தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டீன் ஏஜ் குழந்தைகளைத் துரத்தும் நீரிழிவு!

Go down

டீன் ஏஜ் குழந்தைகளைத் துரத்தும் நீரிழிவு!        Empty டீன் ஏஜ் குழந்தைகளைத் துரத்தும் நீரிழிவு!

Post  ishwarya Wed Feb 27, 2013 12:06 pm

கல்லைத் தின்றாலும் கரையும் வயது’... இப்படிச் சொல்லி பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்த்த காலம் காணாமல் போய்விட்டது. பிள்ளைகள் சாப்பிடுகிற ஒவ்வொரு கவள உணவிலும் கவனம் தேவைப்படுகிற காலம் இது. ஆமாம்... முதியவர்களைத் தாக்கும் அத்தனை நோய்களும், இன்று இளவயதினரையும் விட்டு வைப்பதில்லை. பருமன், ஹைப்பர் டென்ஷன், முதுகுவலி, மூட்டுவலி என எதுவும் விதிவிலக்கில்லை. லிஸ்ட்டில் லேட்டஸ்ட்... நீரிழிவு!

இந்தியாவில் 6.24 கோடிக்கும் மேலான மக்களுக்கு நீரிழிவு இருக்கிறது. பரம்பரையாகத் தொடர்வதிலிருந்து, தவறான வாழ்க்கை முறை வரை அதற்குக் காரணங்கள் பல. எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருப்பது ஒரு பக்கமிருக்க, அதில் டீன் ஏஜில் இருப்போர், குறிப்பாக பெண்களே அதிகம் என்பதுதான் அதிர்ச்சியான உண்மை!

சென்னையைச் சேர்ந்த பிரபல நீரிழிவு ஆய்வு மையம், சமீபத்தில் ORANGE (Obesity Reduction and NonCommunicable Diseases Awareness Through Group Education) என்கிற பெயரில் ஒரு ஆய்வை நிகழ்த்தியிருக்கிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1,519 பிள்ளைகளிடம் (777 மாணவர்கள், 742 மாணவிகள்) நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு முன்வைக்கிற தகவல்கள் பீதியைக் கிளப்புகின்றன. அதாவது, கணக்குக்காக எடுத்துக்கொள்ளப்பட்டவர்களில் 4.2 சதவிகிதப் பெண்களும், 3.2 சதவிகித ஆண்களும், நீரிழிவை நெருங்கப் போகிற, அதற்கு முன்பான ‘ப்ரீ-டயப்பட்டிஸ்’ காலகட்டத்தில் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

1995ல் நிகழ்த்தப்பட்ட இதே போன்றதொரு ஆய்வில், ஒரு குழந்தையிடம் கூட நீரிழிவு அறிகுறியோ, அபாயமோ கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக ‘டைப் 2’ வகை நீரிழிவு, பெரியவர்களையே தாக்கும். குழந்தைகளைப் பாதிப்பது ‘டைப் 1’ வகை நீரிழிவு. சமீப காலமாக, பெரியவர்களைத் தாக்கும் டைப் 2 வகை நீரிழிவால், குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

‘‘வெறும் நீரிழிவு பாதிப்பை மட்டும் பார்க்காம, பருமன் உள்பட அத்தனை விஷயங்களையும் சேர்த்துதான் இந்த ஆய்வை நிகழ்த்தினோம். அதுல அரசுப் பள்ளிகள்ல 3 சதவிகிதக் குழந்தைகளும், தனியார் பள்ளிகள்ல 25 சதவிகிதக் குழந்தைகளும் பருமனால பாதிக்கப்பட்டிருக்கிறது முதல் அதிர்ச்சித் தகவலா இருந்தது. 4 பேர்ல ஒருத்தர் அதிக பருமனோட இருந்தாங்க. பெண்குழந்தைகளோட எண்ணிக்கை கொஞ்சம் அதிகம்... ஆம்பிளைப்பசங்களோட ஒப்பிடும்போது, பெண்குழந்தைகள் பூப்பெய்தறது சீக்கிரமே நடக்குது.

அதன் விளைவா அவங்க உடம்புல உண்டாகிற அதிக ஹார்மோன் மாற்றங்கள்கூட, பிரசவ நேரத்துல நீரிழிவு தாக்க ஒரு காரணமா இருக்கலாம்’’ என்கிறார் நீரிழிவு மருத்துவரும், இந்த ஆய்வை நிகழ்த்தியவர்களில் முதன்மையானவருமான டாக்டர் ஆர்.எம்.அஞ்சனா. ‘‘பருமன்தான் நீரிழிவு உள்ளிட்ட அத்தனை ஆரோக்கியக் கேடுகளுக்கும் அஸ்திவாரம். ரொம்ப குண்டா இருந்தா சீக்கிரமே நீரிழிவு வரும். இந்த ஆய்வுல
ஒன்பதாவதுலேருந்து பிளஸ்டூ படிக்கிற பிள்ளைங்க வரைக்கும் நீரிழிவுக்கான ரிஸ்க் அதிகம் இருக்கிறதையும் கண்டுபிடிச்சோம்.

அந்தக் காலகட்டத்துல அவங்களுக்கு படிப்பு, எக்சாம், மார்க்ஸ்னு ஸ்ட்ரெஸ் அதிகரிக்குது. அதுவரை எந்தக் கவலைகளும் இல்லாம, ஓடியாடி விளையாடிட்டிருந்தவங்க, திடீர்னு படிப்புக்காக எல்லாத்தையும் நிறுத்தறாங்க. உடல் இயக்கத்துக்கு வேலையே இல்லை. பள்ளிக்கூடத்துலயும் படிப்பு... வீட்டுக்கு வந்ததும் படிப்பு... ‘பாவம்... பிள்ளைங்க ராப்பகலா கண்விழிச்சுப் படிக்குதே’ன்னு பெத்தவங்களும், எனர்ஜி ட்ரிங்க்கும், கொழுப்பு உணவுமா வச்சு ஊட்டுவாங்க.

அப்படிக் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகற கொழுப்பும் பருமனும் ஒரு கட்டத்துல இறங்காம அப்படியே நின்னுடுது. 25 வயசுலயே நீரிழிவு அபாயத்தோட விளிம்புல நிற்கறாங்க இளைய தலைமுறை.முன்னல்லாம் 55 வயசுல நீரிழிவு அறிகுறி தெரியும். அது தீவிரமாகி, சிக்கல்களைக் கொடுக்க அடுத்த 10 வருஷம் பிடிக்கும். இன்னிக்கு 25லயே நீரிழிவு... 35ல அதனால உண்டாகிற அடுக்கடுக்கான பாதிப்புகள்... 50 வயசுக்குள்ள வாழ்க்கையே முடிஞ்சிடுது.

துடிப்போடவும் ஆரோக்கியத்தோடவும் இருக்க வேண்டிய இளைய சமுதாயம், இப்படி நோயின் பிடியில சிக்கி சீரழியலாமா?’’ - ஆதங்கத்துடன் கேட்கிற அஞ்சனா, பிள்ளைகளின் உணவுப்பழக்கத்தையும் கடுமையாகச் சாடுகிறார்.‘‘பீட்சா, பர்கர், கோக், பெப்சின்னு கொழுப்பும் சர்க்கரையும் அதிகமுள்ள உணவுகளை தினமும் சாப்பிடறாங்க பிள்ளைங்க. ஸ்கூல் கேன்டீன்ல அதுதான் கிடைக்குது. சாதாரணமா ஹோட்டல்ல காபி குடிச்சீங்கன்னா அதுல பால், காபி தூள், சர்க்கரை மட்டும்தான் இருக்கும்.

இன்னிக்கு டீன் ஏஜ் பிள்ளைங்க காபி ஷாப்ல காபி குடிக்கிறதைத்தான் விரும்பறாங்க. அதுல பால், காபி தூள், சர்க்கரை தவிர, கிரீம், எசென்ஸ், ஐஸ்கிரீம்னு ஏதேதோ சேர்த்து, பெரிய டம்ளர்ல கொடுக்கறாங்க. பத்து மடங்கு கலோரி அதிகமான அதைக் குடிக்கிறதுதான் பிள்ளைங்களுக்கு ஃபேஷன். தினமும் இப்படி ஆரோக்கியமில்லாத, அதிக கலோரி உணவுகளா சாப்பிட்டுக்கிட்டிருந்தா, உடல் எடை எகிறும். ரத்த அழுத்தம் கூடும். அதன் விளைவா சிறுநீரகங்கள் செயலிழக்கும். 35 வயசுலயே ஹார்ட் அட்டாக் வந்து, வாழ்க்கையே முடிவுக்கு வந்துடும்.

இதையெல்லாம் தவிர்க்க, அரசாங்கம், பள்ளிக்கூடம், பெற்றோர்னு முத்தரப்பு ஒத்துழைப்பும் அவசியம். பள்ளிக்கூட கேன்டீன்கள்ல ஆரோக்கியமான உணவுகளை மட்டும்தான் விற்கணும்னு அரசாங்கம் வலியுறுத்தணும். லன்ச் பாக்ஸ்ல காய்கறி, பழங்கள், சுண்டல் மாதிரி ஆரோக்கியமான உணவுகளை மட்டும்தான் பள்ளிக்கூட நிர்வாகம் அனுமதிக்கணும். வேலைக்குப் போறதைக் காரணம் காட்டாம, பெற்றோரும், பிள்ளைங்களுக்கு அந்தந்த வேளைக்கு ஃப்ரெஷ்ஷான உணவுகளை சமைச்சுக் கொடுக்கணும்.

வீட்டுச்சாப்பாடுதான் எப்போதும் ஆரோக்கியமானது. அதைச் சாப்பிட்டா எடை ஏறாது. உணவுக்கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது உடற்பயிற்சி. எந்நேரமும் படிப்பு, படிப்புன்னு உடல் இயக்கமே இல்லாம இருந்தா, படிச்சு முடிச்சு பட்டம் வாங்கறதுக்குள்ள, ‘டயப்பட்டிக்’ பட்டம் முந்திக்கும். யோசியுங்க...’’ - எச்சரிக்கிறார் அஞ்சனா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum