தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீதி கிடைக்கா விட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன்

Go down

நீதி கிடைக்கா விட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன்  Empty நீதி கிடைக்கா விட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன்

Post  ishwarya Wed Mar 13, 2013 1:23 pm

சென்னை : ‘விஸ்வரூபம்’ படத்துக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால், இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று கமல்ஹாசன் சொன்னார்.
‘விஸ்வரூபம்’ படத்தை திரையிட விதிக்கப்பட்ட தமிழக அரசு தடையை, நேற்று முன்தினம் இரவு ஐகோர்ட் ரத்து செய்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:

எனக்கு ராசியில் நம்பிக்கை கிடையாது. அன்பு மேல் நம்பிக்கை உண்டு. பழமை பிடிக்கும். நான் வாழ்ந்த வீடு இது. எனவேதான் அசவுகரியமாக இருந்தாலும் கூட, நிருபர்களை இங்கு சந்தித்து பேசுகிறேன். எனக்கும், சகோதரர் சந்திரஹாசனுக்கும் 18 வருடங்கள் வித்தியாசம். அவருக்கு 77. எனக்கு 58. அவர்தான் என்னை வளர்த்தார். படத்துக்கும் அவர் பார்ட்னர். ஆனால், சம்பளம் வாங்கியதில்லை.

இப்போது ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடைக்கு தடை. அந்த தடைக்கு தடை என்று போய்க்கொண்டே இருக்கிறது. எனக்கு காரணம் விளங்கவில்லை. புரிந்துகொள்ள முயற்சித்தால், எங்கே நான் அரசியல்வாதி ஆகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. இன்று ‘விஸ்வரூபம்’ படம் திரையரங்குகளில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. ரசிகர்கள் திரையரங்குகளை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். எனது நற்பணி மன்றங்களில், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சகோதரர்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னவன் நான். சினிமா என் தொழில். நான் ஒரு கலைஞன். என்னிடம் திறமையும், அதே நேரத்தில் திமிரும் இருக்கிறது. இது எனக்கு கற்றுக்கொடுத்த ஆசான்கள் மூலம் வந்தது.

‘விஸ்வரூபம்’ படத்துக்கு ஏற்பட்டது நான் சந்திக்கும் மூன்றாவது பெரிய பிரச்னை. ‘ராஜபார்வை’ படம் உருவான நேரத்தில், நான் எல்லாவற்றையும் இழந்து நின்றேன். பிறகு ஒரு படத்துக்கு பிரச்னை வந்தது. அதுவும் என்னால்தான் ஏற்பட்டது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று புரிந்துகொண்டேன். இப்போது ‘விஸ்வரூபம்’ பிரச்னை.
என் படத்தின் கதைக்களம் நடப்பது ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலும். இதில் இந்திய முஸ்லீம்களை நான் கேலி செய்யவில்லை. நானும், என் முஸ்லீம் சகோதரர்களும் ஒரு கருவிகளாக்கப்பட்டு விட்டோம் என்றே நினைக்கிறேன். என் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றபோது, போலீசாரால் வெளியே அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு நான் பிலிம் செலவு செய்துள்ளேன். வெற்றிகரமாக ஓடும் என்று நம்பி, என் வியாபார அனுபவத்தை வைத்து, எல்லா பணத்தையும் முதலீடு செய்துள்ளேன்.

எனக்கு சொத்துக்கள் கிடையாது. சென்னையிலுள்ள சொத்துக்கள் முழுவதையும் இந்தப் படத்துக்கு பண முதலீடு செய்த ஒருவரிடம் எழுதிக் கொடுத்துவிட்டேன். வட்டியுடன் சேர்த்து அந்தப் பணத்தை அவரிடம் நான் திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் இந்த வீடு எனக்கு திரும்பக் கிடைக்கும். ரிலீஸ் தேதி கடந்துகொண்டே போனால், இந்த வீடு எனக்கு இல்லை. இதையும் நான் சிரிப்புடன்தான் சொல்கிறேன். என் வீட்டையும், குடும்பத்தாரையும் பொறுத்தவரை பணம் முக்கியம் இல்லை.

‘தனி மனிதனும், 100 கோடியும்தான் முக்கியமா?’ என்று மாண்புமிகு நீதிபதி அவர்கள் கேட்டாராம். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இந்தப் படத்தால் நாட்டின் ஒற்றுமை பாதிக்கும் என்கிறார்கள். நான் முன்பே சொன்னது போல, எனக்கு பணம் முக்கியம் இல்லை. நாட்டின் ஒற்றுமைதான் முக்கியம். அதற்காக இதோ என் சொத்துக்கள் முழுவதையும் இழக்கத் தயார். எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு நிறைய ரசிகர்களின் வீடு இருக்கிறது. அங்கு நான் உட்கார்ந்து சாப்பிடலாம்.

நான் தனி மனிதன் அல்ல. என்னை வீழ்த்தி விடலாம் என்று எண்ணாதீர்கள். நான் வீழ்ந்தாலும் விதையாகத்தான் வீழ்வேன். மரமாக வளர்வேன். தனி மரமாக அல்ல. அதுவும் சோலைவனமாகும். மரங்களில் பல சுதந்திரப் பறவைகள் வந்து அமரும். நிறைய விதைகள் விழும். ஆனால், முதல் விதை நான் போட்டது. ‘தேவர் மகன்’ படத்தில் நடிகர் திலகம் என்னிடம் பேசிய வசனத்தை இப்போது நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன்.

எனக்கு அரசியல், மதம் கிடையாது. பல முதல்வர்கள் என் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார்கள். நானும் மனிதநேயம் பாதிக்கப்படாமல், எனக்குத் தோன்றிய கருத்துகளை சொல்லியிருக்கிறேன். மதச்சார்பற்ற ஒரு இடம் எனக்கு வேண்டும். அது தமிழகமாக இல்லாவிட்டால், மதச்சார்பற்ற மாநிலம் இந்தியாவில் எங்கு இருக்கிறதோ அங்கு சென்று குடியேறுவேன். அங்கும் எனக்கு இடம் கிடைக்கவில்லை என்றால், இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு சென்று குடியமர்வேன். ஒழுங்காக வருமான வரி செலுத்துபவன் நான். அதனால், என் பிடரியை யாராவது பிடித்து இழுப்பார்கள் என்ற பயம் எனக்கு இல்லை. நான் யாருக்கும் கடன் வைக்க மாட்டேன்.

‘உலக நாயகன் என்று வைத்துக்கொண்டு, உள்ளூரில் ஏன் இருக்கிறாய்?’ என்று அடிக்கடி என் சகோதரர் கேட்பார். ‘திரைக்கடலோடியும் திரவியம் தேடு’ என்பார்கள். தமிழர்கள் என் உயிர். ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்பார்கள். என் உயிரை மட்டுமல்ல, என் உடலையும் இந்த மக்களுக்குத் தான் கொடுத்திருக்கிறேன். வெற்றி, தோல்வியை ஒரே மன நிலையில் பார்ப்பவன் நான். நடிகையர் திலகம் சாவித்திரி, காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகர் திலகம், எம்.ஜி.ஆர் போன்றோர் என்னை கைப்பிடித்து உயரே தூக்கிவிட்டவர்கள். அவர்களால் வாழ்க்கையில் படியேறி வந்த பிள்ளை நான். எனவேதான் எனக்கு எந்த பயமும் இல்லை.

இன்னும் சொல்வதாக இருந்தால், எனக்கு மதம் இல்லை. குலம் இல்லை. இப்போது பணமும் இல்லை. ஆனால், என் திறமை என்னிடம் இருக்கும். இதை சொல்ல வேண்டியது என் கடமை. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று நம்புகிறேன். நீதி தர மறுப்பதும், தாமதப்படுத்துவதும் ஒன்றுதான். எனக்குக் கிடைக்க வேண்டிய நீதி தாமதப்பட்டு விட்டது. கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

கமல்ஹாசனுக்கு திரையுலகைச் சேர்ந்த பலர் நேற்றும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். எஸ்.ஏ.ராஜ்கண்ணு: கமல்ஹாசன் நடித்த ‘16 வயதினிலே‘, ‘மகாநதி‘ படங்களைத் தயாரித்தேன். தற்போது ‘16 வயதினிலே‘ படத்தை டிஜிட்டலில் மாற்றி வருகிறேன். விரைவில் அப்படம் ரிலீசாகும். அதன்மூலம் கிடைக்கும் வசூலில் 70 சதவீதத்தை கமலுக்கு அளிக்கத் தயாராக இருக்கிறேன். சினிமாவையே உயிர்மூச்சாக நினைத்து வாழும் அவருக்கு ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் அல்ல, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக இதைச் சொல்கிறேன்.

இயக்குனர் அமீர்: கமல்ஹாசன் வருத்தத்துடன் பேட்டியளித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. கமல் போன்ற நிதானமான கலைஞன் தமிழகத்தை மதசார்புள்ள மாநிலமாகக் கருதக்கூடாது. நான் உட்பட தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் தமிழகத்தை மதசார்பற்ற மாநிலமாகவும் இந்தியாவை மதசார்பற்ற நாடாகவும்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே, தாங்கள் அவசரப்பட்டு எந்தவித முடிவும் எடுக்கவேண்டாம் என்றும் ஒரு படைப்பாளியாக, சக மனிதனாக தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
அர்ஜுன்: கமல், சினிமாவில் தான் சம்பாதித்த சொத்தையெல்லாம் சினிமாவுக்கே திருப்பித் தந்தவர். நாட்டின் ஒற்றுமைக்காக தன் சொத்துக்களை இழக்க தயார் என்கிறார்.

அவரது துணிச்சலும், தியாகமும் யாருக்கும் வராது. அவருக்கு இப்படி ஒரு நிலைமை என்கிறபோது கண்ணீர் வருகிறது. அவருக்கே இப்படி என்றால் நாங்கள் எந்த நிலை அடைவோம். இப்போதுள்ள சூழ்நிலைகளை பார்க்கும்போது இனி தமிழ் நாட்டில் சினிமா எடுப்பதே கஷ்டமாக இருக்கும் போலிருக்கிறது. கமலுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எதற்கும் கலங்காதீர்கள். நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்.

விக்ரமன்: கமலுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை வேதனை அளிக்கிறது. கமல் ஒரு ஒப்பற்ற கலைஞன். மதசார்பற்ற கலைஞன். யாருடைய மனதும் புண்படக் கூடாது என்கிற எண்ணம் கொண்டவர். அவரை புண்படுத்தி பார்க்க வேண்டாம். வசந்த்: தமிழ் சினிமாவை உலகதரத்துக்கு கொண்டு செல்லும் ஒரு மகா கலைஞனை காயபடுத்த வேண்டாம். மற்ற மாநிலங்களில் விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ளது. அங்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும்போது தமிழகம் இந்தப் படத்தை எப்போது பார்க்க விரும்புகிறது என்று தெரியவில்லை.

மணிசங்கர் அய்யர் கண்டனம்

படத்துக்கு தணிக்கை செய்யப்பட்ட பிறகு தடை என்பது கூடாது. கமலஹாசன் மதசார்பற்ற மனிதர். அவருக்கு இந்த சோதனை என்பது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றம் தடையை நீக்கியபிறகும் அரசு அதிகாரிகள்மூலம் தடைசெய்தது இன்றைய ஆட்சியின் நிலையை காட்டுகிறது. நான் படம் பார்ப்பவன் இல்லை. ஆனால் அந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டை விட்டு பறந்து விடப்போகிறார் சிராணி!
» சிராணி பண்டாரநாயக்கா நாட்டை விட்டு வெளியேற முடியாது!
» நானும் சிராணியும் நாட்டை விட்டு வெளியேறுவதன்றால் அரசாங்கம் இப்படிப் பயப்படுகிறதே! - பொன்சேக்கா
» நாட்டை உருவாக்கிய மனிதன்
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum