தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போரில் என் பங்கு

Go down

போரில் என் பங்கு Empty போரில் என் பங்கு

Post  birundha Sat Mar 23, 2013 3:10 pm

பாரிஸிலிருந்து லண்டனுக்குத் திரும்பி வர முடியாமல் கோகலே சிக்கிக்கொண்டார் என்று நான் லண்டன் போய்ச் சேர்ந்ததும் அறிந்தேன். தேக சுகத்தை முன்னிட்டு அவர் பாரிஸு க்குப் போயிருந்தார். பாரிஸு க்கும் லண்டனுக்கும் இடையே எல்லாப் போக்குவரத்துமே துண்டிக்கப்பட்டு விட்டதால் அவர் எப்பொழுது திரும்புவார் என்பதைப் பற்றியும் எதுவும் தெரியவில்லை. அவரைப் பார்க்காமல் இந்தியாவுக்குத் திரும்ப நான் விரும்பவில்லை. ஆனால், அவர் எப்பொழுது வருவார் என்பதையும் யாரும் சொல்ல முடியவில்லை. இதற்கு மத்தியில் நான் என்ன செய்வது? போர் சம்பந்தமாக என் கடமை என்ன? என்னுடைய சிறைத் தோழரும் சத்தியாக்கிரகியுமான சோராப்ஜி அடாஜணியா, அப்பொழுது வக்கீல் தொழிலுக்காக லண்டனில் படித்துக்கொண்டிருந்தார். அவர் சிறந்த சத்தியாக்கிரகிகளில் ஒருவராகையால், தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பியதும் என் ஸ்தானத்தை வகிப்பதற்காக அவர் வக்கீல் தொழிலுக்குப் படித்து வர இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டிருந்தார். அவருக்கு ஆகும் செலவுக்கு டாக்டர் பிராண ஜீவன்தாஸ் மேத்தா பணம் கொடுத்து வந்தார். அவருடனும் அவர் மூலமும், இங்கிலாந்தில் அப்பொழுது படித்துக் கொண்டிருந்த டாக்டர் ஜீவராஜ மேத்தாவுடனும் மற்றவர்களுடனும் நான் கலந்து பேசினேன். அவர்களுடன் கலந்து ஆலோசித்து, இங்கிலாந்திலும், அயர்லாந்திலும் இருக்கும் இந்தியரின் கூட்டமொன்று கூட்டப்பட்டது. அக்கூட்டத்தின் முன்பு என் கருத்தைத் தெரிவித்தேன்.

இங்கிலாந்தில் வசித்துவரும் இந்தியர், யுத்தத்திற்குத் தங்களாலான உதவியைச் செய்யவேண்டும் என்று நான் கருதினேன். ஆங்கில மாணவர்கள் ராணுவத்தில் சேவை செய்யத் தொண்டர்களாக முன்வந்திருக்கிறார்கள். அவ்வளவாவது இந்தியரும் செய்ய வேண்டும். இவ்விதமான என்வாதத்திற்குப் பலவிதமான ஆட்சேபங்கள் எழுந்தன. இந்தியருக்கும் ஆங்கிலேயருக்கும் எவ்வளவோ பேதம் இருக்கிறது என்றார்கள். நாம் அடிமைகளாக இருக்கிறோம். அவர்களோ எஜமானர்கள் என்றார்கள்.எஜமானனுக்குத் தேவைப்படும் நேரம் வந்து விடும்போது மாத்திரம் ஓர் அடிமை எஜமானனுடன் எப்படி ஒத்துழைத்து விட முடியும்? எஜமானனுக்கு ஏற்பட்டிருக்கும் அவசியத்தைத் தனக்கு ஒரு வாய்ப்பாக அடிமை பயன்படுத்திக்கொண்டு சுதந்திரமடையப் பார்ப்பது அடிமையின் கடமையல்லவா? இந்த வாதம் நியாயமானதாக அப்பொழுது எனக்குத் தோன்ற வில்லை. இந்தியனுக்கும் ஆங்கிலேயனுக்கும் அந்தஸ்தில் இருக்கும் வித்தியாசத்தை நான் அறிவேன். ஆனால், அடிமை நிலைக்கு நாம் கொண்டு வரப்பட்டு விட்டோம் என்பதை நான் நம்பவில்லை.தவறுகளுக்கெல்லாம் தனிப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள்தான் காரணமே அன்றிப் பிரிட்டிஷ் முறை அல்ல என்றும், அவர்களையும் அன்பினால் மாற்றி விடலாம் என்றும் நான் எண்ணினேன். பிரிட்டிஷாரின் ஒத்துழைப்பினாலும் உதவியினாலுமே நமது அந்தஸ்தை நாம் உயர்த்திக் கொள்ளுவதாக இருந்தால், அவர்களுக்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்குப் பக்கத் துணையாக இருந்து அவர்களுடைய தயவைப் பெற வேண்டியது நமது கடமை.

பிரிட்டிஷ் முறையே தவறானதாக இருந்தாலும், அது இன்று எனக்குத் தோன்றுவதுபோல், சகிக்க முடியாததாக அப்பொழுது எனக்குத் தோன்றவில்லை. ஆனால், பிரிட்டிஷ் முறையில் எனக்கு நம்பிக்கை இல்லாது போய் விட்டதால் இன்று நான் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கிறேன் என்றால், பிரிட்டிஷ் ஆட்சி முறையில் மாத்திரமேஅன்றி அதன் அதிகாரிகளிடமும் நம்பிக்கையைஇழந்துவிட்ட அந்த நண்பர்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்? இந்தியர் கோரிக்கைகளைக் குறித்துத் தைரியமாகக் கூறுவதற்கும், இந்தியரின் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளுவதற்கும் ஏற்ற சமயம் அதுதான் என்று என் யோசனையை எதிர்த்த நண்பர்கள் கூறினார்கள். இங்கிலாந்தின் கஷ்டத்தை நமக்கு ஏற்ற வாய்ப்பாக மாற்றிக் கொண்டுவிடக்கூடாது என்று நான் எண்ணினேன். போர் நடந்துகொண்டிருக்கும் வரையில் நமது கோரிக்கைகளை வற்புறுத்தாமலிருப்பதே அதிக யோக்கியமானது, முன்யோசனையோடு கூடியது என்றும் கருதினேன். ஆகையால், நான் கூறிய யோசனையை வலியுறுத்தித் தொண்டர்களாகச் சேர முன்வருகிறவர்களை வருமாறு அழைத்தேன். அநேகர் முன் வந்தார்கள். அப்படி வந்தவர்களில் எல்லா மாகாணத்தினரும், மதத்தினரும் இருந்தனர். இந்த விவரங்களை எல்லாம்எடுத்துக் கூறி லார்டு கிரிவேக்குக் கடிதம் எழுதினேன்.

எங்கள் சேவையை ஏற்றுக்கொள்ளும் முன்பு நாங்கள் வைத்தியப் படை வேலைகளில் பயிற்சிபெறுவது அவசியம் என்றால் அப்பயிற்சியைப் பெறவும் தயாராக இருக்கிறோம் என்று அதில் அறிவித்தேன். கொஞ்சம் தயக்கத்திற்குப்பிறகு லார்டு கிரிவே எங்கள் சேவையை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தார். நெருக்கடியான அந்த நேரத்தில் சாம்ராஜ்யத்திற்கு எங்கள் சேவையை அளித்ததற்காக நன்றியும் தெரிவித்தார்.காயம்பட்டவர்களுக்கு முதல் வைத்திய உதவி செய்யும் பயிற்சியைப் பிரபலமான டாக்டர் காண்ட்லீயின் ஆதரவில் தொண்டர்கள் பெற்றனர். ஆறு வாரக்குறுகிய காலப் பயிற்சியே அது. ஆனால், முதல் உதவி சம்பந்தமான எல்லாமே அதில் கற்றுக் கொடுக்கப்பட்டது. எங்கள் வகுப்பில் நாங்கள் எண்பது பேர் இருந்தோம். ஆறுவாரங்களில் எங்களுக்குப் பரீட்சை நடந்து ஒருவர் தவிர மற்றெல்லோரும் தேறிவிட்டோம். அவர்களுக்கு ராணுவக் கவாத்து முதலிய பயிற்சிகளுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்தது. இந்த வேலை கர்னல் பேக்கரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த நாட்களில் பார்ப்பதற்கு லண்டன் அற்புதக் காட்சியாக இருந்தது.

மக்களிடையே பீதியே இல்லை. ஆனால், தங்களாலியன்ற உதவியைச் செய்யவேண்டும் என்பதில் எல்லோரும் சுறுசுறுப்பாக இருந்தனர். வயது வந்த திடமான ஆண்களெல்லாம், போரில் சிப்பாய்களாகப்பயிற்சி பெறப் போய்விட்டனர். ஆனால்,வயோதிகர்களும், பலவீனர்களும், பெண்களும் என்ன செய்வது? அவர்கள் செய்ய விரும்பினால் அவர்களுக்கும் போதுமான வேலைகள் இருந்தன. துணிகளை வெட்டி ஆடைகள் தயாரிப்பது, காயமடைந்தவர்களுக்குக் கட்டுக் கட்டுவது போன்ற வேலைகளில் அவர்கள் ஈடுபட்டார்கள். லைஸியம் என்ற பெண்களின் சங்கம், தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடைகளைச் சிப்பாய்களுக்குத் தைத்துக் கொடுப்பது என்ற வேலையை ஏற்றுக்கொண்டது. இந்தச் சங்கத்தில் ஸ்ரீமதி சரோஜினி நாயுடு ஓர் உறுப்பினர். இவர் அவ்வேலையில் முழு மனத்துடன் ஈடுபட்டிருந்தார். முதன் முதலாக அப்பொழுது தான் அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. தைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த ஒரு துணிக் குவியலை அவர் என்னிடம் கொடுத்து அவைகளை எல்லாம் தைத்துக் கொண்டு வந்து தம்மிடம் கொடுக்கும்படி சொன்னார்.அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன். முதல் உதவிக்கு நான்பயிற்சி பெற்று வந்த காலத்தில் நண்பர்களின்உதவியைக் கொண்டு எவ்வளவு ஆடைகளைத் தைக்க முடியுமோ அவ்வளவையும் தைத்துக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சுதந்திர போரில் தமிழர் பங்கு
» சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு
» பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) 27 தலைவர்கள் பங்கு பெறும் உச்சிமாநாடு ஒரு முற்றுகைக்குட்பட்ட கோட்டையைப்போல் உள்ளது. இம்மாநாட்டில் பங்கு பெறுவோர் பலர் பதவியில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளனர். ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல சிக்கன நடவடிக்கைகள
» விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்
» சுதந்திரப் போரில் தமிழ் சினிமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum