ரசிகர்களின் அன்பில் பெருமிதம் அடைகிறேன்: ரஜினிகாந்த்
Page 1 of 1
ரசிகர்களின் அன்பில் பெருமிதம் அடைகிறேன்: ரஜினிகாந்த்
ரசிகர்கள் என் மீது காட்டும் தனியாத அன்பில் பெருமிதம் அடைகிறேன்; அனைவருடைய வாழ்த்துகளையும் மனதார ஏற்றுக்கொள்கிறேன் என்றார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் தனது 63-வது பிறந்தநாளை சென்னையில் புதன்கிழமை கொண்டாடினார். தன்னுடைய பிறந்த நாளின்போது வழக்கமாக சென்னையில் இருப்பதைத் தவிர்த்து வந்த ரஜினிகாந்த், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது வீட்டில் ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் பிறந்த நாள் கொண்டாடினார்.
இந்த ஆண்டு 12-12-12 என்ற அரிய நாளில் பிறந்த நாள் வருவதால் தனது ரசிகர்களை நேரில் சந்திக்க விருப்பப்பட்டார் ரஜினி. எனவே ரசிகர்களை புதன்கிழமை காலை சந்திப்பார் என்ற தகவல் அவருடைய மன்ற நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கு முன்பு அதிகாலை முதல்
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரளாகக் குவியத் தொடங்கினர்.
ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையே பட்டு வேட்டி, சட்டையுடன் வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், அவர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார். அவரை நெருங்கி வந்த ரசிகர்கள் அவருடைய காலில் விழத் தொடங்கினர். அவர்களை காலில் விழக்கூடாது என அறிவுறுத்திய ரஜினி சிறிது நேரம் அங்கிருந்தவாறு அவர்களுடைய வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார்.
கூட்டம் அதிகமாகி நெரிசல் ஏற்படவே அங்கிருந்து கிளம்பிய ரஜினி, வீட்டின் அருகே தனியே அமைக்கப்பட்ட மேடையில் இருந்தவாறு மைக்கில் ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது:
ரசிகர்கள் அனைவரும் நேரில் வந்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் அனைவருடைய வாழ்த்துகளையும் மனதார ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவரிடமும் கை குலுக்கி போட்டோ எடுத்துகொள்ள வேண்டும் என ஆசைதான். ஆனால் அது இப்போது முடியாத காரியம். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
உங்களுக்கே தெரியும். இது "செக்யூரிட்டி' அதிகம் உள்ள பகுதி. அருகே முதல்வர் வீடு உள்ளது. இங்கு உங்களை சந்திக்க அனுமதித்ததே பெரிய விஷயம். அதனால் யாரும் சத்தம் போடாதீர்கள். கலாட்டா எதுவும் செய்ய வேண்டாம்.
நீங்கள் செய்த பூஜைகளாலும் கடவுள் அருளாலும் நான் நன்றாக இருக்கிறேன். உங்கள் அன்புக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. "சிவாஜி' படம் இன்று 3டி யில் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை நீங்கள் அனைவரும் பார்த்தால் எனக்கு சந்தோஷம். அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள் என்றார் ரஜினி.
ரசிகர்கள் தொடர்ந்து ரஜினி வீட்டுக்கு வந்துகொண்டேயிருந்ததால் மதியம் வரை இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்து அவர்களுடைய வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பிறந்த நாளை வீட்டில் கொண்டாடுவதால் செய்தியாளர்களை உள்ளே அழைத்து ரஜினி கூறியதாவது:
பிறந்த நாளின்போது வழக்கமாக நான் வீட்டில் இருப்பதில்லை. ராகவேந்திரா மண்டபத்தில் எப்போதாவது சந்திப்பதுண்டு. இந்த ஆண்டு 12-12-12 என்ற விசேஷமான நாளில் பிறந்த நாள் வருவதால் வீட்டிலேயே இருந்து ரசிகர்களைச் சந்திக்க முடிவெடுத்தேன்.
ஏராளமான ரசிகர்கள் வீட்டுக்கு வந்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். அவர்களைச் சந்தித்த இந்த நாள் மறக்க முடியாத நாள். ரசிகர்கள் என் மீது காட்டும் தணியாத அன்பில் பெருமிதம் அடைகிறேன். பிறந்த நாளுக்காக ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் செய்த ரசிகர்களுக்கு நன்றி.
ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எல்லோரும் அவரவர் அப்பா, அம்மா பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுங்கள். நம்மைப் பெற்றவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதுதான் பெரிய விஷயம். எல்லாவற்றையும் நேரான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். நல்லதையே நினையுங்கள். அப்படி நினைத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
"சிவாஜி' படம் 3டி-யில் வந்துள்ளது. "கோச்சடையான்' படமும் நவீன தொழில்நுட்பத்தில் 3டி-யில் வரவுள்ளது. "கோச்சடையான்' போன்ற புராண காலத்துக் கதையம்சம் கொண்ட படங்கள் வெற்றி பெற்றால் ராமாயணம், மகாபாரதம், பொன்னியின் செல்வன் போன்ற இதிகாசங்கள், இலக்கியங்களைத் திரைப்படங்களாக்கும் முயற்சி வெற்றி பெறும் என்ற ரஜினியிடம் "நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு பற்றி..?' என்று கேட்டபோது... ""அதைப் பற்றி எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன்; இப்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லை'' என்றார் ரஜினிகாந்த்.
கோயில்களில் பூஜை: ரஜினியின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஸ்ரீராகவேந்திரர் கோயில் உள்பட ஏராளமான கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். ரஜினியின் ரசிகர் மன்றங்கள் சார்பாக பலர் ரத்த தானம், அன்னதானம், இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்குதல் உள்பட ஏராளமான உதவிகளைச் செய்தனர்.
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலர் நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதுமானது: அஜீத்
» என் மகள் நடிகையானதில் மகிழ்ச்சி அடைகிறேன்: அர்ஜுன்
» ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மனநிறைவு அடைகிறேன்: ஹன்சிகா
» ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மனநிறைவு அடைகிறேன்: ஹன்சிகா
» ரசிகர்களின் அன்பு நெகிழ வைக்கிறது
» என் மகள் நடிகையானதில் மகிழ்ச்சி அடைகிறேன்: அர்ஜுன்
» ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மனநிறைவு அடைகிறேன்: ஹன்சிகா
» ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மனநிறைவு அடைகிறேன்: ஹன்சிகா
» ரசிகர்களின் அன்பு நெகிழ வைக்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum