தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை

Go down

ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை Empty ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை

Post  ishwarya Sat Feb 16, 2013 5:50 pm

நட்சத்திரங்கள், திதிகள் எல்லாம் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவை. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி ‘அட்சய திருதியை’ என போற்றப்படுகிறது. ‘அட்சயம்’ என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கிற, ஆரம்பிக்கிற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பயனை தரும் என்பது வேத வாக்கு.
இந்த வருடம் அட்சய திருதியை சித்திரை மாதம் 12-ம் தேதி (நாளை) செவ்வாய்க்கிழமை வருகிறது. இந்த நாளை பற்றி புராணங்களிலும், நாடிகளிலும், தர்ம சாஸ்திரத்திலும் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலன் வறுமையில் வாடுகிறார்.

கிருஷ்ணரை சந்திக்க முடிவெடுத்து ஒருபிடி அவலை தன் மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார். அவரை நன்கு உபசரித்த கிருஷ்ண பகவான் அவர் அன்போடு கொண்டு வந்த அவலை மகிழ்ச்சியுடன் எடுத்து உண்டு, அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து ‘அட்சயம் உண்டாகட்டும்’ என்று வாழ்த்தி அனுப்புகிறார். அதே கணத்தில் குசேலனின் குடிசை வீடு மாடமாளிகையாக மாறுகிறது. அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவரது வீட்டில் குடிகொள்கின்றன. பகவான் கிருஷ்ணர் இன்னொரு வாய் சாப்பிட அவலை எடுக்க.. மகாலட்சுமியின் அம்சமான ருக்மணி, கிருஷ்ணரின் கையை பிடித்து தடுக்கிறாள்.

‘‘எனக்கு பிடித்த அவலை தின்ன விடாமல் ஏன் தடுக்கிறாய்?’’ என்று கிருஷ்ணன் கேட்க.. ‘‘ஒரு பிடி சாப்பிட்டதற்கே குசேலனின் வறுமை நீங்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவன் வீட்டில் குவிந்துவிட்டது. இன்னும் ஒரு பிடி சாப்பிட்டால், மகாலட்சுமியான நானே அவன் வீட்டுக்கு போக வேண்டியதுதான்’’ என்கிறாள் ருக்மணி. இந்த அற்புதம் நிகழ்ந்தது அட்சய திருதியை நாளாகும். கவுரவர் சபையில் திரவுபதி துகிலுரியப்பட்டபோது ஆடைகளை அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்த நாளே என்கிறது வியாச புராணம். தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள், சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள், ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள், சங்க நிதி - பத்மநிதியை குபேரன் பெற்ற நாள், மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள் என பல சிறப்புக்களை உடையது அட்சய திருதியை நாள்.

‘பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்’ என்பது ரமணர் வாக்கு. இல்லாதோர், இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள், தர்மங்கள், பலமடங்கு அதிகமாக உதவி செய்தவனுக்கே ஏதாவது ஒரு வகையில் திரும்ப கிடைக்கும். மேலும் மேலும் தான தர்மங்கள் செய்கிற அளவுக்கு வளமான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்தி தரும். அட்சய திருதியை நாளில் நாம் செய்யும் தான தர்மங்கள் நமக்கு புண்ணியத்தை சேர்க்கும். இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட, பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும். ஏழை நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை தானம் தரலாம்.

ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு, இனிப்புகள் வழங்கலாம். கோயில்களில் அன்னதானம் செய்யலாம். குறிப்பாக தயிர் சாதம், தேங்காய் சாதம், நீர் மோர், பழங்கள் கலந்த பால் சாதம், பால் பாயசம் போன்றவை வழங்கலாம். இந்த நாளில் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். பிரசித்தி பெற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாம். குழந்தைகளின் கல்விக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் வாங்கலாம். சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடலாம். வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கலாம். டெபாசிட் செய்யலாம். புதிய பூஜைகள், விரதங்கள், விட்டுப்போன வழிபாடுகள் தொடங்கலாம். அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வாங்கலாம்.

தீராத வியாதி உள்ளவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர்கள் ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து இறைவனின் நாமத்தை ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும். கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் படுக்கும் தலையணையின் அடியில் ஆல இலையை வைப்பதால் திருஷ்டி பாலரிஷ்ட தோஷங்கள் கழியும் என்பது ஐதீகம். வீட்டில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்யலாம். குறிப்பாக, சகல வெற்றிகளும் தரும் மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லி ஹோமம் செய்யலாம்.

ஏழை, எளியவர்கள், இல்லாதோருக்கு ஆடை, போர்வை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும். தயிர், பால் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். ஆதரவற்ற முதியோர்கள், சிறார் இல்லங்களிலும் ஏழைகளுக்கும் இனிப்பு வழங்குவதால் திருமண பிராப்தம் கூடி வரும். அரிசி, பருப்பு, தானியங்களை தானம் செய்தால் விபத்துகள் நேராமல் இறைவன் காத்தருள்வார். பசு, நாய், பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும். அட்சய திருதியை தினத்தில் தங்கம், வைர ரத்தின ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்ற வழக்கம் உருவானது சமீபகாலமாகத்தான்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது ஒரு நம்பிக்கையே தவிர, தங்கம் வாங்கினால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை. மேலும், அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி, தங்கம் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். இப்படி செய்வதால், கடன் வாங்கும் வழக்கம் மேன்மேலும் அதிகரிக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது. அதனால், கிரெடிட் கார்டு தேய்த்து தங்கம் வாங்குவதை தவிர்ப்பது நலம்.

அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘மகிழ்வித்து மகிழ்’ என்று சொல்வார்கள். எனவே, மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெறுவோமாக.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum