதங்கள் இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்தவை. அகிம்சையைப் பற்றிய என் கருத்துக்களையும் மகாநாட்டில் கூறினேன், நான் கூறிய வாதங்கள் கூட்டத்தில் இருந்தோரின் உள்ளங்களை மிகவும் கவர்ந்தன என்பதைக் கண்டேன். எனக்கு முன்னால் ஹஸரத் மோகானி பேசினார். அவருடைய பேச்சுக்கு பலத்த ஆரவாரமான வரவேற்புகள் இருந்ததால் என் பேச்சு எடுபடாமலேயே போய்விடுமோ என்று அஞ்சினேன். என் கருத்தை மகாநாட்டின் முன் கூறாது போனால், கடமையில் தவறியவனாவேன் என்று நான் கருதியதனாலேயே பேசத்துணிந்தேன். ஆனால், அங்கிருந்தவர்கள் என் பிரசங்கத்தை அதிகக் கவனமாகக் கேட்டதோடு, மேடையில் இருந்தவர்கள் அதற்கு முழு ஆதரவையும் அளித்தது எனக்கு வியப்பும் ஆச்சரியமுமாக இருந்தது. ஒருவர் பின் ஒருவராகப் பலர் எழுந்து என் கருத்தை ஆதரித்துப் பேசினார்கள். பிரிட்டிஷ் சாமான்களை மாத்திரம் பகிஷ்கரிப்பது என்றால், அந்த நோக்கம் நிறைவேறாது போவதோடு, தாங்கள் நகைப்புக்கு இடமானவர்களாகவும் ஆகி விடநேரும் என்பதைத் தலைவர்கள் காணமுடிந்தது. பிரிட்டிஷ் சாமான் ஏதாவது ஒன்றேனும் தம் உடம்பில் இல்லாதவர் ஒருவர்கூட அம்-மகாநாட்டில் இல்லை. ஆகையால், தாங்களே அனுசரிக்க முடியாத ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதால், தீமையைத் தவிர வேறு எதுவும் இராது என்பதைக் கூட்டத்திலிருந்த அநேகர் உணர்ந்து கொண்டனர்.

அந்நியத் துணியைப் பகிஷ்கரிப்பது என்பது மாத்திரம் நமக்குத் திருப்தி அளித்துவிட முடியாது. ஏனெனில், அந்நியத் துணியை நாம் சரியானபடி பகிஷ்கரிப்பதற்கு, நமக்குத் தேவையான சுதேசித் துணிகளை நாமே தயாரித்துக்கொள்ள இவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை யாரால் சொல்ல முடியும்? பிரிட்டிஷாரை உடனே பாதிக்கக்கூடிய ஏதாவது ஒன்று நமக்கு வேண்டும். உங்கள் அந்நியத் துணிப் பகிஷ்காரம் வேண்டுமானால், அப்படியே இருக்கட்டும். அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால், அதோடு அதைவிடத் துரிதமான, வேகமான ஒன்றையும் எங்களுக்குக் கொடுங்கள் என்று மௌலானா ஹஸரத் மோகானி பேசினார். அவர் பேச்சை நான் கேட்டுக் கொண்டிருந்தபோதே, அந்நியத் துணியைப் பகிஷ்கரிப்பது என்பதற்கு மேலாக மற்றொரு புதிய திட்டமும் அவசியம் வேண்டும் என்பதை உணர்ந்தேன். அந்நியத் துணியை உடனே பகிஷ்கரித்து விடுவது என்பது அச்சமயம் அசாத்தியமானது என்றும் எனக்குத் தோன்றியது. நான் விரும்பினால், நமது துணித் தேவைக்குப் போதுமான துணி முழுவதற்கும் வேண்டிய கதரை நாம் உற்பத்தி செய்ய முடியும் என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. இதைப் பின்னால் தான் கண்டு பிடித்தேன். மேலும், அந்நியத் துணிப் பகிஷ்காரத்திற்கு ஆலைகளை மாத்திரம் நம்பி இருப்போமாயின், நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்பதை அப்பொழுதே நான் அறிவேன். மௌலானா தமது பிரசங்கத்தை முடித்த சமயத்தில் நான் இன்னும் இந்த மனக்குழப்பத்திலேயே இருந்துவந்தேன். பேசுவதற்கு எனக்கு ஹிந்தி அல்லது உருதுமொழியில் தக்க சொற்கள் அகப்படாமல் இருந்தது, பெரிய இடையூறாக இருந்தது.

முக்கியமாக வடநாட்டு முஸ்லிம்களைக் கொண்ட ஒரு கூட்டத்தின் முன்பு, விவாதங்களோடு கூடிய பிரசங்கத்தை நான் செய்ய நேர்ந்தது இதுவே முதல் தடவையாகும். கல்கத்தாவில் முஸ்லிம் லீக் கூட்டத்தில் நான் உருதுவில் பேசியிருக்கிறேன். ஆனால், அங்கே பேசியது சில நிமிடங்களே. அதோடு உணர்ச்சியோடு கூடிய ஒரு கோரிக்கையை அங்கே கூடி இருந்தோருக்கு வெளியிடுவதே அப்பேச்சின் நோக்கம். அதற்கு நேர்மாறாக இங்கே, விரோதமான கூட்டத்தினரல்லவாயினும் குற்றங்குறை கண்டுபிடிக்கக்கூடியதான ஒரு கூட்டத்தைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு என் கருத்தை விளக்கிக் கூறி அவர்களை ஒப்புக்கொள்ளும்படி செய்ய வேண்டியும் இருந்தது. ஆனால், எனக்கு இருந்துவந்த சங்கோஜத்தை எல்லாம் முன்பே விட்டுவிட்டேன். குற்றமற்ற நாசுக்கான டில்லி உருதுவில் பிரசங்கம் செய்வதற்காக நான் - அங்கே போனவன் அல்ல. ஆனால், எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் என் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காகவே அங்கே சென்றேன். இதில் நான் வெற்றியும் பெற்றேன். ஹிந்தி-உருது மாத்திரமே இந்தியாவின் பொது மொழியாக இருக்க முடியும் என்ற உண்மைக்கு இக்கூட்டம் எனக்கு நேரடியான ருசுவாக இருந்தது. கூட்டத்தில் இருந்தவர்களின் மனத்தை நான் எவ்வளவு தூரம் கவர்ந்தேனோ அதே போல நான் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் கவர்ந்திருக்க முடியாது. மௌலானா தமது சவாலை வெளியிடவேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருக்கவும் மாட்டார். அப்படியே அவர் வெளியிட்டிருந்தாலும், அதைப் பெரிதாக நான் எடுத்துக்கொண்டும் இருக்கமாட்டேன்.

புதிய கருத்தை எடுத்துச் சொல்லுவதற்கு வேண்டிய ஹிந்தி அல்லது உருதுச் சொற்கள் எனக்கு அகப்படவில்லை. இது ஓரளவுக்கு எனக்குக் கஷ்டமாகவே இருந்தது. கடைசியாக, அக்கருத்தை நான் கோவாப்பரேஷன் (ஒத்துழையாமை) என்ற ஆங்கிலச் சொல்லால் விவரித்தேன். முதன் முதலாக இக்கூட்டத்திலேயே இச்சொல்லை நான் உபயோகித்தேன். மௌலானா பேசிக்கொண்டிருக்கும்போதே எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அரசாங்கத்தை ஆயுதங்களைக் கொண்டு எதிர்ப்பதென்பது அசாத்தியமானது; விரும்பத்தக்கதல்ல என்றால், அநேக காரியங்களில் அந்த அரசாங்கத்துடன் அவர் ஒத்துழைத்துக் கொண்டிருக்கும் போது, சரியானபடி அதை எதிர்ப்பது என்று அவர் பேசிக்கொண்டிருப்பது வீண் காரியம் என்று எண்ணினேன். ஆகையால், அந்த அரசாங்கத்துடன் ஒத்துழைக்காமல் இருந்து விடுவது ஒன்றே அதற்கு உண்மையான எதிர்ப்பாகும் என்றும் எனக்குத் தோன்றியது. இவ்விதம் ஒத்துழையாமை என்ற சொல்லைப் பிரயோகித்தேன். ஆனால், அச்சொல்லில் அடங்கியுள்ள அநேக விளைவுகளைக் குறித்து அப்பொழுது எனக்குத் தெளிவான கருத்து எதுவும் இல்லை. ஆகையால், நான் விவரங்களைப் பற்றிக் கவனிக்கவே இல்லை. பின்வருமாறு மாத்திரம் சொன்னேன்: முஸ்லிம்கள் மிக முக்கியமானதோர் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

யுத்த சமாதான ஷரத்துக்கள் அவர்களுக்குச் சாதகமில்லாதவைகளாக இருக்குமாயின் - ஆண்டவன் அதைத் தவிர்ப்பாராக- அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை அவர்கள் நிறுத்திவிடுவார்கள். இவ்விதம் ஒத்துழைப்பை நிறுத்தி விடுவது மக்களுக்குள்ள பறிக்க முடியாத ஓர் உரிமை ஆகும். அரசாங்கம் அளித்திருக்கும் பட்டங்களையும் கௌரவங்களையும் தொடர்ந்து வைத்து கொண்டிருக்கவோ, அரசாங்க உத்தியோகத்தில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கவோ நாம் கடமைப்பட்டிருக்கவில்லை. கிலாபத் போன்ற மிகப் பெரியதோர் லட்சியத்தில் அரசாங்கம் நமக்குத் துரோகம் செய்யுமாயின், அதனுடன் நாம் ஒத்துழையாமை செய்யாமல் இருப்பதற்கில்லை. ஆகையால், நமக்கு அரசாங்கம் துரோகம் செய்யுமானால், அதனுடன் ஒத்துழைக்காமல் இருக்க நமக்கு உரிமை உண்டு. ஆனால், ஒத்துழையாமை என்ற சொல் எங்கும் புழக்கத்துக்கு வரச் சில மாதங்களாயின. அப்போதைக்கு அது அம்மகாநாட்டின் நடவடிக்கைகளில் மறைந்து போயிற்று. உண்மையில் ஒரு மாதத்திற்குப் பின்னால், அமிர்தசரஸில் கூடிய காங்கிரஸ் மகாநாட்டில் ஒத்துழைப்புத் தீர்மானத்தை நான் ஆதரித்தபோது, துரோகம் செய்யவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலேயே அவ்வாறுசெய்தேன்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum