தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கும்பமேளா கோலாகலம்

Go down

கும்பமேளா கோலாகலம் Empty கும்பமேளா கோலாகலம்

Post  meenu Sat Mar 09, 2013 12:22 pm

கும்பமேளா. பாரதக் குடும்பத்தின் புனிதத் திருவிழா. சந்நியாசிகளின் தீபாவளி. பாரதத்தின் முகாந்திரம் சாதுக்கள்தான் என உலகிற்கு அறிவிக்கும் நிகழ்வு. என்ன கொண்டு வந்தோம். எதைக் கொண்டு போகப் போகிறோம். இருக்கும் நாட்களுக்குள் கடவுளை, குருவை சரணடைவோம் என்று வைராக்கியத்தை பெருக்கும் பண்டிகை. ஜாதி, மதம், இனம் என்று பாராமல் கூடி குளிர்ந்து கங்கையை துதிக்கும் நாள் என்று கும்பமேளாவிற்கு பல காரணங்கள் உண்டு.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா இந்தியாவிலுள்ள பிரயாகை, ஹரித்வார், உஜ்ஜயினி மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களிலும் நடைபெறும். இதில் பிரயாகையில் நடக்கும் மகா கும்பமேளா என்ற விழா பிரசித்தி பெற்றது. மகா கும்பமேளாதான் உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும். வேதங்களும், புராணங்களும் தேவர்கள் அமுதத்தை உட்கொள்வதாக கூறுகிறது. அப்படிப்பட்ட சாகாவரம் தரும் அமிர்தத்தை கருட பகவான் தன் கும்பத்திலிருந்து சில துளிகளாக இந்த நான்கு தலங்களிலும் தெளிக்கிறார் என்பார்கள். அமிர்தம் கலந்து தீர்த்தம் அக அழுக்குகளையும், புற அழுக்கு களை நீக்குவது மட்டுமல்லாது, ஜீவனுக்கு மோட்சத்தை அடைவதிலும் நாட்டத்தை உண்டாக்கும்.

சில ஆயிரங்கள் ஆண்டுகளுக்கு முன்பு வேதங்கள் தழைத்தோங்கியிருந்தன. ஒற்றுமையாக இருந்த தேவர்களும், அசுரர்களும் அமிர்த பானத்தினை க்ஷீர சாகரம் எனும் பாற்கடலில் இருந்து எடுத்த அமுத பானக் கிண்ணத்தை அசுரர்கள் களவாடிச் சென்றனர். இவர்களை துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரெண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் வானுலகில் போர் செய்தனர். பன்னிரெண்டு நாட்கள் என்பது தேவர்களுக்கு பன்னிரெண்டு வருடங்களாகும். அந்த சமயத்தில் வானுலகிலிருந்து அமிர்த பானம் பூலோகத்திலிருந்த இந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும், அதனாலேயே மகாகும்பமேளா பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவதாகும் கூறப்படுகிறது. விதம்விதமான புராணங்கள் இருந்தாலும், அமிர்தத்தை ஸ்வீகரிப்பது மட்டும்தான் நம் வேலை.

கும்பமேளாவின் போது புகழ்பெற்ற கோதாவரி நதிக் கரையில் கூட்டமாக மக்கள் நீராடுவர். ராம்குட் என்னும் இடத்தில் சாதுக்கள் முதலில் நீராட அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது சாதுக்கள் ஆற்றில் போடும் நாணயங்களை எறியும்பொழுது மக்கள் கூட்டம் அதைப் பெற்றுக் கொள்ள முட்டி மோதுவதும் குறிப்பிடத்தக்கது. சாதுக்களினால் வழங்கப்பட்ட நாணயமானது அரிய சக்திகளை கொண்டது என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஹரித்வாரில் மகர சங்கராந்தி நாளான ஜனவரி 14 அன்று மகாகும்பமேளா துவங்கும். குளிர் நடுங்கும் அதிகாலையில் கங்கை ஆற்றின் பிரம்ம குண்ட் என்கிற இடத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடுவர்.

அவந்தி என்று புகழ்பெற்ற தேசத்தில் க்ஷிராநதி பாய்கின்றது. கலையும் செல்வமும் நிறைந்த அந்தத் திருநாட்டில் வேதப்பிரியன் என்றொரு சிவபக்தர் வாழ்ந்து வந்தார். முக்கண்ணனை முப்பொழுதும் துதிபாடி, பூஜித்து வந்தார். அவருக்கு தேவப்பிரியன், சுவிரதன், மேதன், தருமவாதி என நான்கு புத்திரர்கள் இருந்தனர். அவர்களும் சிவபக்தியில் தோய்ந்தவர்கள். அவந்தியிலுள்ள ரத்னமாலா மலையில் தூஷணன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் பிரம்மாவிடம் வரம் பெற்று வலிமை வாய்ந்தவனாக விளங்கினான். மமதையில் பிறரைத் துன்புறுத்தினான். குறிப்பாக பூஜைகள், வேள்விகள் நிகழ்த்திய முனிவர்களுக்கு கொடுமைகள் செய்தான். ரத்ன மலையை அடுத்துள்ள வனத்தில் ஆசிரமம் அமைத்து வேள்விகள் புரிந்த முனிவர்களை வதைத்தான்.

முனிவர்கள் எல்லோரும் வனத்தைத் துறந்து உஜ்ஜயினியை வந்தடைந்தார்கள். முக்திக்கான ஏழு புண்ணியத் தலங்களுள் உஜ்ஜயினியும் ஒன்று. அங்குள்ள வேதப் பிரியனைக் காணச் சென்றார்கள். வேதப் பிரியன் தம் மைந்தர்களுடன் சிவபூஜை செய்து கொண்டிருந்தான். கூட்டமாக வந்த முனிவர்களின் துயரம் தோய்ந்த முகத்தைப் பார்த்து, என்னவென்று விசாரித்தான். அவர்கள் தூஷணனின் கொடூரச் செயலைக் கூறி வருந்தினார்கள். வேதப்பிரியன் அவர்களை சமாதானம் செய்தான். “நானும் உங்களைப் போன்றவனே! தூஷணனை அழிக்கும் வல்லமை எனக்கு இல்லை. திரிபுரங்களை அழித்த பரமேஸ்வரருக்கு உண்டு. அவரைப் பூஜிப்போம்” என்றான்.

“ஓம் நமச்சிவாய” என்று ஓதி, வேதப் பிரியனும் முனி கணங்களும் பூஜித்தார்கள். நமச்சிவாய மந்திரம் காற்றில் பரவியது. தூஷணனின் செவிகளை எட்டியது.
‘‘நானே உயர்ந்தவன். என்னைப் போற்றாமல் சிவனைப் போற்றுபவர்களை வதம் செய்வேன்” என்று கூக்குரலிட்டபடி தூஷணன் விரைந்து வந்தான். அவனின் அக்குரலே முனிவர்களை நடுங்க வைத்தது. பூமியில் காலடி பதித்தபோது பூமாதேவி அதிர்ந்தாள். தூஷணனை கண்டோர்கள் ஓடி ஒளியத் தொடங்கினர்.
“உயிரைப் பறிக்க வந்த காலனையே காலால் உதைத்தவர் நம்மை ரட்சிப்பார்.” என்று வேதப்பிரியன் தொடர்ந்து பூஜை செய்தான். தூஷணன் வேதப் பிரியனின் இல்லத்தை நெருங்கினான்.

அப்போது, இல்லத்தினருகே, பூஜைக்கான லிங்கங்களைச் செய்ய மண்ணைத் தோண்டியதால் பள்ளமாக இருந்த இடத்திலே பேரொளி ஒன்று கிளர்ந்து எழுந்தது.
அதன் பிரகாசத்தைக் காண இயலாமல் அனைவரும் கண்களை மூடிக் கொண்டனர். மின்னல் மறைந்தது. அவ்விடத்திலே பேரொலியுடன் பரமேஸ்வரர் மகாகாளராகத் தோன்றினார். தூஷணனை பார்வையாலேயே எரித்துச் சாம்பலாக்கினார்.‘சம்போ மகாதேவா’ ‘ஹரஹர மகாதேவா’ என்று பரவசத்துடன் முனிவர்களும் வேதப்பிரியனும் மகாகாளரைத் ஸ்தோத்தரித்து வணங்கினார்கள். அன்றுமுதல் உஜ்ஜயினியில் தோன்றிய ஜோதிர்லிங்கம், மகாகாளராக பக்தர்களைக் காத்து ரக்ஷித்து வருகிறார். புகழ்படைத்த மன்னர் விக்ரமாதித்யன் அரசாண்ட நகரம் உஜ்ஜயினி.

காளிதாஸனும் பவபூதியும் தண்டியும் வாழ்ந்த நகரம். கோயில்கள் நிறைந்த நகரமாக உஜ்ஜயினி திகழ்கின்றது. உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரரே மிகவும் பிரசித்தமானவர். இங்கு வாழும் மக்களின் நாவில் நாள்தோறும் நடனமிடும் திருநாமம் ‘ஜெய் மகாகாள்’ என்பதாகும். கோயிலை அடுத்து ‘ருத்ரஸாகர்’ என்னும் பெரிய ஏரி இருக்கிறது. தொண்ணூறு அடி உயர கோபுரம். பிரதக்ஷிணம் செய்ய அகன்ற பிராகாரங்கள். கணபதி, நரசிம்மர், பண்டரிநாதர், ஹனுமன், சப்த ரிஷிகள் என பல சந்நதிகள் கொண்ட ஆலயம். கோயிலிலேயே கோடி தீர்த்தம் எனும் திருக்குளமும் உண்டு. மகாகாளேஸ்வரரின் கர்ப்பக் கிரகத்தில் விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கின்றன. தீபாவளிப்பண்டிகை இங்கு சிறப்பாக, அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெறுகிறது.

ஜோதிர்லிங்கம் இரண்டு அடி உயரமுள்ளது. நாள்தோறும் அலங்காரம், கவசம் என்று விதவிதமாக காட்சி தருகிறார். ‘மேவா அலங்கார்’ எனப்படும் அதி அற்புதமான அலங்காரத்தின்போது, மகாகாளர், பாதாம், திராட்சை, முந்திரி ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகிறார். அவற்றைக் கொண்டே லிங்கத் திருமேனியை பரமேஸ்வரரின் திருமுகம்போல் அலங்கரிப்பார்கள். இந்த அலங்காரத்தை கண்டோர் பரவசமடைவர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் விருச்சிக ராசிக்கு வரும்போது உஜ்ஜயினியில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது. நாடெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான மக்களும், சாதுக்களும், சந்நியாசிகளும் கூடி, புனித நீராடி மகாகாளரைத் தரிசிக்கிறார்கள்.

சிவனுக்கு பூஜித்தவை நிர்மால்யமாகி விடுவது ஐதீகம். ஆனால், இந்த மகாகாளரான சிவனுக்கு அர்ச்சிக்கப்படும் வில்வதளங்கள் நீரால் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் அர்ச்சிக்கப்படுகிறது. கிருஷ்ணரின் குரு சாந்தீபினி வாழ்ந்த தலம் இதுவே ஆகும். பர்த்ருஹரி எனப்படும் பத்திரகிரியாரின் குகை அமைந்த புண்ணிய பூமி. மகாகாளர் அகால மரணமடைவதிலிருந்து மக்களைக் காப்பாற்றுகிறார். ஏழு மோட்சபுரிகளில் இதுவும் ஒன்று. மகாபாரதத்தில் இதனை “அவந்திகா’’ என்றே குறிப்பிட்டுள்ளனர். மௌரியர்களில் சிறந்தவனாகிய விக்ரமாதித்யனுக்கும் பிற்காலத்தில் ஹோலகர் அரசர்களுக்கும் உஜ்ஜயினி தலைநகரமாக விளங்கியது.

விக்ரமாதித்யன் காலத்தில் சிறந்து விளங்கிய புலவர் காளிதாசன் இங்கு வசித்து தனது அழிவற்ற இலக்கியங்களை உலகினுக்கு அளித்தார். உஜ்ஜயினியின் பெருமையை சீன யாத்ரிகனாகிய யுவான்ஸ்வாங் மிகவும் சிலாகித்து கூறியுள்ளார். உலகின் மிகப் பெரிய ஆன்மிகத் திருவிழா என்று வர்ணிக்கப்படும் கும்பமேளா, அலகாபாத்தில் நடைபெறுகிறது. கும்ப மேளா நெருங்க நெருங்க அலகாபாத்களையாகும். புதுப்பொலிவு பெறும். எல்லோர் முகத்திலும் உற்சாகம் பொங்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சாதுக்கள் குவிந்த வண்ணம் இருப்பர். வெளிநாட்டினர் பெருந்திரளாக வருகை தருவர். பக்தியா, உற்சாகமா, கொண்டாட்டமா, கடவுள் தேடலா என்று கணிக்க முடியாத அளவுக்கு மக்கள் விதவிதமான மனோபாவங்களோடு அலகையை நோக்கி வருவர்.

எதை கொடுக்க வேண்டுமோ அதை ஈசன் அள்ளித் தருவான். திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில்தான் மகா கும்பமேளா நடக்கும். இதில் பிரபலமான நாகா சாதுக்கள் உள்பட பல்வேறு வகையான சாதுக்களையும் பார்க்கலாம். அன்று மட்டும் கோடிக் கணக்கில் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடுவார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum