தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குட்டிச் சத்தியாக்கிரகம்

Go down

குட்டிச் சத்தியாக்கிரகம் Empty குட்டிச் சத்தியாக்கிரகம்

Post  birundha Sat Mar 23, 2013 3:09 pm

இவ்விதம் கடமை என்று கருதியதனால் போரில் நான் கலந்து கொண்டேன். ஆயினும், அதில் நான் நேரடியாக ஈடுபடமுடியாது போயிற்று. அத்தோடு அந்த நெருக்கடியான நிலைமையிலும் கூட ஒரு குட்டிச் சத்தியாக்கிரகம் என்று சொல்லக் கூடியதையும் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. எங்கள் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டுப் பதிவானவுடன் எங்களுக்குப் பயிற்சியளிப்பதைக் கவனிப்பதற்காக ஓர் அதிகாரியும் நியமிக்கப்பட்டார் என்றுநான் முன்பே கூறியிருக்கிறேன். இந்த அதிகாரி, பயிற்சி சம்பந்தமான விஷயங்களில் மட்டுமே எங்களுக்குத் தலைவர் என்றும், மற்ற விஷயங்களிலெல்லாம் அப்படைக்கு நானே தலைவன் என்றும் அதனுடைய உள் கட்டுத் திட்டங்களைப் பொறுத்தவரை எனக்கே நேரடியான பொறுப்பு உண்டு என்றும் நாங்கள் எல்லோரும் எண்ணியிருந்தோம். அதாவது, அந்த அதிகாரி இப்படை விஷயத்தில் என் மூலமேஎதையும் செய்ய வேண்டும் என்று கருதினோம். ஆனால், இந்தப்பிரமை இருந்து வர அந்த அதிகாரி ஆரம்பத்திலிருந்தே விட்டுவைக்கவில்லை.

ஸ்ரீசோராப்ஜி அடாஜணியா மிக்க புத்திக் கூர்மை உள்ளவர். அவர் என்னை எச்சரிக்கை செய்தார்: அந்த ஆசாமி விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள்.நம் மீது ஆதிக்கம் செலுத்த அவர் விரும்புகிறார் என்று தோன்றுகிறது. அவர் கட்டளையை ஏற்று நடக்க நாங்கள் தயாராயில்லை. நமக்குப் போதிப்பவர் என்று அவரை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார். ஆனால், நமக்குப் போதிப்பதற்கென்று அவர் நியமித்திருக்கும் இளைஞர்கள்கூட, நமக்குத் தாங்கள் எஜமானர்களாக வந்திருப்பதாக எண்ணிக் கொள்ளுகின்றனர் என்றார். அந்த இளைஞர்கள் ஆக்ஸ்போர்டு மாணவர்கள். எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வந்திருந்தனர். அந்தத் தலைமை அதிகாரி, அவர்களை எங்கள் படைப்பிரிவின் தலைவர்களாக நியமித்தார். தலைமை அதிகாரியின்மிதமிஞ்சிய செய்கைகளை நானும் கவனிக்காமலில்லை. என்றாலும், அதைப் பற்றிக் கவலைப் படவேண்டாமென்று சோராப்ஜியிடம் கூறி அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால், அவர் எளிதில் சமாதானமடைந்து விடுகிறவர் அல்ல. நீங்கள் எல்லோரையும் நம்பிவிடுகிறீர்கள்.இவர்கள் பசப்புப் பேச்சினால் உங்களை ஏமாற்றி விடுவார்கள். ஏமாற்றி விட்டார்கள் என்பது கடைசியாக உங்களுக்குத் தெரியும்போது சத்தியாக் கிரகம் செய்யும்படி எங்களிடம் கூறுவீர்கள். இவ்விதம் நீங்கள் துன்பப்படுவதோடு உங்களோடு சேர்ந்து நாங்கள் எல்லோரும் துன்பப்பட நேரும் என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

நீங்கள் என்னுடன் சேர்ந்துவிட்டபிறகு துன்பத்தைத் தவிர வேறுஎதை எதிர்பார்க்கிறீர்கள்?சத்தியாக்கிரகி ஏமாற்றப்படவே பிறந்திருக்கிறான். இப்பிரதம அதிகாரி நம்மை ஏமாற்றட்டும். ஏய்ப்பவனே முடிவில் ஏமாற்றப்படுகிறான் என்று உங்களுக்கு எத்தனையோ முறை நான் சொல்லவில்லையா? என்றேன். சோராப்ஜி உடனே உரக்கச் சிரித்தார். அப்படியானால் சரி, தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வாருங்கள். என்றாவது ஒரு நாள் நீங்கள் சத்தியாக்கிரகத்திலேயே மரணமடைவீர்கள். அப்பொழுது எங்களைப்போன்ற அப்பாவிகளையும் உங்களுக்குப் பின்னால் இழுத்துக்கொண்டு போவீர்கள் என்றார். இந்தச் சொற்கள்,ஒத்துழையாமையைக் குறித்துக் குமாரி எமிலி ஹாப்ஹவுஸ் எனக்கு எழுதியதை என் நினைவிற்குக் கொண்டு வருகின்றன. சத்தியத்திற்காக என்றாவது ஒரு நாள் நீங்கள் தூக்குமேடைக்குப் போக நேர்ந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கடவுள் உங்களுக்குச் சரியான வழியைக் காட்டிப் பாதுகாப்பாராக என்று அவர் எழுதினார். தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டவுடனேயே எனக்கும் சோராப்ஜிக்கும் இடையே மேற்கண்ட பேச்சு நடந்தது. சில தினங்களுக்கெல்லாம் அவருடன் எங்களுக்கிருந்த சம்பந்தம் துண்டித்துப் போய்விடும் கட்டம் ஏற்பட்டது. பதினான்கு நாள் உண்ணாவிரதத்தில் இழந்த பலத்தை நான்இன்னும் பெற்றுவிட வில்லை. எனினும் கவாத்தில் நான் பங்கெடுத்துக் கொண்டதோடு நான் குடியிருந்த இடத்திலிருந்து அதற்கென குறிப்பிட்டிருந்த இடத்திற்கு இரண்டு மைல் தூரம்நடந்தே போவேன். இதனால் நுரையீரலில் புண் ஏற்பட்டு நான் நோய்வாய்ப்பட்டேன். இந்த நிலைமையில் வாரக் கடைசியில் நடக்கும் முகாம்களுக்கும் போகவேண்டியிருந்தது. மற்றவர்கள் அங்கேயே தங்கிவிடுவார்கள்; நான் மட்டும் வீடு திரும்புவேன். இங்கேதான் சத்தியாக்கிரகத்திற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.

தலைமை அதிகாரி தம்முடைய அதிகாரத்தைக் கண்டபடி எல்லாம் பிரயோகிக்க ஆரம்பித்தார். ராணுவ சம்பந்தமானது, ராணுவ சம்பந்தமில்லாதது ஆகிய எல்லா விஷயங்களிலும் அவரே எங்களுக்குத் தலைவர் என்று நாங்கள் அறிந்து கொள்ளும்படி அவர் செய்ததோடு, தமது அதிகாரம் எப்படி இருக்கும் என்பதையும் எங்களுக்குக் காட்டத் தொடங்கிவிட்டார். உடனே சோராப்ஜி என்னிடம் வந்தார். அந்த அதிகாரியின் எதேச்சாதிகாரத்திற்கு உடன் பட்டுவிட அவர் கொஞ்சங்கூடத் தயாராயில்லை. அவர் சொன்னதாவது: எங்களுக்கு வரும் உத்தரவுகள் எல்லாம் உங்கள் மூலமே வரவேண்டும். நாங்கள் இன்னும் பயிற்சி முகாமிலேயே இருக்கிறோம். இப்பொழுதே எங்களுக்கு எல்லாவித அபத்தமான உத்தரவுகள் எல்லாம் இடப்படுகின்றன. நமக்கும், நமக்கு இடையே சொல்லிக் கொடுப்பதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர்களுக்கும், எரிச்சலை மூட்டும் பாரபட்சமான வேற்றுமைகளெல்லாம் காட்டப்படுகின்றன. இதைக் குறித்துத்தலைமை அதிகாரி உடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். இல்லையானால் எங்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது. நம் படையில் சேர்ந்திருக்கும் இந்திய மாணவர்களும் மற்றவர்களும், அபத்தமான உத்தரவுகளுக்கெல்லாம் கீழ்படியப் போவதில்லை. சுயமரியாதையை முன்னிட்டு மேற்கொண்டு இருக்கும் ஒரு கடமையில் சுயமரியாதையை இழப்பது என்பதைச் சகித்துக் கொண்டிருக்கவே முடியாது.

தலைமை அதிகாரியிடம் போனேன்.எனக்கு வந்திருக்கும் புகார்களைக் குறித்து அவரிடம் கூறினேன். இப்புகார்களை எழுத்து மூலம் தமக்குத் தெரிவிக்கும்படி அவர் சொன்னார். அதோடு, இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் படைப் பகுதித் தலைவர்கள் மூலம் புகார்களைத் தெரிவிக்க வேண்டும்.அவர்கள் அவற்றை எனக்கு அறிவிப்பார்கள். இதுதான் புகார்களை அனுப்புவதற்கான சரியான வழி என்பதைப் புகார் கூறுவோர் அறியச் செய்யுங்கள் என்றும் அவர் எனக்குக் கூறினார். இதற்கு நான், எனக்கு அதிகாரம் எதுவும் இருப்பதாக நான் உரிமை கொண்டாடவில்லை. ராணுவ ரீதியில் மற்றவர்களைப் போலவே நானும். ஆயினும், இத்தொண்டர் படையின் தலைவன் என்ற முறையில் அவர்கள் பிரதிநிதியாக நடந்துகொள்ள உத்தியோகச் சார்பற்ற முறையில் நான் அனுமதிக்கப்படுவேன் என்று நம்பி வந்தேன் என்று சொன்னேன். என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட குறைகளையும் கோரிக்கைகளையும் எடுத்துக் கூறினேன். படையைச் சேர்ந்தவர்களின்உணர்ச்சியைச் சிறிதும் மதிக்காமலேயே படைப்பகுதித் தலைவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களைஎடுத்துவிட்டுத் தலைமை அதிகாரியின்அங்கீகாரத்திற்கு உட்பட்டுப் படையினரே படைப் பிரிவுத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும் என்பவையே அந்தக் குறைகளும் கோரிக்கைகளும். இது தலைமை அதிகாரிக்குப் பிடிக்கவில்லை. படையினரே படைப் பகுதித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுவது என்பது எல்லாவித ராணுவக் கட்டுத் திட்டங்களுக்கும் விரோதமானது என்றார். நியமிக்கப்பட்டுவிட்டவர்களை நீக்கி விட வேண்டும் என்று கேட்பது எல்லாக் கட்டுத் திட்டங்களையும் கவிழ்ப்பதாகும் என்றும் சொன்னார்.

எனவே, நாங்கள் ஒரு கூட்டம் போட்டுப் படையிலிருந்து விலகிக்கொண்டு விடுவது என்று தீர்மானித்தோம். சத்தியாக் கிரகத்தினால் ஏற்படக் கூடிய மோசமான விளைவுகளைக் குறித்து எல்லோருக்கும் எடுத்துக் கூறினேன். ஆயினும் மிகப் பெரும் பகுதியினர் தீர்மானத்தை ஆதரித்தார்கள். இதுவரையில் நியமிக்கப்பட்டிருக்கும் கார்ப்பொரல்களை நீக்காவிடில், தங்கள் சொந்தக் கார்ப்பொரல்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளப் படையினருக்குச் சந்தர்ப்பம் அளிக்காது போனால், இதைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டும் கவாத்துக்களுக்கும், வாரக் கடைசி முகாம்களுக்கும் போகாமல் இருக்கவே நேரும்என்று தீர்மானம் கூறியது. பிறகு, நான் தலைமை அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினேன். என் யோசனையை நிராகரித்து அவர் எழுதியது எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கிவிட்டது என்பதை அதில் கூறினேன். அதிகாரம் செலுத்த வேண்டும் என்னும் ஆசை எதுவும் எனக்கு இல்லை என்றும், சேவை செய்ய வேண்டும் என்றே நான் மிகுந்த ஆர்வத்துடன்இருப்பதாகவும் அவருக்கு உறுதி கூறினேன். என் யோசனையைப் போல் முன்னால் நடந்தது ஒன்றையும் அவருக்கு எடுத்துக் காட்டினேன். போயர் யுத்தத்தின் போது தென்னாப்பிரிக்க இந்திய வைத்தியப் படையில் உத்தியோக ஸ்தானம் எதையும் நான் வகிக்காதிருந்தாலும், கர்னல் கால்வேக்கும் படைக்கும் எந்த விதமான தகாராறுமே இருந்ததில்லை என்றும், படையினரின் கருத்தைத் தெரிந்து கொள்ளுவதற்காக என்னைக்கலந்து ஆலோசிக்காமல் அக் கர்னல் எதுவுமே செய்ததில்லை என்றும் குறிப்பிட்டேன். முந்திய நாள் மாலையில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் பிரதி ஒன்றையும் அக்கடிதத்தோடு அனுப்பினேன்.

அந்த அதிகாரியின் விஷயத்தில் இக்கடிதம் எந்த நல்ல பலனையும் உண்டாக்கவில்லை. கூட்டம் போட்டதும், தீர்மானம் செய்ததும் கட்டுத் திட்டங்களைமீறிய பெருங் குற்றங்கள் என்று அவர் கருதினார். அதன்பேரில் இந்திய மந்திரிக்குஒரு கடிதம் எழுதினேன். எல்லா விவரங்களையும் அவருக்குத் தெரிவித்ததோடு தீர்மானத்தின் பிரதி ஒன்றையும் அனுப்பினேன். அவர் எனக்கு எழுதிய பதிலில், தென்னாப்பிரிக்காவில் நிலைமை வேறு என்றுவிளக்கியிருந்தார். விதிகளின்படி, படைப்பிரிவுத் தலைவர்கள் தலைமை அதிகாரிகளினாலேயே நியமிக்கப்படுகின்றனர் என்பதை என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஆனால், இப்பிரிவுத் தலைவர்களை இனி நியமிக்கும்போது தலைமை அதிகாரி என் சிபாரிசைக் கவனிப்பார் என்றும் எனக்கு உறுதி கூறினார். இதற்குப் பிறகு எங்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து ஏராளமாக நடந்தது. ஆனால், கசப்பான இக்கதையை நீட்டிக்கொண்டு போக நான் விரும்பவில்லை. இந்தியாவில் தினந்தோறும் நான் அடைந்துவரும் அனுபவத்தை ஒத்ததாகவே அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவமும் இருந்தது என்று சொல்லுவதே போதும். மிரட்டல்களினாலும் சாதுர்யத்தினாலும் தலைமை அதிகாரி எங்கள் படையைச் சேர்ந்தவர்களிடையே பிளவைஉண்டாக்கி விட்டார். தீர்மானத்திற்குச் சாதகமாக வோட்டு செய்திருந்தவர்களில் சிலர், தலைமை அதிகாரியின் மிரட்டல்களுக்கு அல்லது வற்புறுத்தல்களுக்கு உடன்பட்டுப்போய்த் தங்கள் வாக்குறுதியையே மீறிவிட்டனர்.

அந்தச் சமயத்தில், எதிர்பாராதவிதமாக காயமடைந்த சிப்பாய்கள் ஏராளமாக நெட்லி வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குப் பணிவிடை செய்ய எங்கள் படையின் சேவை கோரப்பட்டது. தலைமை அதிகாரியின் வற்புறுத்தலுக்கு உடன்பட்டவர்கள் நெட்லிக்குப் போனார்கள். மற்றவர்கள் போக மறுத்துவிட்டனர். அப்பொழுது நான் படுத்த படுக்கையாக இருந்தேன். என்றாலும், அப்படையைச் சேர்ந்தவர்களுடன்கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டு இருந்தேன். உதவி இந்திய மந்திரி ஸ்ரீராபர்ட்ஸ், அந்த நாட்களில் பன்முறை என்னைப் பார்க்க வந்து எனக்குக் கௌரவம் அளித்தார். மற்றவர்களையும் சேவை செய்யப் போகுமாறு நான் தூண்ட வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் ஒரு யோசனையும் கூறினார். நாங்கள் ஒரு தனிப்படையாக இருக்க வேண்டும் என்றும், நெட்லிவைத்தியசாலையில் இப்படை அங்கிருக்கும் தலைமை அதிகாரிக்கு மாத்திரமே பொறுப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் சொன்னார். அப்படிச் செய்வதால் சுயமரியாதையை இழப்பதென்பதும் இல்லை. அரசாங்கத்தையும் சமாதானப்படுத்தியதாகும்; ஆஸ்பத்திரிக்கு வரும் காயமடைந்த ஏராளமானவர்களுக்கு உதவியான சேவை செய்வதாகவும் ஆகும் என்பதே அவர் கூறிய யோசனை. இந்த யோசனை எனக்கும் என் தோழர்களுக்கும் பிடித்திருந்தது. இதன் பலனாக நெட்லிக்குப் போகாமல் இருந்து விட்டவர்களும் அங்கே சென்றனர். நான் மாத்திரம் போகவில்லை. படுத்த படுக்கையாக இருந்து கொண்டு என்னால் ஆனதைச் செய்து வந்தேன்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum