தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அகிம்சையுடன் நேருக்குநேர்

Go down

அகிம்சையுடன் நேருக்குநேர் Empty அகிம்சையுடன் நேருக்குநேர்

Post  birundha Sat Mar 23, 2013 4:35 pm

சம்பாரண் விவசாயிகளின் நிலைமையும், அவுரித் தோட்ட முதலாளிகளுக்கு எதிராக அவர்களுக்கு இருந்த குறைகளையும் விசாரித்து அறிந்துகொள்ளுவதே என்னுடைய நோக்கம். ஆயிரக்கணக்கான விவசாயிகளை நான் சந்தித்தாக வேண்டியது இக்காரியத்திற்கு அவசியமாயிற்று. ஆனால், என்னுடைய விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னால், இவ்விஷயத்தில் தோட்ட முதலாளிகளின் கட்சி இன்னது என்பதைத் தெரிந்து கொள்ளுவதும், அந்த டிவிஷனின் கமிஷனரைக் கண்டு பேசுவதும் மிக முக்கியம் என்று கருதினேன். இவ்விருவரையும் கண்டு பேச அனுமதி கேட்டு அதையும் பெற்றேன். தோட்ட முதலாளிகளின் சங்கக் காரியதரிசியைக் கண்டு பேசினேன். நான் வெளியான் என்றும், தோட்ட முதலாளிகளுக்கும் அவர்களுடைய சாகுபடியாளருக்கும் இடையே தலையிடுவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் ஒளிவு மறைவு இன்றிச் சொல்லி விட்டார். ஆனால், நான் சொல்லிக்கொள்ள வேண்டியது ஏதாவது இருந்தால், அதை எழுத்து மூலம் தெரிவித்துக் கொள்ளுமாறும் என்னிடம் கூறிவிட்டார். வெளியான் என்று நான் என்னை எண்ணிக்கொள்ளவில்லை என்றும், சாகுபடியாளர்கள் தங்கள் நிலைமையைப் பற்றி நான் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவார்களாயின் அப்படி விசாரிப்பதற்கு எனக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது என்றும் அவரிடம் பணிவாகச் சொன்னேன்.

கமிஷனரையும் போய்ப் பார்த்தேன். அவர் என்னை உருட்டி மிரட்டத் தொடங்கினார். திர்ஹு த்திலிருந்து உடனே போய் விடுமாறும் அவர் எனக்குப் புத்திமதி சொன்னார். இவையெல்லாவற்றையும் என் சக ஊழியர்களுக்குத் தெரிவித்தேன். மேற்கொண்டும் நான் செல்ல முடியாதபடி அரசாங்கம் என்னைத் தடுத்துவிடக்கூடும் என்றும், ஆகவே நான் எதிர்பார்த்ததற்கும் முன்னாலேயே நான் சிறை சென்று விட நேரலாம் என்றும், நான் கைது செய்யப்பட்டால், அப்படிச் செய்யப்படுவது பேதியாவில் சாத்தியமானால் நடக்க வேண்டும்; அல்லது மோதிகாரியில் நடப்பது மிகச் சிறந்தது என்றும் சொன்னேன். ஆகையால் சாத்தியமான வரையில் சீக்கிரத்திலேயே நான் அந்த இடங்களுக்குப் போவதே நல்லது என்றும் கூறினேன். திர்ஹு த் டிவிஷனில் சம்பாரண் ஒரு ஜில்லா; மோதிகாரி அதன் தலைநகரம். ராஜ்குமார் சுக்லாவின் ஊர் பேதியாவுக்குப் பக்கத்தில் இருந்தது. அதற்குப் பக்கத்திலிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளே, அந்த ஜில்லாவில் மிகவும் ஏழைகள். அவர்களை நான் பார்க்க வேண்டும் என்று ராஜ்குமார் சுக்லா விரும்பினார்; நானும் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆகவே, அன்றே என் சக ஊழியர்களுடன் நான் மோதிகாரிக்குப் புறப்பட்டேன். அங்கே பாபு கோரக் பிரசாத் எங்களுக்குத் தம் வீட்டில் தங்க இடம் கொடுத்தார். இதனால் அவர் வீடு ஒரு சத்திரம் போல் ஆகிவிட்டது.

நாங்கள் எல்லோரும் தங்குவதற்கு அந்த வீட்டில் இடம் போதவில்லை. மோதிகாரிக்கு ஐந்து மைல் தூரத்தில் ஒரு விவசாயி துன்புறுத்தப்பட்டார் என்று அன்றே நாங்கள் கேள்விப்பட்டோம். அடுத்த நாள் காலையில் பாபு தரணீதர் பிரசாத்துடன் நான் அங்கே போய் அந்த விவசாயியைப் பார்ப்பது என்று முடிவு செய்தோம். அதன்படி யானை மீது ஏறி நாங்கள் அவ்விடத்திற்குப் புறப்பட்டோம். குஜராத்தில் மாட்டு வண்டி எப்படிச் சர்வ சாதாரணமோ அதேபோலச் சம்பாரணில் யானை சர்வ சாதாரணம். பாதி தூரம்கூடப் போயிருக்க மாட்டோம், அதற்குள் போலீஸ் சூப்பரின்டெண்டென்டிடமிருந்து வந்த ஓர் ஆள் எங்களைப் பிடித்தார். போலீஸ் சூப்பரின்டெண்டென்ட் தமது வந்தனத்தை எனக்கு அனுப்பியதாக அந்த ஆள் கூறினார். அவர் கூறியதன் கருத்தை நான் அறிந்து கொண்டேன். போக இருந்த இடத்திற்குத் தரணீதர் பிரசாத்தை மாத்திரம் போகச் சொல்லிவிட்டு, அந்த ஆள் கொண்டு வந்திருந்த வாடகை வண்டியில் நான் ஏறிக் கொண்டேன். சம்பாரணிலிருந்து நான் போய்விட வேண்டும் என்ற உத்தரவைப் பிறகு அந்த ஆள் எனக்குச் சாதரா செய்து, என்னை நான் தங்கியிருந்த இடத்துக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டார். உத்தரவைப் பெற்றுக் கொண்டதற்குக் கையெழுத்துப் போட்டுத் தரும்படி அவர் கேட்டார்.

அந்த உத்தரவுக்கு நான் கீழ்ப்படியப்போவதில்லை என்றும், என் விசாரணை முடியும் வரையில் நான் சம்பாரணிலிருந்து போகப்போவதில்லை என்றும் எழுதிக் கொடுத்தேன். அதன் பேரில் சம்பாரணை விட்டுப் போய்விடவேண்டும் என்ற உத்தரவை மீறிவிட்ட குற்றத்திற்காக விசாரிப்பதற்கு, மறுநாள் கோர்ட்டுக்கு வருமாறு எனக்குச் சம்மன் வந்தது. அன்று இரவு முழுவதும் விழித்திருந்து கடிதங்கள் எழுதினேன்; பாபு பிரஜ்கி÷ஷார் பிரசாத்துக்கு அவசியமான யோசனைகளை எல்லாம் கூறினேன். எனக்கு உத்தரவிடப்பட்டதும் சம்மன் வந்திருப்பதும் காட்டுத்தீபோல் எங்கும் பரவிவிட்டன. மோதிகாரி, இதற்கு முன்னால் என்றுமே கண்டறியாத காட்சியை அன்று கண்டது என்று சொன்னார்கள். கோரக் பாபுவின் வீட்டிலும், கோர்ட்டிலும் சொல்ல முடியாத அளவுக்கு ஒரே ஜனக் கூட்டம். அதிர்ஷ்டவசமாக என் வேலைகளையெல்லாம் இரவிலேயே செய்து முடித்து விட்டதால் அப்பெரும் கூட்டத்தைச் சமாளிக்க என்னால் முடிந்தது. என் சகாக்கள் எனக்கு அதிக உதவியாக இருந்தார்கள். நான் போன இடத்திற்கெல்லாம் கூட்டம் பின் தொடர்ந்து வந்துகொண்டு இருந்ததால் அக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வேலையில் என் சகாக்கள் ஈடுபட்டிருந்தனர்.

கலெக்டர், மாஜிஸ்டிரேட், போலீஸ் சூப்பரின்டெண்டென்ட் ஆகிய அதிகாரிகளுக்கும் எனக்கும் இடையே ஒரு வகையான நட்பு ஏற்பட்டது. எனக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவைச் சட்ட ரீதியில் நான் ஆட்சேபித்திருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக நான் அவற்றை எல்லாம் பெற்றுக் கொண்டேன். அதிகாரிகள் விஷயத்தில் நான் தவறில்லாமலும் நடந்து கொண்டேன். இதிலிருந்து தனிப்பட்ட வகையில் தங்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என்றும், அவர்களுடைய உத்தரவைச் சாத்விகமாக எதிர்க்கவே நான் விரும்புகிறேன் என்றும் அவர்கள் கண்டு கொண்டனர். இந்த வகையில் அவர்கள் கவலையற்றவர்களாயினர். என்னைத் தொந்தரவு செய்வதற்குப் பதிலாகக் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு என் ஒத்துழைப்பையும், என் சகாக்களின் ஒத்துழைப்பையும் மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக் கொண்டார்கள். என்றாலும், தங்களுடைய அதிகாரம் ஆட்டம் கண்டு விட்டது என்பதற்கு அது கண்கூடான சாட்சியாக அவர்களுக்கு இருந்தது. அந்த நேரத்தில் மக்கள், தண்டனையைப் பற்றிய பயத்தையெல்லாம் இழந்து விட்டார்கள். தங்கள் புதிய நண்பர்கள் காட்டிய அன்பின் சக்திக்கே பணிந்தனர். சம்பாரணில் யாருக்கும் என்னைத் தெரியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் எல்லோரும் ஒன்றுமே அறியாதவர்கள். சம்பாரண், கங்கைக்கு வடக்கில் வெகு தூரத்திலும், இமயமலை அடிவாரத்தில் நேபாளத்திற்குப் பக்கத்திலும் இருப்பதால், இந்தியாவின் மற்றப் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. அப் பகுதியில் இருப்பவர்களுக்குக் காங்கிரஸைப் பற்றி ஒன்றுமே தெரியாது.

காங்கிரஸ் என்ற பெயரைக் கேட்டிருப்பவர்கள் கூட, அதில் சேருவதற்கும், அதன் பெயரைச் சொல்லுவதற்கும் கூடப் பயந்து கொண்டிருந்தனர். இப்பொழுதோ, காங்கிரஸு ம் அதன் அங்கத்தினர் களும், காங்கிரஸின் பெயரால் இல்லாவிட்டாலும் அதைவிட இன்னும் அதிக உண்மையான வகையில், அப்பகுதியில் பிரவேசித்து விட்டார்கள். காங்கிரஸின் பெயரால் எதையும் செய்ய வேண்டாம் என்று என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்து விட்டேன். நாங்கள் விரும்பியதெல்லாம், வேலையையேயன்றிப் பெயரையல்ல; பொருளையேயல்லாமல் நிழலையல்ல. ஏனெனில், அரசாங்கத்திற்கும், அந்த அரசாங்கத்தை இஷ்டம்போல் ஆட்டிவந்தவர்களான தோட்ட முதலாளிகளுக்கும், காங்கிரஸ் என்ற பெயரே வேப்பங்காயாக, வெறுப்பாக இருந்தது. காங்கிரஸ் என்பதற்கு, வக்கீல்களின் தந்திரவாதங்கள்; சட்டத்தில் இருக்கும் இடுக்குகளைக் கொண்டு சட்டத்தைப் பின்பற்றாது இருப்பது; வெடி குண்டுக்கு மற்றொரு பெயர்; அராஜகக் குற்றம், தந்திரம், நயவஞ்சகம் - என்றெல்லாம் அவர்கள் பொருள் கற்பித்துக் கொண்டிருந்தனர். இந்த இரு தரப்பாரிடமிருந்தும் இந்தத் தப்பு அபிப்பிராயத்தைப் போக்க வேண்டும். ஆகவே, காங்கிரஸின் பெயரையே சொல்லுவதில்லை. காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தைப் பற்றி விவசாயிகளுக்குத் தெரிவிப்பதில்லை என்று நாங்கள் முடிவு செய்து கொண்டோம். காங்கிரஸின் பெயரைவிட அதன் கருத்தை அறிந்து அவர்கள் நடந்து கொண்டாலே போதும் என்று நாங்கள் எண்ணினோம். ஆகையால், காங்கிரஸின் சார்பாகப் பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ அங்கே வேலை செய்து, எங்கள் வருகைக்காக முன்னேற்பாடுகளைச் செய்து வைக்க அங்கே தூதர்கள் யாரும் அனுப்பப்படவில்லை.

ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் போய்ப்பிரச்சாரம் செய்வதற்கு வேண்டிய சக்தியும் ராஜ்குமார் சுக்லாவுக்கு இல்லை. அதுவரையில் அம்மக்கள் இடையே எந்த விதமான ராஜீய வேலையும் நடந்தது கிடையாது. சம்பாரணுக்கு வெளியில் உலகம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாதென்றாலும், ஆயுளெல்லாம் தங்களுக்கு நண்பனாக இருந்தவனைப்போல் அவர்கள் என்னை வரவேற்றார்கள். இவ்விதம் விவசாயிகளை நான் சந்தித்ததில், கடவுளையும், அகிம்சையையும், சத்தியத்தையும் நேருக்கு நேராக நான் தரிசித்தேன் என்று கூறுவது அப்படியே உண்மையேயன்றி எவ்விதத்திலும் மிகைப்படுத்திக் கூறுவது ஆகாது. இந்தத் தரிசனத்தை நான் பெறுவதற்கு என்னை உரியவனாக்கியது எது என்பதை நான் ஆராயும்போது, மக்களிடம் கொண்ட அன்பைத் தவிர வேறு எதுவும் அல்ல என்பதைக் காண்கிறேன். இந்த அன்பு, அகிம்சையில் நான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத உறுதியின் வெளித் தோற்றமேயன்றி வேறு அன்று. சம்பாரணில் அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாள்; விவசாயிகளுக்கும் எனக்கும் அது மிகவும் முக்கியமான நாளாகும். சட்டப்படி விசாரணைக்கு உட்பட வேண்டியவன் நான். ஆனால், உண்மையில், குற்றவாளியின் கூண்டில் ஏறி நின்றது அரசாங்கமே என்று சொல்ல வேண்டும். என்னைப் பிடிக்க விரித்திருந்த வலையில் அரசாங்கம் சிக்கிக்கொள்ளும்படி செய்வதிலேயே கமிஷனர் வெற்றி பெற்றார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum