தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்

Go down

சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் Empty சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்

Post  amma Mon Jan 14, 2013 12:44 pm

பச்சை பசேலென்ற விளை நிலங்களும், உயர்ந்த மலைகளும் நிறைந்த பூமி கொங்கு மண்டலம். இங்கு புகழ் பெற்ற கோவில்களும் உண்டு. `மேலைச்சிதம்பரம்' என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில், முருகனின் ஏழாவது படை வீடு மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், காசிக்கு சென்று வந்த பலனை தரும் அவினாசியப்பர் கோவில், பிரம்மா, சிவன், விஷ்ணு என்று மும்மூர்த்திகளுடன் காட்சி தரும் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த கோவில்களின் வரிசையில் கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கி வருவது... சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்.

தல வரலாறு.......

பரமபதநாதனாகிய பரந்தாமன் துவாபர யுகத்தில் ஆயர்பாடியில் நந்தகோபாலன், யசோதையின் மகனாக வளர்ந்து வந்தார். கண்ணபிரானின் திருக்கண் பார்வையால் ஆயர்பாடியில் மக்களும், பசுக்களும் நோய் நொடி இன்றி வாழ்ந்தனர். இப்படி அருள் மழை பெய்து அடியவர்களை உய்விக்கும் திருமாலாகிய கண்ணபிரான், திருவளர்ந்தோங்கும் கொங்கு நன்னாட்டிலே உடுமலை-செஞ்சேரி மலை ரோட்டில் சோமவாரப்பட்டி கிராமத்தில் காட்டின் மத்தியில் கோவில் கொண்டுள்ளார்.

பண்டை காலத்தில் `ஆலாமரத்தூர்' என்று அழைக்கப்பட்ட இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. இங்கு விஷப் பாம்புகள் வாழும் ஒரு ஆலமரத்தின் கீழ் சிவலிங்க வடிவில் ஒரு புற்று இருந்தது. இந்த பகுதியில் மேய்ந்த பசுமாடுகள் இந்த புற்றில் தாமாகவே பாலை சொரிந்து வந்தன. அதைத் கண்ட அப்பகுதி மக்கள் ஆலமரத்தின் கீழ் அமர்ந்த திருமாலையும், ஆலம் உண்ட சிவபெருமானையும் ஒரே கடவுளாக எண்ணி வழிபடத் தொடங்கினர். இன்று அதே வழிபாட்டு முறை தொடர்கிறது.

தமிழ் திருநாள் திருவிழா.........

இக்கோவில் மூலவரான ஆல்கொண்டமால் சிலையில், திருமாலாகிய மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் உள்ள கிருஷ்ண பகவானின் திருவுருவை மேல்பாகத்திலும், ராமவதாரத்தின் சின்னமாகிய ஸ்ரீராமரையும், சீதாதேவியையும் மத்திய பாகத்திலும், கல்கி அவதார சின்னமாகிய கல்கி பகவான் குதிரை மேல் பவனி வருவது போன்ற காட்சியை அடி பாகத்திலும் காண முடிகிறது.

ஆக இந்த சிலை மூன்று பிரிவுகளாக்கப்பட்டு, மேல் பாகத்தில் கிருஷ்ண பகவானுக்கு இருமருங்கிலும் சூரிய சந்திர உருவங்களுடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 3, 4, 5 ஆகிய தேதிகளில் இங்கு தமிழ் திருநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது பக்தர்கள் தங்களது மாட்டு கறவைப்பாலை சொம்புகளில் கொண்டு வந்து திருநீரும், தீர்த்தமும் பெற்றுச் செல்கின்றனர்.

அந்த திருநீறையும், தீர்த்தத்தையும் தங்கள் ஊரில் உள்ள பிற கால்நடைகள் மீது தெளிக்கின்றனர். இப்படிச் செய்தால் அவைகளுக்கு நோய்கள் எதுவும் வராது என்பது அவர்களது நம்பிக்கை. இதன் மூலம் கால்நடைகளின் காவல் தெய்வமாக இக்கோவில் விளங்கி வருகிறது. மேலும், இக்கோவிலில் உற்சவராக திருமால் இருந்தாலும், சிவாலயங்களில் இருப்பது போல நந்தி இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.

ஆல் கொண்டமால் கோவில் விழாவின் போது பக்தர்கள் மண்ணால் செய்து வர்ணம் தீட்டப்பட்ட பசு, கன்றுகளின் உருவ பொம்மைகளை கோவில் வளாகத்தில் உள்ள கால்நடை சிலைகளின் முன் வைக்கிறார்கள். தேங்காயை உடைத்து தேங்காய் தண்ணீரைக் கொண்டு உருவார பொம்மைகளின் கண்களில் தேய்த்து பொம்மைகளுக்கு கண் திறக்கின்றனர்.

பின்னர் தேங்காய், பழம், பத்தி சூடம் வைத்து உருவார பொம்மைகளுக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டு முறை வேறு எங்கும் காண முடியாத ஒன்றாக உள்ளது.

அமைவிடம்.....

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து வடக்கே 12 கி.மீ. தூரத்தில் சோமவாரப்பட்டிக்கு அருகே ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. கோவில் நடைதிறக்கும் நேரம்.... காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை. - குடிமங்கலம் ந.சிவானந்தகுமார்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum