தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மன உளைச்சல் நீக்கி, தெளிவருளும் சாந்தநாயகி!

Go down

மன உளைச்சல் நீக்கி, தெளிவருளும் சாந்தநாயகி! Empty மன உளைச்சல் நீக்கி, தெளிவருளும் சாந்தநாயகி!

Post  meenu Sat Mar 09, 2013 1:22 pm

ஜீவன்கள் பிரம்மத்தை அறிய அந்த பரம்பொருளே எளிமையான வழியை காட்டுகிறது. அதாவது, பரபிரம்மமான பரமேஸ்வரன் அரு உருவை குறிக்கும் அம்சமாகவுள்ள லிங்கத் திருமேனி கொண்டு ஆலயங்களில் எழுந்தருளி தன் பொன்னடி சேர்த்துக் கொள்ள, ரத்தின கம்பளம் விரிக்கிறார். அவ்வாறு மகேசன் உறையும் சிறப்புமிக்க தலங்களில் ஒன்றுதான் பொன்னூர்.

பொன்னன் என்பது பிரம்மனைக் குறிக்கும். பிரம்மன் இங்கு வழிபட்டதன் காரணமாக இவ்வூர் பொன்னூர் என்றானது. அக்காலத்தில் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட ஐம்பொன்னால் சிற்பங்களை வடிப்பார்கள். அந்த ஐம்பொன்களை நினைவுறுத்தும் வகையில் இத்தலத்தைச் சுற்றியுள்ள சில ஊர்களின் பெயர்கள் அமைந்துள்ளன. பொன் - பொன்னூர், வெள்ளி - கீழ் வெள்ளியூர், ஈயம் - பாதிரி, செம்பு - செம்பூர், இரும்பு - இரும்பேடு ஆகிய ஐம்பொன் உலோகப் பெயர் கொண்ட ஊர்கள், பொன்னூரின் 20 கி.மீ. சுற்றளவில் உள்ளன. மேலும், பொன்னை உருக்கிட பயன்படும் ‘வங்காரம்’ என்ற பெயரிலும் பொன்னூரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் ஒரு ஊர் உள்ளது.

பொன்னூரைச் சுற்றிலும் ஏரி, காடு, மலை என இயற்கை கைகோர்த்து எழிலூட்டுகிறது. ஊரின் வடகிழக்கு திசையில் ஒரே வளாகத்தில் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. இது சைவ-வைணவ ஒற்றுமையினை மேலோங்கச் செய்கின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிகள், தொண்டை மண்டல வைப்புத் தலமாகப் போற்றிய சிறப்புடையது பொன்னூர் திருத்தலம். அதில் பொன்னூரே தலைமையிடமாக விளங்கியதால் பொன்னூர், நாட்டு பொன்னூர் என்று வழங்கப்பட்டது. 79 நாடுகளில் ஒன்றாக, பல ஊர்களை உள்ளடக்கியது பொன்னூர் நாடு. இதை சுந்தரரின் பாடல் வரியிலும் ஆலயக் கல்வெட்டிலும் காணலாம்.ஆதிநாளிலேயே இத்தல இறைவனை பராசர முனிவரும் பிரம்மனும் வழிபட்டுள்ளனர். இந்த ஆலயம் பல்லவர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் சோழ மன்னர்கள் காலத்திலும் திருப்பணி கண்டுள்ளது. விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் சபா மண்டபம் கட்டப்பட்டு கோயில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒரே திருச்சுற்றுடைய இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. இங்கு ஓர் விசேஷம் உண்டு. சிவன் சந்நதியும் அம்பிகை சந்நதியும் ஒரே சபா மண்டபத்தைக் கொண்டதாக அமைந்துள்ளதால், ஒரே இடத்தில் நின்றவாறு ஒரே நோக்கில் சுவாமியையும் அம்பாளையும் தரிசிக்கலாம். அதாவது, இறைவன் சந்நதி கிழக்கு முகமாகவும் அம்பாள் சந்நதி தென்முகமாகவும் ஒரே சபா மண்டபத்தில் முடிவதால், மேற்கண்ட அரிய விசேஷ தரிசனம் நமக்குக் கிடைக்கின்றது. சுவாமி சந்நதி சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற அமைப்பில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நதி சபா மண்டபம், மகா மண்டபம், அந்தராளம், மூல ஸ்தானம் ஆகிய அமைப்போடு அமைந்துள்ளது. இங்கு ஈசன், ‘திருக்காமீஸ்வரர்’ எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். பராசர முனிவர் வழிபட்டதால் பராசரேஸ்வரர் என்றும் பிரம்மன் பூஜித்தமையால் பிரம்மேஸ்வரர் என்றும் இவருக்கு பல்வேறு திருநாமங்கள் உள்ளன. கிழக்கு முகம் பார்த்தபடி தேஜோமயமாக, பொன்னார் மேனியனாகப் பிரகாசிக்கின்றார் இறைவன். பொன்னொளி வீசும் இந்த லிங்கமூர்த்திக்கு அர்ச்சகர் ஆரத்திக் காட்டும்போது, கற்பூர ஒளி லிங்கத்தின் மீது பட்டு தகதகவென பிரதிபலிக்கிறது.

இறைவி, சாந்தநாயகி. சாந்தமே உருவாய் அருளை வாரி வழங்குகின்றாள். பலவித பிரச்னைகளால் மன உளைச்சல் கொண்டவர்கள் இந்தத் தாயை வணங்கினால் உடனே தெளிவு பிறப்பது பல பக்தர்களின் அனுபவம். தாயைத் தவிர பாசத்துடன் ஆறுதல் சொல்ல இந்த உலகத்தில் யார்தான் இருக்கிறார்கள்! இத்தல தீர்த்தமாக, ஆலய தென்கிழக்கு மூலையில் திருக்குளம் அமைந்துள்ளது. பிரம்மா ஏற்படுத்தியதால் இது ‘பிரம்ம தீர்த்தம்’ என்று போற்றப்படுகிறது. தற்போது இக்குளம் பழுதடைந்து, படிகள் சரிந்து, பயனின்றி கிடக்கின்றன. இத்தல விருட்சமாக, சரக்கொன்றை திகழ்கிறது. இவ்வாலய கோஷ்ட தெய்வங்கள் யாவும் சுற்று முறையில் இன்றி, வரிசை முறையில் மகா மண்டபத்தில் காணப்படுவதும் விசேஷம்தான். ஒருகால பூஜை மட்டும் நடக்கும் இந்த ஆலயத்தில் பிரதோஷத்தைத் தவிர வேறெந்த விசேஷமும் நடைபெறுதில்லை. தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். நெடுநாளைய பாவங்கள் தீர்ந்திட, சரக்கொன்றை மலரால் திருக்காமீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து, பலனடையலாம். பராசர கோத்திரமுடையவர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலம் இது.

பல்லவர்களின் ஆட்சிக் காலத்திலேயே இந்த வளாகத்திலுள்ள பெருமாள் சந்நதியும் கட்டப் பெற்றுள்ளது. இச்செய்தியினை பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டின் மூலம் அறியலாம். மீண்டும், வென்றுமண் கொண்ட சம்புவராயரின் 14வது ஆட்சிக் காலத்தில், அதாவது கி.பி.1336ல் விஷ்ணு சந்நதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது ஸ்ரீவிண்ணகர் என்று அழைக்கப்பெற்ற இப்பெருமாள் ஆலயம் தற்போது அழகப் பெருமாள் கோயில் என்றழைக்கப் பெறுகிறது.
சிவன் சந்நதிக்கு வடபுறம் ஏழு அடி உயர மகாவிஷ்ணு சிலை ஒன்று உள்ளது. இச்சிலையே பழைய பெருமாள் சிலையாகும். மேற்கு நோக்கியிருக்கும் இத்திருமால் ஆலயம், ஒரு சுற்று கொண்டது. மூலவர் சிலை அத்தி மரத்தால் மிகவும் நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு தைல சேவை மட்டுமே; அபிஷேகம் கிடையாது. அரசர் காலத்தில் ஸ்ரீகரண விண்ணகர எம்பெருமான் என்று அழைக்கப்பட்ட இப்பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராகக் காட்சி தருகின்றார். இவருக்கருகே சௌந்தர்ய வரதராஜப் பெருமாளின் கற்சிலை சிறிய அளவில் உள்ளது. இப்பெருமானுக்கு அபிஷேகம் உண்டு.
பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், ராஷ்டிரகூடர், விஜயநகர மன்னர்கள், சம்புவராயர்கள் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் சிவாலயத்திலும் பெருமாள் ஆலயத்திலும் பற்பல இடங்களில் காணப்படுகின்றன. அவற்றில் இவ்வாலயத்திற்கு வழங்கப்பட்ட கொடை மற்றும் மானியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. கடந்த 100 ஆண்டுகளாக கவனிப்பாரற்று, புதர் மண்டிப் போயுள்ளது இவ்வாலயம். செடிகளும், கொடிகளுமாக புதர்க்கூட்டம். ஆங்காங்கே மண் சரிந்து, சந்நதியின் கருங்கற்கள் பல வீழ்ந்து பாம்பும் தேளும் பல்லியும் குடிகொண்டு பார்க்கவே வருத்தமளிப்பதாய் உள்ளது. சிவனடியார்கள் ஒன்று திரண்டு திருப்பணி தொடங்க, உலகத்துச் சிவனடியார்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. அதுவரை என்று ஒளி பெறுமோ இந்த பொன் ஊர் என்ற கேள்வி மனதை நெருடிக் கொண்டுதான் இருக்கும். ஆலயத் தொடர்புக்கு: ஏ.பாலசுப்ரமணிய குருக்கள் - 9962805037. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் வந்தவாசியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது பொன்னூர். வந்தவாசியிலிருந்து கீழ்புத்தூர், வங்காரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளில் பொன்னூரை அடையலாம். வந்தவாசியிலிருந்து நேரடிப் பேருந்துகளும் உள்ளன. வந்தவாசியில் தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் உள்ளன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum