தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிளி இல்லாத ஆண்டாள்

Go down

கிளி இல்லாத ஆண்டாள் Empty கிளி இல்லாத ஆண்டாள்

Post  amma Fri Jan 11, 2013 2:01 pm

ற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம்
திருக்கோயிலுக்குள் ஆண்டாளுக்கு தனிச்சந்நதி உள்ளது. இங்கு ஆண்டாள் நின்ற
திருக்கோலத்தில் கையில் கிளியுடன் எழுந்தருளியுள்ளாள். ஆனால், அமர்ந்த
நிலையில் கையில் கிளியும் இல்லாத திருக்கோலத்தை அதே ஸ்ரீரங்கத்தில்
தரிசிக்கலாம். ஸ்ரீரங்கம் கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள அடையவளைஞ்சான்
வீதியில்தான் இப்படி ஆண்டாள் கோயில் கொண்டுள்ளாள். இந்த அடையவளைஞ்சான்
திருச்சுற்று, தென்மேற்கு மூலையில் வல்லபதேவன் என்ற மன்னனால் ஆண்டாளுக்காக
ஏற்படுத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் தெற்கு ராஜகோபுரத்திலிருந்து பத்து
நிமிட நடை தூரத்தில் இக்கோயிலை அடையலாம். இதனை ‘வெளி ஆண்டாள் சந்நதி’
என்பர். ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி வளைந்தபடி அமைந்திருப்பதால்
அடையவளைஞ்சான் திருவீதி என இத்தெரு பெயர் பெற்றது. இந்த ஆண்டாளின் உற்சவர்
திருமேனி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு உட்புறமாக உள்ள உள் ஆண்டாள் சந்நதியில்
உள்ளது. இக்கோயிலில் ஆண்டாளை தரிசிக்கும்போது நின்ற கோலத்தில் உள்ளதுபோல்
தெரியும். ஆனால் இது வீற்றிருந்த திருக்கோலம். இது ஓர் அபூர்வத்
திருக்கோலம்.

ஆண்டாள் ரங்கநாதருடன் ஐக்கியமாவதற்கு முன்,
ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் திருத்தலம் வந்தபோது கொண்ட கோலம்
இது. ஆண்டாள் இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருவதற்குக் காரணம்
என்ன? ஒருநாள் பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய ரங்கநாதப் பெருமாளாகிய அழகிய
மணவாளன், ‘‘ஆண்டாளை திருவரங்கத்தில் மணப்பேன். நீர் அவளை எம்மிடம்
அழைத்துவாரும்’’ என்று அருளினார். பெரியாழ்வாரும் பெருமாளின் கட்டளைப்படி
தயார் நிலையில் இருந்தார். சாஸ்திர சம்பிரதாயப்படி மாப்பிள்ளை வீட்டார்
பெண்ணை அழைக்கும் நிகழ்ச்சி நடத்துவதுபோல் ஸ்ரீரங்கத்திலிருந்து முத்துச்
சிவிகையுடன் பாகவதர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்தார்கள்.

பாண்டிய
மன்னன் மற்றும் படை சூழ, ஆண்டாளும் பெரியாழ்வாரும் ஸ்ரீரங்கம்
புறப்பட்டார்கள். ஆண்டாள் குழுவினர், ஸ்ரீரங்கம் தலத்தை நெருங்குவதற்குள்
இரவு நேரம் வந்துவிட்டது. ஆண்டாளுடன் வந்தவர்கள் புன்னை, செண்பகம், பாதிரி
மரங்கள் நடுவில் தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கினார்கள். அந்த இடம்தான்
தற்பொழுது ஆண்டாள் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள மேல அடையவளைஞ்சான் பகுதி.
பொழுது புலர்ந்தது. ஆண்டாள், தன் தோழிகளுடன் காவேரி நதியில் நீராடினாள்.
பிறகு, வேதகால முறைப்படி ‘குரிதா’ முறையில் மணப்பெண்ணுக்குத் தலையில்
கொண்டை அலங்காரம் செய்தார்கள். ஆண்டாள், முத்துச்சிவிகையில்
அமர்ந்துகொண்டாள். கோயிலை நோக்கி சிவிகை புறப்பட்டது.

ஆண்டாள்,
மணமகள் திருக்கோலத்தில் அழகிய மணவாளன் சந்நதிக்கு சென்றாள். அழகிய
மணவாளனைக் கண்ணாறக் கண்டாள். தான் அணிந்திருந்த மாலையை மணவாளனுக்குச்
சூடினாள். வேதபாராயணங்கள் முழங்கின. அப்போது ஓர் ஜோதி தெரிந்தது. ஆண்டாள்,
அரங்கனுடன் கலந்தாள். இதனை பெரியாழ்வார் மற்றும் அவருடன் வந்த பாகவதர்கள்,
வேத விற்பன்னர்கள் கண்டு கைகூப்பி தொழுதார்கள். ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த
நிகழ்வு நடந்த சில காலத்திற்குப்பின், ஆண்டாள் காவேரியில் நீராடி,
மணக்கோலத்துடன் புறப்பட்ட இடத்தில் அவளுக்கு ஒரு கோயில் எழுப்பினார்கள்.
அதுதான் வெளி ஆண்டாள் சந்நதி. இங்குதான் ஆண்டாள் வீற்றிருந்த கோலத்தில்
திகழ்கிறாள்.

ஆண்டாள் சூடியிருப்பது கொண்டை அல்ல, கிரீடம்
என்கிறார்கள். இதேபோல் ஆண்டாள் கிரீடம் தரித்த கோலத்தை லால்குடி வட்டம்,
அன்பில் திருத்தலத்தில் அமைந்துள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மட்டுமே
தரிசிக்க முடியும். இத்திருக்கோலத்தைத் திருமணமாகாத பெண்கள் தரிசித்தால்
தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். அடையவளைஞ்சான் தெருவில்
தனித்து கோயில் கொண்டு அமர்ந்திருக்கும் ஆண்டாளை ரங்கநாதரான அழகிய மணவாளன்,
வருடத்திற்கு இருமுறை (ஆடி 18 அல்லது ஆடி 30ல்) காவேரித் தாயாருக்கு
சீர்வரிசை அளித்தபின் இங்கு வந்து ஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு
மூலஸ்தானம் செல்வார்.

இந்தத் திவ்யமான திருக்காட்சியைத்
தரிசித்தால் சுமங்கலிகள் சுகமாக கணவனுடன் நெடுங்காலம் வாழ்வார்கள்; கன்னிப்
பெண்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்பர்.
இத்திருக்கோயிலில் உள்ள முன்மண்டபத்தில் பெரியாழ்வார் மற்றும் கோயில்
அண்ணன் ஆகியோருக்கு வடக்கு நோக்கி தனிச் சந்நதிகள் உள்ளன.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum