தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி

Go down

மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி Empty மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி

Post  meenu Mon Jan 14, 2013 1:36 pm

மணவைபதி நாதன் தமிழக கோட்டையிலே அரசாட்சியும், அருளாட்சியும் செய்து கொண்டிருக்கும் இடம்தான் மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி! தென்னை மரச்சோலைக்குள்ளே, பட்சி பறவைகள் தனது ரீங்காரத்தால் எப்போதும் அய்யா சிவசிவ சிவ சிவா அரகர அரஹரா என்று மகாமந்திரத்தை சொல்ல, பனைமரத்தை தலைவிரிச்சமாக கொண்டு, கலைமுனியும், ஞான முனியும் அய்யாவின் பக்கத்திலே எப்பொழுதும் அமர்ந்து இருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்தும் விதமாக இரண்டு பக்கம் இரண்டு ஆலமரத்தையும் அமைத்து தந்து மணலிபுதுநகர்

அய்யா வைகுண்டபதிக்குள் நுழைந்ததுமே தலைமைபதியான சுவாமிதோப்பில் அய்யாவை பார்த்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வருகின்ற முகமாக இந்த தர்மபதி அமைந்துள்ளது. சென்னைவாழ் அய்யாவின் அன்புகொடி மக்களெல்லாம் நமக்கு ஒரு வழிபாட்டுஸ்தலம் இல்லையே என்று ஏங்கி தவித்த காலத்தில், பல இடையூறுகளுக்கு மத்தியில் அய்யாவால் தேர்ந்து எடுத்து கொடுத்த இடம் தான் இந்த மணலிப்புதுநகர்.

இங்குள்ள அய்யாவின் அன்புகொடி மக்களின் ஒருமித்த கருத்துக்கும், ஒரு புத்தியாய் இருந்து அய்யாவிடம் வேண்டியதற்கும் அய்யா கொடுத்த பரிசுதான் அய்யா வைகுண்ட தர்மபதி!. இந்த தர்மபதியில் அய்யா 32 அறங்கள் பொருந்திய சிம்மாசனத்தில் அரசாட்சி செய்கின்றார்.

பல வர்ணங்களால் தீட்டப்பட்டு, அரண்மனைபோல் காட்சி அளிக்கும் கொலுமண்டபம் இந்த கொலுமண்டபத்தினுள் நின்று அய்யாவை வணங்கும்போது அய்யா இறைவனுக்கு இறைவனாக, ராஜாவுக்கு ராஜாவாக, அமர்ந்து இல்உலகை ஒரு குடைக்குன் அரசாட்சி செய்வதுபோல், பார்த்தவர்கள் கண்களையும் எண்ணங்களையும் பரவச மடையச் செய்கிறது.

அர்த்தமண்டபமும், தியான மண்டபமும் வரும் பக்தர்களின் அமைதிக்கும் 64 கலைகளையும் ஞாபகப் படுத்தும் விதமாகவும், மனித ஒருமைப்பாட்டிற்கும் வழி வகுக்கிறது. வாகன சுத்துபிரகார மண்டபமும் 96 தத்துவங்கள் அடங்கிய சுத்து பிரகாரமண்டபமும் 63 அடி உயரம் கொண்ட ராஜ கோபுரமும் 42 அடி உயரமுள்ள கொடிமரமும் உள்ளது. இங்கு அய்யாவை நம்பி வந்தவர்கள், வாடி போனதில்லை! உள்ளம் பூரித்து உவகை பொங்க செல்கிறார்கள்! என்பதே உண்மை.

பணி விடைகள்.........

அய்யாவுக்கு நித்திய பணிவிடைகள் மூன்று வேளையும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அன்னதானத்துடன் வாகன பவனியும் நடைபெறுகிறது. தமிழ்மாத கடைசி ஞாயிறு அன்று சிறப்பு பணிவிடைகளும், மகாஅன்னதர்மமும் வாகன பவனியும் நடைபெறுகிறது.

மேலும் வாகன மண்டபமும், ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையிலே அன்னதான மண்டபமும் அமைந்து உள்ளது. இங்கு வாரவழிபாடு மாதவழிபாடு திருவிழா காலங்களில் அன்னதானம் செய்வோர், செல்வ செழிப்போடு எல்லா நலனும் பெற்றும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடாக பார்த்த உண்மை.

மணவைபதியில் அன்று அய்யா மண்ணும் தண்ணீரும் கொடுத்து தர்ம வைத்தியம் பண்ணிய நிகழ்வு, மணலிப்புதுநகரில் இரவு 7.30 முதல் 9.30 மணி வரை மண்ணும் தண்ணீரால் பல நோய்களை தீர்த்து அருள் பாலிக்கிறார். ஜாதிமத மட்டுமன்றி அனைவரும் கலந்து தங்கள் குறைகளை அய்யாவிடம் சொல்லி நிவர்த்தி பெற்று செல்கின்றனர். இன்பமாக வாழ்கின்றனர். மாலை 4 மணிக்கு திருஏடு பார்த்து பலன் சொல்லும் நிகழ்ச்சியில் பல மக்கள் கலந்து பலன் பெற்று செல்கின்றனர்.

வைகுண்ட ஜோதி........

மாசி மாதம் அய்யாவின் அவதார தினத்தன்று மாலை 6 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் அமர்ந்து இருக்க, ஜோதி வடிவான இறைவனுக்கு, அய்யாவின் அன்பு கொடிமக்கள் அய்யா சிவ சிவ சிவ சிவாஅரஹார அரஹார என்று மகாமந்திரத்தை ஒருமுகமாக, ஒருபுத்தியோடு ஆத்மார்த்தமாக சொல்ல அழகுகலைகள் பொருந்திய ஜோதி தூணில் வைகுண்ட ஜோதி ஏற்றப்படுகிறது.

இந்த வைகுண்ட ஜோதியினால், உலமக்களின் கெட்ட எண்ணங்கள் எரிக்கப்படுகின்றன. நம்மை அறியாமல் நம்மை சுற்றி இருக்கும் தீயசக்திகளும் எரிக்கப்படுகின்றன. ஜோதி வடிவான வைகுண்ட பரம்பொருள், மணவைபதி நாதன், மணலிப்புதுநகரில் அமர்ந்து, ஆட்சி செய்து அருள் பாலிக்கிறார்.

4 திருவிழாக்கள்.........

1. மாசி 20 அய்யா வைகுண்ட அவதார தினவிழா

2. பிப்ரவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கோபுர ஆண்டு விழா

3. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வெள்ளி திருஏடு வாசிப்பு திருவிழா ஆரம்பித்து தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

4. ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் அன்னதான தர்மபெட்டக தர்மவான்களுக்கு சிறப்பு செய்யும் விழா.

அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகமும், நற்சிந்தை இயக்கத்தின் செயல்பாடுகளும்:-

நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் நற்சிந்தை இயக்கத்தினர் அனைவரும், மனிதநேயம் படைத்தவர்கள் என்றால் மிகையாகாது. வரும் மக்களை உபசரிக்கும் தன்மையும், அன்பாக அறிவு சொல்லும் முறையும், தர்மம் செய்வதில் தனித்திறமை உள்ளவர்களாகவும், தர்மம் தழைத்தோங்குவதற்காகவே அய்யா இவர்களுக்கு இப்பிறவியை வகுத்து கொடுத்து இருக்கிறாரோ என எண்ணவும் தோன்றுகிறது.

ஜாதி ஒற்றுமையும் சமய ஒற்றுமையும்:-

விநாயகர் சதுர்த்தி அன்று எல்லா ஜாதியும், ஒரு நிரப்பாக விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு அய்யா வைகுண்ட தர்மபதிக்கு வந்து, இறைவனுக்கு இறைவனை அய்யா வைகுண்ட பரம்பொருளிடம் இருந்து மாலையும் வாங்கி கொண்டு ஊர்வலத்தில் வந்த அனைவரும் தர்மபதியில் அன்னம் அருந்தி விட்டு மகிழ்ச்சியோடு செல்கின்றனர். சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் நடை பெற்று வருகிறது.

வெள்ளை நாமம்.........

அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் பக்தர்கள் நெற்றியில் வெள்ளை நாமம் வைத்துக் கொள்கிறார்கள். இந்த வெள்ளை நாமம் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இதனை நெற்றியில் மட்டுமல்ல கரைத்து குடித்தால் தீராத நோய்கள் நீங்கும்.

அன்னதானம்.........

அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஞாயிறு தோறும் மதியம் 12 முதல் இரவு 9 மணி வரை சமபந்தி போஜனம் நடைபெறுகிறது. இதை இறைவன் கொடுக்கும் விருந்தாக பக்தர்கள் கருதுகிறார்கள். இதனால் கோவிலுக்கு வரும் அனைவரும் தவறாமல் இந்த அறுசுவை தலை வாழை விருந்தை சாப்பிட்டு செல்கிறார்கள்.

பதம் (தீர்த்தம்).........

அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் தீர்த்தத்தை பதம் என்று கூறுகிறார்கள். இதை கோவிலில் இருந்து வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டால் நோய்கள் நீங்கும். தீராத வினைகள், பேய்-பிசாசுகள் அகலும், தொழில் நஷ்டம் நீங்கி லாபம் கொட்டும். இந்த தண்ணீர் தீர்த்தத்தை வீட்டில் எத்தனை ஆண்டுகள் வைத்திருந்தாலும் கெடவே கெடாது.

சில பக்தர்கள் தங்கள் வீடுகளில் இந்த பதத்தை 30 ஆண்டுகள் வரை வைத்திருக்கிறார்கள். இந்த தண்ணீர் சிறிதளவு கூட கெடவில்லை என்பது விசேஷமான ஒன்று. இந்த பதம் (தீர்த்தம்) கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் கோவிலில் உள்ள முத்திரி கிணற்றில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

உருவமற்ற வழிபாடு.......

பலரும் தெய்வங்களை ஏதாவது ஒரு உருவத்தில் தான் வணங்கி வருகிறார்கள். ஆனால், அய்யா வைகுண்டசாமிக்கு உருவம் கிடையாது. அதனால், ஒரு இருக்கையில் அழகாக அலங்காரம் செய்து,சுற்றிலும் மலர்களால் ஜோடித்து, அங்கே அய்யா வைகுண்டர் அருள் பாலிப்பதாக மனதார நினைத்து வழிபடுகிறார்கள், இங்கே வரும் பக்தர்கள்.

உருவத்திற்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்ற தத்து வத்தை இந்த அய்யா வைகுண்டசாமியின் திருக்கோலம் நமக்கு உணர்த்துகிறது. மேலும், உருவமற்ற வழிபாட்டுக்கு செல்லும் பாதையாகவும் அவரது இந்த திருக்கோலம் அமைகிறது. பிற கோவில்களில் நடைபெறும் வழிபாட்டு முறைக்கும், அய்யா வைகுண்டர் கோவிலில் நடைபெறும் வழிபாட்டு முறைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

பிற கோவில்களில் பின்பற்றப்படும் தீப ஆராதனைகள் இங்கு கிடையாது. வழிபாட்டின்போது தேங்காய் உடைப்பதும், எலுமிச்சம்பழத்தை நசுக்குவதும் கிடையாது. அவ்வாறு செய்வது உயிர்ப்பலி கொடுப்பதற்கு சமமாக கருதப்ப டுவதால் அவற்றை தவிர்க்கிறார்கள். மேலும், சூடம், சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவற்றுக்கும் இங்கு இடம் கிடையாது.

இக்கோவிலுக்கு வருபவர்கள் வெற்றிலை-பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை மாத்திரமே கொண்டு வருகிறார்கள்.

தலைப்பாகை-கண்ணாடி......

அய்யா வைகுண்டரை வழிபடுபவர்கள் தலைப்பாகை அணியும் வழக்கம் உள்ளது. இதற்கு காரணம் : மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் உயர்சாதியினர் எதிரில் வந்தால் மற்ற சாதியை சேர்ந்த ஆண்கள் துண்டை இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும். அல்லது, கை இடுக்கில் வைத்து குனிந்து நிற்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.

இந்த அடிமைத்தனத்தை உடைத்தெறியும் பொருட்டு தனது பக்தர்களை தலையில் துண்டை தலைப்பாகையாக கட்ட வைத்தார் அய்யா. `என் முன்பு கூட நீ தலைப்பாகையோடுதான் நின்றுபேச வேண்டும்' என்று அவர் சொன்னதும் இங்கே நினைவு கூறத்தக்கது. இதேபோல, அய்யாவை உருவம் அற்றதாக வழிபடும் இடத்தில் அவருக்கு பின்னால் ஒரு கண்ணாடி வைத்திருப்பார்கள்.

இதற்கு காரணம் : கண்ணாடியை அவ்வப்போது துடைத்து பயன்படுத்தினால்தான் உருவம் நன்றாகத் தெரியும். அதுபோல, மனிதனது மனம் தூசி படிந்து இருந்தால் அங்கே இறைவன் இருக்க மாட்டான். அதனால், மனிதன் தூய மனதோடு, அதாவது மிகவும் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதை இந்த கண்ணாடி தத்துவம் உணர்த்துகிறது.

பூஜை விவரம்......

தினமும் கூட்டு வழிபாடாக காலை 6 மற்றும் மாலை 5 மணிக்கு அய்யா தமிழில் அருளிய உகப்படிப்பும், மதியம் 12 மணிக்கு நாம் தெரியாமல் செய்த பாவங்களை போக்கும் உச்சிப்படிப்பும் படிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலையில் அய்யா பதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அய்யாவின் மகிமையும், பெருமையும்........

எம்பெருமான் அய்யா வைகுண்டரை மனதில் நிறுத்தி அவர் நமக்கு அருளிய அன்பான உயர்ந்த சிறந்த கருத்துக்களை யார் யார் ஏற்றுக் கொள்கிறார்களோ கடைப்பிடிக்கிறார்களோ அவர்களே சிறந்தவர்கள். பண்பாளர்கள் மனிதநேயம் படைத்தவர்கள். ஒன்று சொன்னதை ஒன்றுகேட்டு ஒன்றுக் கொன்று நிரப்பாயிருக்கிறவர்களே பண்பாளர்கள்.

அப்படிப்பட்ட பண்பாளர்கள் ஒன்று கூடியிருக்கும் இடம் கலியில்லா இடம். இந்த பண்பு ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் கலியில்லை. இது ஒரு ஊரில் இருந்தால் அந்த ஊரில் கலியில்லை. இது ஒரு நாட்டில் இருந்தால் அந்த நாட்டில் கலியில்லை. இந்த கலியன் இல்லாத இடத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் அய்யா நமக்கு அகில திரட்டு அம்மானை, அருள்நூல் ஆகிய ஆகமங்களின் மூலம் அய்யா நமக்கு உணர்த்துகிறார்.

அன்பே ஆயுதம் பொறுமையே வெற்றிக்கு விழி நன்றி மறவாமையே உயர்வுக்கும், நல்ல பண்புக்கும் வழி, இவ்வளவு பண்பும் ஒன்றாக இருந்தால் பாராட்டும் குணம் தானாக வரும். பாராட்டும் குணம் இருந்தால் நல்ல நினைவுகள் உருவாகும். நல்ல நினைவுகள் உருவாவதில் உயர்வு தானாக வரும். இறையருள் கிடைக்கும் இதைதான் அய்யா அவர் அவர் நினைப்புக்கு தக்கவாறு இருக்கிறேன் என்கிறார்.

உன் மனம் என்ன நினைக்கிறதோ அதுதான் உன்வாழ்க்கைக்கு பயனும், நன்மையும். ஆகையால் நல்ல நினைவோடு நாம் இருக்க வேண்டும் நடக்க வேண்டும். நல்ல நினைவுகள் வளர பால் ஊட்டுகிறதுபோல் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறு வயதிலிருந்தே அய்யாவின் கருத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி வளர்க்க வேண்டும்.

அப்பொழுது எந்த குழந்தையாக இருந்தாலும் நல்ல குழந்தையாக தர்மயுக குழந்தையாக, பண்புள்ள குழந்தையாக, பெரியவர்களை மதிக்க கூடிய குழந்தையாக நாட்டுக்கு பயன்படுகிற குழந்தையாக அன்புகொடி குழந்தையாக வளரும்.எல்லோருக்கும் பயன் உள்ள குழந்தையாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

"தன்னை அறிந்துகொண்டால் தலைவன் நீ அறிவாய்'' "நன்றி மறவாதே தான் பெரிது என்று எண்ணாதே'' இது அய்யா நமக்கு கொடுத்த பொக்கிசமான வார்த்தை. இதில் நன்றி என்பது நம்மை படைத்த இறைவன் முதல், தாய் தகப்பன், அண்ணன், தம்பி, சொந்த பந்தம், நண்பர்கள் இவர்கள் செய்ததை, செய்து கொண்டு இருப்பதை மறவாமை.

இதை கடைபிடித்தாலே உயர்வுக்கு வழி கிடைக்கும். நன்றியை மறந்தால் என்ன வரும் என்பதை பெரியவர்கள் வாயிலாக பல கதைகள் கேட்டிருக்கிறோம். அதில் ஒரு சிறு கதையின் மூலம் உண்மையை புரிந்து கொள்ள அடியேன் சமர்ப்பிக்கிறேன்.

தவணைப்பால்........

அய்யா வைகுண்டர் கோவிலில் தவணைப்பால் என்கிற பச்சரிசி, பாசிப் பருப்பு, தேங்காய்த்துருவல், வத்தல் உப்பு, சேர்த்து செய்யப்படும் ஒரு வகை கஞ்சி பக்தர்களுக்கு காலை நேர பிரசாதமாக தரப்படுகிறது. ஒருவரது பசியை போக்கும் சக்தி இந்த கஞ்சிக்கு உண்டு. இறைவனை பசியுடன் வணங்கக்கூடாது என்பதற்காக தவணைப்பால் என்கிற இந்த கஞ்சியை வழங்குகிறார்கள்.

கோவிலுக்கு செல்வது எப்படி?

அமைவிடம் : சென்னையின் புறநகர் பகுதியான மணலிபுதுநகரில் அமைந்துள்ள இந்த கோவில் செல்ல சென்னையின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum