தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடும்ப சத்தியாக்கிரகம்

Go down

குடும்ப சத்தியாக்கிரகம் Empty குடும்ப சத்தியாக்கிரகம்

Post  birundha Sat Mar 23, 2013 3:38 pm

சிறை வாழ்க்கையில் முதல் அனுபவம் எனக்கு ஏற்பட்டது 1908-ஆம் ஆண்டில். கைதிகள் அனுசரித்தாக வேண்டிய சில கட்டுத் திட்டங்கள், ஒரு பிரம்மச்சாரி அதாவது புலனடக்கம் செய்துகொள்ள விரும்புகிறவர் தாமாகவே அனுபவிக்க வேண்டியவைகளாக இருந்தன என்பதைக் கண்டேன். உதாரணமாக, அத்தகையதோர் கட்டுத் திட்டம், தினம் கடைசிச் சாப்பாட்டைச் சூரியன் மறைவதற்கு முன்னால் முடித்துக் கொண்டு விடவேண்டும் என்பது. இந்தியக் கைதிகளுக்கோ, ஆப்பிரிக்கக் கைதிகளுக்கோ தேநீரோ அல்லது காப்பியோ கொடுப்பதில்லை. சமைத்த உணவில் வேண்டுமானால் அவர்கள் உப்புச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், ருசியைத் திருப்தி செய்வதற்காக என்று மாத்திரம் அவர்கள் எதையும் சாப்பிடக்கூடாது. எங்களுக்குக் கறிமசாலைப் பொடி கொடுக்கும் படியும் உணவைச் சமைக்கும்போதே அதில் உப்பைச் சேர்த்துக் கொள் அனுமதிக்குமாறும் சிறை வைத்திய அதிகாரியைக் கேட்டேன். அதற்கு அவர் கூறியதாவது: “ருசி பார்த்துச் சாப்பிடுவதற்காக நீங்கள் இங்கே இல்லை. உடல்நலனைப் பொறுத்த வரையில் கறிமசாலைப்பொடி அவசியமே இல்லை. சமைக்கும் போது உப்பைச் சேர்ப்பதற்கும் பின்னால் உப்புப் போட்டுக் கொள்ளுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை”.

அதிகக் கஷ்டத்தின் பேரிலேயே ஆயினும், பின்னால் இந்தத் தடைகளுக்கெல்லாம் விமோசனம் ஏற்பட்டது. ஆனால், அவை இரண்டும் புலனடக்கத்திற்குச் சிறந்த விதிகள். வெளியிலிருந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அநேகமாக வெற்றி பெறுவதில்லை. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் தமக்குத் தாமே விதித்துக் கொண்டவையாக இருப்பின், நிச்சயமாக நல்ல பலனை அளிக்கின்றன. ஆகவே சிறையிலிருந்து விடுதலையானாலும் அவ்விரு விதிகளையும் எனக்கு நானே விதித்துக் கொண்டேன். சாத்தியமான வரையில் தேநீர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். கடைசிச் சாப்பாட்டைச் சூரியன் மறைவதற்கு முன்னால் முடித்து விடுவேன். இவ்விரண்டையும் அனுசரிப்பதற்கு இப்பொழுது எந்த முயற்சியுமே எனக்குத் தேவையில்லை. உப்பை அடியோடு விட்டுவிட வேண்டிய சந்தர்ப்பமும் எனக்கு ஏற்பட்டது. இந்தத் தடையைப் பத்து ஆண்டுகாலம் தொடர்ந்து அனுசரித்து வந்தேன். மனிதனுடைய உணவில் உப்பு அவசியமான பொருள் அல்ல என்று சைவ உணவைப் பற்றிய ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன். உப்பு இல்லாத உணவே உடலின் சுகத்திற்கு நல்லது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இதிலிருந்து பிரம்மச்சாரிக்கு உப்பில்லாத உணவு நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். பலவீனமான உடம்பைக் கொண்டவர்கள் பருப்புவகைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் படித்திருந்ததோடு அதன் உண்மையை அறிந்துமிருந்தேன். எனக்கோ, பருப்பு வகைகளில் அதிகப்பிரியம்.

ரண சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வந்த கஸ்தூரிபாய்க்குத் திரும்பவும் ரத்த நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது. இந்த நோய் சுலபத்தில் குணமாகாது என்றும் தோன்றிற்று. நீர்ச் சிகிச்சையினாலும் குணம் ஏற்படவில்லை. என்னுடைய சிகிச்சை முறைகளை அவள் எதிர்க்கவில்லையாயினும் அவற்றில் அவளுக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனாலும் வெளி வைத்திய உதவி வேண்டும் என்று அவள் கேட்கவே இல்லை. ஆகவே, என் வைத்திய முறைகளெல்லாம் பயன்படாது போய்விட்டதால் உப்பையும் பருப்புவகைகளையும் தள்ளும்படி அவளைக் கேட்டுக் கொண்டேன். தக்க ஆதாரங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி நான் எவ்வளவோ விவாதித்துப் பார்த்தும் இதற்கு அவள் சம்மதிக்க மறுத்து விட்டாள். கடைசியாக அவள் எனக்கு ஒரு சவாலும் விட்டாள். உப்பையும் பருப்பையும் விட்டுவிடுமாறு எனக்கு யாராவது யோசனை கூறினாலும் அவற்றை என்னாலும் விட்டுவிட முடியாது என்றாள். இதைக் கேட்டு நான் வருந்தினேன். என்றாலும் அதே சமயத்தில் மகிழ்ச்சியும் அடைந்தேன். அவளிடம் எனக்குள்ள அன்பைப் பொழிவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்பதே மகிழ்ச்சிக்குக் காரணம். நான் அவளிடம் சொன்னேன்: “நீ தவறாக நினைத்து விட்டாய். நான் நோயுற்று இருந்து, இவற்றையும் மற்றவைகளையும் தவிர்த்து விடுமாறு வைத்தியர் யோசனை கூறினால், கொஞ்சமும் தயங்காமல் அப்படியே செய்வேன்.

அது போகட்டும் வைத்திய ஆலோசனை எதுவும் இல்லாமலேயே, நீ விட்டாலும் விடாது போனாலும், உப்பையும் பருப்புக்களையும் ஓர் ஆண்டுக்கு நான் கைவிடுகிறேன்.” இதைக் கேட்டதும் அவள் திடுக்கிட்டுப் போனாள். மிகுந்த துயரத்தோடு அவள் கூறியதாவது: “தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் இயல்பு தெரிந்திருந்தும் நான் இப்படி உங்களுக்குக் கோபம் மூட்டியிருக்கக்கூடாது. உப்பையும் பருப்பையும் சாப்பிடுவதில்லை என்று உறுதி கூறுகிறேன். கடவுள் ஆணை; உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன். இந்த விரதத்தை மட்டும் நீங்கள் விட்டுவிடுங்கள். இப்படி நீங்கள் என்னைத் தண்டிக்கக் கூடாது.” “உப்பையும் பருப்பையும் சாப்பிடாமல் இருப்பது உனக்கு மிகவும் நல்லது. அவைகள் இல்லாமல் நீ நன்றாகவே இருப்பாய் என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்தவரையில், நான் நிச்சயமாக எடுத்துக் கொண்டுவிட்ட விரதத்தைக் கைவிட முடியாது. இது எனக்கும் நன்மையே செய்வது நிச்சயம். ஏனெனில், ஒரு கட்டுத்திட்டம், அது எக்காரணத்தினால் ஏற்பட்டதாயினும், மனிதருக்கு நல்லதே. ஆகையால், என்னைப்பற்றிக் கவலைப்படாதே. இது எனக்கு ஒரு சோதனை.

அதோடு நமது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இது உனக்கு ஓர் தார்மிக ஆதரவாகவும் இருக்கும்” என்றேன். எனவே, என்னை மாற்றுவதற்கில்லை என்று விட்டு விட்டாள். “நீங்கள் மிகுந்த பிடிவாதக்காரர். யார் சொன்னாலும் கேட்க மாட்டீர்கள்” என்று கூறிக் கண்ணீர் வடித்து ஆறுதல் அடைந்தாள். இந்தச் சம்பவத்தைச் சத்தியாக்கிரகத்திற்கு ஓர் உதாரணமாகவே கொள்ள விரும்புவேன்.என்னுடைய வாழ்க்கையின் இனிமையான நினைவுகளில் இதுவும் ஒன்று. இதற்குப் பிறகு கஸ்தூரிபாயின் தேக நிலை வெகு வேகமாகக் குணமடைந்து வந்தது. இவ்விதம் குணம் ஏற்பட்டது, உப்பும், பருப்பு வகையும் இல்லாத சாப்பாட்டினாலா? அல்லது அதன் பலனாக அவளுடைய ஆகாரத்தில் ஏற்பட்ட மற்ற மாறுதல்களினாலா? வாழ்க்கை சம்பந்தமான மற்ற விதிகளில் சரியாக நடக்கும்படிசெய்வதில் நான் கவனமாக இருந்ததன் காரணமாகவா? அல்லது அந்தச் சம்பவத்தினால் உள்ளத்தில் உண்டான ஆனந்தத்தின் பலனாலா? அப்படித்தான் என்றால் எந்த அளவுக்கு? இதை என்னால் சொல்லிவிட முடியாது. ஆனால், அவள் துரிதமாய் குணமடைந்து வந்தாள். ரத்த நஷ்டம் அடியோடு நின்றுவிட்டது. அரைகுறை வைத்தியன் என்று எனக்கு இருந்த மதிப்பும் அதிகமாயிற்று. என்னைப் பொறுத்த வரையில், உப்பையும் பருப்பையும் தவிர்த்துக்கொண்டதால் நன்மையே அடைந்தேன். விட்டு விட்ட பொருள்களைத் தின்னவேண்டும் என்ற ஆசையும் எனக்கு வரவில்லை. ஒரு வருடமும் விரைவில் கடந்துவிட்டது.

முன்னால் இருந்ததைவிட என் புலன்கள் கட்டுக்கு அடங்கியவைகளாக இருந்ததைக் கண்டேன். இந்தப் பரீட்சை புலனடக்க ஆர்வத்தை அதிகரித்தது. நான் இந்தியாவுக்குத் திரும்பி வெகுகாலம் வரையிலும் உப்பையும் பருப்பு வகைகளையும் தின்னாமலேயே இருந்து வந்தேன். 1914-இல் லண்டனில் இருந்தபோது, ஒரே ஒரு முறை மாத்திரம் அந்த இரண்டையும் நான் சாப்பிட வேண்டியதாகி விட்டது. அந்தச் சந்தர்ப்பத்தைக் குறித்தும், இந்த இரண்டையும் நான் எவ்விதம் திரும்பவும் சாப்பிட ஆரம்பித்தேன் என்பது பற்றியும் பிந்திய அத்தியாயம் ஒன்றில் கூறுகிறேன். தென்னாப்பிரிக்காவில் எனது சகஊழியர்கள் பலரிடத்திலும் கூட, உப்பும் பருப்புமில்லாத உணவை நான் சோதனை செய்து நல்ல பலனையே கண்டிருக்கிறேன். இத்தகைய உணவின் நன்மையைக் குறித்து வைத்திய ரீதியில் இருவகையான அபிப்பிராயங்கள் இருக்கக் கூடும். ஆனால், தார்மிக ரீதியில், தன்மறுப்பு எல்லாமே ஆன்மாவுக்கு நல்லதுதான் என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. புலனடக்கத்துடன் இருப்பவருக்கும், புலன் நுகர்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவருக்கும் எவ்விதம் வாழ்க்கை வழிகளில் வேறுபாடு இருக்குமோ அதே போல, அவ்விரு தரத்தினரின் உணவிலும் வேறுபாடு இருக்கவேண்டும். பிரம்மச்சரியத்தை அடைய விரும்புகிறவர்கள், சுகபோக வாழ்விற்கு ஏற்ற அனுஷ்டானங்களைக் கைக்கொண்டே தங்கள் லட்சியத்தில் தோல்வியை அடைந்துவிடுகிறார்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum