தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவையாறு கோவில்

Go down

திருவையாறு கோவில் Empty திருவையாறு கோவில்

Post  birundha Sun Mar 31, 2013 2:46 pm

ஸ்தல வரலாறு.....

திரு+ஐயாறு-திருவையாறு. இங்குள்ள ஈசனுக்கு இத்தலத்திதின் அருகில் பாயும் காவிரி, குடமுருட்டி,வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் அபிஷேகம் நடைபெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி ஏற்படும் என்பதைப் போல், திருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

பூலோக கயிலாயம்................

அஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. புத்திர பாக்கியம் கிடைக்க கயிலை மலையை ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்யும்படி, சில மகரிஷிகள் தெரிவித்தனர். ஆனால் கயிலை சென்று இந்த பரிகாரத்தை செய்வது என்பது கடினமாகும்.

இதனை உணர்ந்திருந்த சுரதன், அந்த நேரத்தில் திருவையாறில் இருந்த துர்வாச மகரிஷியிடம் தனது நிலையை எடுத்துரைத்தான். இதையடுத்து துர்வாசர், சுரத மன்னனுக்காக ஈசனிடம் வேண்டினார். ஈசன் மனமிரங்கி நந்தி தேவரிடம் கூறி கயிலையை திருவையாறுக்கு எடுத்து வரும்படி கூறினார்.

நந்திதேவரும் கயிலை மலையை தூக்கி வந்து இண்டாகப் பிளந்து, இந்த தலத்தில் தற்போதுள்ள ஐயாறப்பருக்கு தென்புறம் ஒரு பகுதியையும், மற்றொரு பகுதியை வடபுறமும் வைத்தார். இதன் காரணமாக இந்த தலம் பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் வட கயிலாயம், தென் கயிலாயம் என இரு தனிக்கோவில்களாக வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளன.

திருநாவுக்கரசர்...........

ஒருமுறை திருக்காளத்தியை தரிசனம் செய்த திருநாவுக்கரசர், பின்னர் ஸ்ரீசைலம், மாளவம், லாடம் (வங்காளம்), மத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய இடங்களைக் கடந்து காசியை அடைந்தார். அங்கிருந்து கயிலை மலைக்குச் சென்று ஈசனை தரிசிக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அந்த எண்ணமே அவரை கயிலை நோக்கி இழுத்துச் சென்றது.

ஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து திருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது. இருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும் எண்ண மின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர். அப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒரு முனிவர் வடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, நீர் இம்மானிட வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச் செல்லுங்கள் என்றார்.

திருவையாறில் கயிலை காட்சி.............

ஆனால் திருநாவுக்கரசர் அந்த பேச்சை செவிமடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன உறுதியையும் கண்ட சிவபெருமான், திருநாவுக்கரசா! இங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு தலத்தை நீ அடைவாய். அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம் என்று கூறி மறைந்தார்.

இறைவன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய திருநாவுக்கரசர், திருவையாறில் கோவிலுக்கு வடமேற்கே உள்ள சமுத்திர தீர்த்தம், உப்பங்கோட்டை பிள்ளை கோவில் குளம் என்று அழைக்கப்படும் தீர்த்தக்குளத்தில் எழுந்தார். அப்போது திருவையாறில் திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி அருளினார். அந்த ஆனந்த காட்சியை பார்த்த திருநாவுக்கரசர், கயிலைநாதனை உருகிப்பாடினார். திருக்கயிலை காட்சி காட்டிய தினம் ஆடி அமாவாசை ஆகும்.

கோவில் அமைப்பு..............

திருவையாறு தலத்தில் உள்ள தென் கயிலாயக்கோவிலின் நுழைவு மண்டபத்தில் தான் திருநாவுக்கரசருக்கு காட்சி கொடுக்க கயிலை வாசன் தோன்றினார். இந்த தென்கயிலையின் மூலவர் சிவலிங்க வடிவிலும், அவருக்கு பின்புறம் பஞ்ச நாதிவாணர் என்ற பெயரில் ஈசனும், அஞ்சலையம்மன் என்ற நாமத்துடன் அம்பிகையும் அருள் பாலிக்கின்றனர்.

இந்த மண்டபத்தில் திருநாவுக்கரசர் நின்ற கோலத்தில் கயிலாய காட்சியை கண்ட வண்ணம் இருக்கிறார். பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் ஈசன் சுயம்பு லிங்கமாக உள்ளார். மணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். லிங்கத்திற்கு புனுகு சாத்தப்படும். இறைவனின் பெயர் ஐயாறப்பர்.

இங்குள்ள அம்மன் அறம்வளர்த்த நாயகி என்ற நாமத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவர் மகாவிஷ்ணுவைப் போல தோற்றம் அளிக்கிறார். ஆண்டுதோறும் இங்கு ஜனவரியில் நடைபெறும் தியாகராஜர் சங்கீத ஆராதனை சிறப்பு மிக்கது. கடலரசன், வாலி, இந்திரன், மகாலட் சுமி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் காலில் முயலகனுக்கு பதில், ஆமை உள்ளது. சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இதுவாகும்.

ஆட்கொண்டார்.................

இந்த தலம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஓலமிட்ட விநாயகர் அருளால் சுந்தரரும், சேரமான் நாயனாரும் ஈசனை தரிசிப்ப தற்காக காவிரி வெள்ளம் ஒதுங்கி வழிவிட்ட தலம். சுசரிதன் என்னும் சிறுவனைப் பிடிக்க வந்த எமனை விலக்கி அந்த சிறுவனை ஆட்கொண்டார் இங்குள்ள இறைவன்.

இதனால் அவருக்கு ஆட்கொண்டார் என்ற பெயரும் உள்ளது. இந்த ஆட்கொண்டார் சன்னிதி தெற்கு கோபுர வாசலில் உள்ளது. இங்கு எப்போதும் குங்கிலியம் (சாம்பிராணி) புகைந்து கொண்டே இருக்கும். வேறு எங்கும் இல்லாத வகையில் ஈசனுக்கு வடைமாலை சாத்தப்படுகிறது. ஐயாறப்பரை பூஜித்து வந்த அர்ச்சகர் ஒரு முறை காசிக்கு சென்று விட்டார்.

இதனால் ஆலயத்தில் பூஜை முறை தவறும் நிலை ஏற்பட்டது. அப்போது ஐயாறப்பரே, அந்த அர்ச்சகரின் வடிவில் வந்து தன்னைத்தானே பூஜித்துக் கொண்ட புண்ணிய பூமியாகவும் இந்த இடம் திகழ்கிறது. முதல் பிரகாரத்தில் ஐயாறப்பர் அருள்பாலிக்கிறார். இவரது கூந்தல் (சடை) இன்றும் வளர்வதாக ஐதீகம்.

எனவே முதல் பிரகாரத்தில் வலம் வந்தால் ஈசனின் சடையை மிதிக்கும் பாவம் உண்டாகும் என்பதால், இங்கு பக்தர்கள் வலம் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் சோமாஸ்கந்தர் சன்னிதி உள்ளது. மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும். திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் வருகிற 7-2-2013 அன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

நந்திதேவர் திருமணம்..........

திருவையாறில் சிலாத முனிவருக்கு மகனாய் அவதரித்த திருநந்திதேவர், சுயசா தேவியை மணந்து ஐயாறப்பரை பூஜித்து சிவசொரூபம் பெற்று சிவனின் வாகனமானார். இத்தலத்தில் நடைபெறும் விழாக்களுள் நந்திதேவர் திருமண திருவிழா வெகு சிறப்பானது.

பங்குனி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில் அம்மையப்பன் ஒரு வெட்டிவேர் பல்லக்கிலும், நந்திதேவர் ஒரு வெட்டிவேர் பல்லக்கிலும் எழுந்தருளி, திருமழபாடிக்குச் செல்வார்கள். அங்கே நந்திதேவருக்கு திருமணத்தை முடித்துக் கொண்டு அன்று இரவே ஈசனும், உமையவளும் திருவையாறுக்கு எழுந்தருள்வார்கள். அதே போல் சித்திரையில் நடைபெறும் ஏழுர் விழாவும் சிறப்பு வாய்ந்தது.

திருமழபாடியில் நடைபெற்ற நந்தியம்பெருமானின் திருமணத்தின் போது, இத்தல ஈசன் பல பொருட்களைச் சீர்வரிசையாக கொடுத்தருளினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் ஊர்வலமாக சம்ப ஸ்தான விழா எனும் ஏழுர் வலம் நடைபெறுகிறது. சிவன் கண்ணாடி பல்லக்குகளில் ஏறி அம்பாள் மற்றும் நந்தியுடன் திருவையாறில் ஆரம்பித்து, திருப்பழனம், திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஆலயங்களுக்குச் சென்று திரும்புவார்.

அப்போது அந்தந்த ஏழு ஊர்களின் இறைவனும் தனித் தனிப் பல்லக்குகளில் எழுந்தருளி, ஐயாறப்பரை ஊர் எல்லையில் எதிர்கொண்டு அழைத்து வருவார்கள். மறுநாள் காலை திருவையாறுக்கு ஏழு ஊர்களின் பல்லக்குகளும் ஒன்று சேர வரும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum