தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்வந்தராக்கும் செட்டிக்குளம் குபேரன்

Go down

செல்வந்தராக்கும் செட்டிக்குளம் குபேரன் Empty செல்வந்தராக்கும் செட்டிக்குளம் குபேரன்

Post  ishwarya Fri May 24, 2013 12:29 pm

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உறையூரை தலைநகராகக் கொண்டு பராந்தக சோழன் ஆட்சி செய்து வந்த காலம் அது. வணிகர் ஒருவர் உறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி பயணித்தார். பெரம்பலூருக்கு முன்னால், செட்டிக்குளம் என்ற கிராமம் வழியாக வந்துகொண்டிருந்தபோது இருட்டத் தொடங்கியது. காட்டுப் பகுதியாக இருந்ததால் பயணத்தை தொடர முடியாமல் காட்டுக்குள்ளேயே தங்க முடிவெடுத்தார். காட்டிலுள்ள மரம் ஒன்றில் ஏறி அதிலுள்ள கிளையில் சாய்ந்து ஓய்வெடுக்க துவங்கினார். சிறிது நேரத்தில் அவருக்கு ஒரு அற்புத காட்சி ஒன்று தென்பட்டது. திடீரென தோன்றிய தீப்பிழம்புக்கு நடுவே ஒரு லிங்கம் இருந்தது. அதற்கு தேவர்களும் யோகிகளும் முனிவர்களும் பூஜை செய்வதும் தெரிந்தது.

சில நிமிட நேரங்களே தோன்றிய இந்த அரிய காட்சியைக் கண்ட வணிகர், உடனே, தனது பயணத்தை பாதியிலேயே நிறுத்திக்கொண்டு, உறையூர் திரும்பினார். மன்னனை சந்தித்து தான் கண்ட காட்சியை விவரித்தார். குலசேகர பாண்டிய மன்னன் அதனைக் கேட்டு ஆச்சர்யமடைந்தான். உடனே சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் இருவரும் செட்டிக்குளம் நோக்கி புறப்பட்டனர். தான் தங்கியிருந்த வனாந்தரப் பகுதியில் சென்று சிவலிங்கம் கண்ட இடத்தை காட்டினார். ஆனால், அங்கு லிங்கம் காணப்படவில்லை. மன்னர் படையினர் அந்த வனப்பகுதியில் லிங்கத்தை தேடினர். அப்போது கையில் கரும்பைப் பிடித்துக்கொண்டு ஒரு முதியவர் அந்தப் பகுதிக்கு வந்தார்.

அவரிடம் படைவீரர்கள் விஷயம் கூறியதும், ‘அதுவா! இங்கே வாருங்கள்,’ எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்று ஒரு சிவலிங்கத்தை காண்பித்தார். அனைவரும் மகிழ்ச்சி பொங்க அந்த லிங்கத்தை வழிபட முற்பட்டபோது, திடீரென மின்னல் போல ஒரு வெளிச்சம் தோன்றியது. உடனே அந்த முதியவர் கிழக்கு திசையில் ஜோதி வடிவாய் மறைந்தார். மன்னரும், மற்றவரும் திகைப்புடன் பார்த்தபோது எதிரேயிருந்த மலைமீது கையில் கரும்புடன் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக காட்சியளித்தார். இதனைக் கண்ட அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து செட்டிக்குளத்தில் ஏகாம் பரேஸ்வரருக்கு ஒரு ஆலயமும், எதிரே மலைமீது முருகனுக்கு ஒரு ஆலயமும் அமைக்க முடிவெடுத்தனர். ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அம்பாளுக்கு தனி சந்நதி அமைக்கப்பட்டது.

இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, குபேர வழிபாடாகும். ஏகாம்பரேஸ்வரர் மற்றும் அம்பாள் சந்நதிகளைச் சுற்றிலும் 12 ராசிக்காரர்களும் வழிபடும் வகையில் 12 தூண்களில் குபேரன் சிலை மீன் ஆசனத்தின் மீது அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இவை அந்தந்த ராசிக்காரர்கள், அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் வழிபடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எங்கும் காணக்கிடைக்காத அபூர்வமான அமைப்பு. அம்பாள் சந்நதிக்கு எதிரே குபேரனுக்கு தனிச் சந்நதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குபேரன், தன் மனைவி சித்திரலேகாவுடன் காட்சியளிக்கிறான். குபேரனின் நவநிதிகளான சங்கநிதி, பதுமநிதி, காமதேனு, கற்பக விருட்சம், மச்சநிதி, நீலநிதி, நந்தநிதி, முகுந்த நிதி, கச்சப நிதி ஆகியோர் பரிவார தேவதைகளாக அமர்ந்திருக்கிறார்கள்.

குபேரன் பரமேஸ்வரனை நோக்கி பல நூறு ஆண்டுகள் கடும் தவமிருந்து அவரது ஆசியைப் பெற்றவர். வடக்கு திசைக்கும், தனம், தானியம் மற்றும் அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகவும், அழகாபுரியின் அரசனாகவும் விளங்குபவர். தீராக்கடன் தொல்லை, பொருளாதார நெருக்கடி, தொழிலில் அபிவிருத்தி முதலான பொருளாதார பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பக்தர்களுக்கு இங்கு நடைபெறும் குபேர வழிபாடு துயர் துடைக்கும் அருமருந்தாக விளங்குகிறது. தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் தவிப்பவர்கள், இங்கு நடைபெறும் பூரட்டாதி நட்சத்திர சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டால், கடன் தீர்ந்து, செல்வாக்கு உயர்ந்து, குபேர சம்பத்து பெறலாம் என்பது ஐதீகம்.

ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு எதிரே உள்ள மலைமீது முருகன் கரும்பை கையில் பிடித்தபடி அருள் பாலிக்கின்றார். இந்த இரு கோயில்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். மலைமீது உள்ள முருகன், தனது அம்மை அப்பனை வணங்கும் வகையில் சிறப்பான கலையம்சத்துடன் விளங்குகிறார். அதாவது ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நந்திவாகனம், முருகன் தன் அம்மையப்பனைக் காண சற்று தலைசாய்த்து வழிவிட்டதாம்! அதன்படி, கோயில் வாயிலில் துவங்கி கருவறை வரை முன்புறமுள்ள அனைத்து நந்திகளும் தலைசாய்த்திருப்பதைக் காணலாம். வேளாண் தொழில் செழிக்கவும், குழந்தை பாக்யம் கிட்டவும், வளம் பெறவும் பங்குனி உத்திரப் பெருநாளில் முருகனுக்கு விரதமிருந்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, சூரிய பூஜை. ஆண்டுதோறும் மாசி 19, 20, 21 தேதிகளில் காலையில் ஏகாம்பரேஸ்வரர்-அம்பாள் மீதும், மாலையில் முருகன் மீதும் சூரிய ஒளி விழுகிறது. இதனையொட்டி இந்த 3 நாட்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. ஒரே நாளில் நடைபெறும் இந்த அற்புதங்கள், பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கின்றன. திருச்சி-சென்னை சாலையில் 44 கி.மீ. தொலைவிலும், பெரம்பலூருக்கு 15 கி.மீ. முன்னதாகவும் கோயிலின் நுழைவாயில் வளைவு உள்ள ஆலத்தூர் கேட் அமைந்துள்ளது. உள்ளே 8. கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செட்டிக்குளம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum