தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்-மாங்காடு

Go down

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்-மாங்காடு Empty அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்-மாங்காடு

Post  meenu Fri Jan 18, 2013 12:31 pm

மூலவர் : காமாட்சி அம்மன்
தல விருட்சம் : மாமரம்
ஊர் : மாங்காடு
மாவட்டம் : காஞ்சிபுரம்

தல சிறப்பு:

அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம் இத்தலம்.இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார் எனபது வரலாறு. இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிஷேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.

நடை திறக்கும் நேரம் :

காலை 6 மணி - 1.30 மணி, மாலை 3 - இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும். எல்லா ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பகலில் நடை அடைக்கப்படுவதில்லை. இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது.

வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் (அதாவது ஒரு மண்டலம் ) வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர்.

ஆண்களுக்கும் இது பொருந்தும். புத்திர பாக்கியம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே குழந்தைக்குதொட்டில் கட்ட அன்னை அருள் புரிவாள்.பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும்.பல்லாயிரக்கணக்கோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர்.

உத்தியோக உயர்வு, உடல் சார்ந்த குறைகள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.

ஸ்தல வரலாறு :

ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரம் - ஆதிசங்கரர். இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், "அஷ்டகந்தம்' என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது.

சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனைகளை மட்டும் செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும். இத்திருக்கோயிலில் ஸ்ரீ சக்ரத்திற்கே முக்கிய பிராதானம்.

மூலிகைகளால் ஆனதால் அபிசேகம் கிடையாது.குங்கும அர்ச்சனை விசேசமானது.இந்த அர்த்தமேரு ராஜ யந்திரமாகும்.இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ரயந்திரம் வரையப்பட்டுள்ளது.

இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது.இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள்.

நான்கு அம்பாள் தரிசனம்:

மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம்.

இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள். இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மூலஸ்தானத்திலுள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பம்சம்.

அம்பாளை, சிவன் பூலோகத்திற்கு அனுப்பியபோது அவள் இங்கு தவமிருந்தாள். ஆனால், சிவனது தரிசனம் கிடைக்கவில்லை. எனவே, தீயின் மத்தியில் நின்று பார்த்தாள். அதற்கும் அவர் மசியவில்லை. பின்னர் ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று தவம் செய்ய ஆரம்பித்து, அவரது தரிசனம் பெற்றாள். இறைவனை கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என சிலர் விதண்டாவாதம் பேசுவர்.

இறைதரிசனம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஈசனின் மனைவியே அவரைப் பார்க்க ஒற்றைக்காலில் நிற்க வேண்டி இருக்கிறது என்றால், சாதாரண மானிடர்களான நமக்கு எவ்வளவோ பக்குவம் வேண்டும்! திருமால், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தபோது, சுக்ராச்சாரியார் தடுத்தார்.

அதைக்கேட்காத மகாபலி, திருமாலிடம் கமண்டல நீரை ஊற்றி தாரை வார்த்துக்கொடுக்க முயன்றார். அப்போது, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, கமண்டல நீர் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றார். திருமால் ஒரு தர்ப்பைப்புல்லால் குத்தினார். எனவே, ஒரு கண் பார்வையிழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.

அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள். அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். இவ்வாறு, அம்பிகையை விட தன்னை வேண்டிய பக்தனுக்கே அருளினார் சிவன்.

அன்னையின் தவக்கோலம்:

ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும் வலது காலை இடது காலின் தொடைக்கு மேற்புறமாயும் இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், அழகிய கண்களை மூடிய நிலையிலும் அம்பாள் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடு திருத்தலத்தில் கடும் தவம் புரிந்தார்.இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரியும் அற்புத காட்சி உற்சவ சிற்பமாக உள்ளது.

கணையாழியுடன் பெருமாள்:


சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார். அப்போது மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார்.

எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார். இவரை, "சீர் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள்.

நிறைமணி தரிசனம்:

பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது. ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர்.

புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தபஸ் மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி மூவரும் உலா வருகின்றனர். சப்தமாதர்களில் ஒருத்தியான பிராஹ்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள். தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர். மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது.இதற்கு இடதுபுறம் தபஸ் காமாட்சி சன்னிதி உள்ளது.

திருவிழா:

சித்திரைத் திருவிழா - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர். இத்திருவிழா தவிர தமிழ் ,ஆங்கில புத்தாண்டு தினங்கள் தீபாவளி, பொங்கல் நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி,ஆனித்திருஞ்சனம்ஆகிய நாட்கள் இக்கோயிலில் விசேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நாட்களில் இக்கோயில் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிப்பது சிறப்பு


போக்குவரத்து வசதி :

சென்னை கோயம்பேட்டில் இருந்து குமணன் சாவடி சென்று பின் அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum