தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அறிவூட்டிய சம்பாஷணை

Go down

அறிவூட்டிய சம்பாஷணை Empty அறிவூட்டிய சம்பாஷணை

Post  birundha Sat Mar 23, 2013 4:23 pm

கதர் இயக்கத்தையும் அப்பொழுது சுதேசி இயக்கம் என்றே சொல்லி வந்தனர். இந்த இயக்கத்தை ஆரம்பம் முதற் கொண்டே ஆலை முதலாளிகள் அதிகமாகக் குறை கூறி வந்தனர். காலஞ்சென்ற உமார் ஸோபானியே திறமை மிக்க ஆலை முதலாளிதான். தமது அறிவையும் அனுபவத்தையும் கொண்டு அவர் எனக்கு ஆலோசனைகள் கூறிவந்ததோடு, மற்ற ஆலை முதலாளிகளின் அபிப்பிராயங்களையும் அப்போதைக்கப்போது எனக்குத் தெரிவித்தும் வந்தார். அந்த ஆலை முதலாளிகளில் ஒருவர் சொன்ன வாதங்கள் அவர் மனத்தை அதிகம் கவர்ந்தன. அவரை நான் சந்திக்க வேண்டும் என்று உமார் ஸோபானி வற்புறுத்தினார். நானும் சம்மதித்தேன். அதன் பேரில் நாங்கள் சந்தித்துப் பேச அவர் ஏற்பாடு செய்தார். ஆலை முதலாளி, சம்பாஷணையைப் பின்வருமாறு ஆரம்பித்தார்: இதற்கு முன்னாலேயே சுதேசிக் கிளர்ச்சி நடந்துகொண்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? ஆம். அறிவேன் என்றேன்.

வாங்காளப் பிரிவினைக் கிளர்ச்சியின்போது ஆலை முதலாளிகளாகிய நாங்கள், சுதேசி இயக்கத்தை எங்கள் சொந்த லாபத்திற்கு முற்றும் பயன்படுத்திக் கொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். அந்த இயக்கம் உச்ச நிலையில் இருந்த சமயம், துணியின் விலையை நாங்கள் உயர்த்தினோம். அதையும் விட மோசமான காரியங்களையும் செய்தோம். ஆம். அதைக் குறித்தும் கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி நான் மனம் வருந்தியதும் உண்டு. உங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை நான் அறிய முடியும். ஆனால், அவ்வாறு வருத்தப்படுவதற்கு எந்தவிதமான காரணத்தையும் என்னால் காண முடியவில்லை. நாங்கள் பரோபகார நோக்கத்திற்காக எங்கள் தொழிலை நடத்திக் கொண்டிருக்கவில்லை. லாபத்திற்காகத் தொழில் நடத்துகிறோம். அதில் பங்கு போட்டிருப்பவர்களையும் நாங்கள் திருப்தி செய்ய வேண்டும். ஒரு பொருளின் விலை ஏறுவது, அப்பொருளுக்கு இருக்கும் கிராக்கியைப் பொறுத்தது. தேவைக்கும் சரக்கு விற்பனைக்கும் உள்ள சம்பந்தத்தைப்பற்றிய விதியை யார் தடுத்துவிட முடியும்? சுதேசித் துணிகளின் தேவையை அதிகரிப்பதனால் அத்துணிகளின் விலை ஏறித்தான் தீரும் என்பதை வங்காளிகள் அறிந்தே இருக்க வேண்டும்.

நான் குறுக்கிட்டுக் கூறியதாவது: என்னைப் போன்றே வங்காளிகளும் பிறரை எளிதில் நம்பிவிடும் சுபாவமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆலை முதலாளிகள் இவ்வளவு படுமோசமான சுயநலக்காரர்களாகவும் தேசாபிமானம் இல்லாதவர்களாகவும் இருந்துவிட மாட்டார்கள் என்று பரிபூரணமாக அவர்கள் நம்பி விட்டார்கள். தாய்நாட்டிற்கு நெருக்கடியான நிலைமை நேர்ந்துள்ள சமயத்தில் ஆலை முதலாளிகள், அவர்கள் செய்துவிட்டதைப் போன்று, அந்நிய நாட்டுத் துணியைச் சுதேசித் துணி என்று மோசடியாக விற்றுவிடும் அளவுக்குப் போய்த் துரோகம் செய்து விடுவார்கள் என்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பிறரை எளிதில் நம்பிவிடும் சுபாவமுள்ளவர்கள் நீங்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் என்னிடம் வரும்படி உங்களுக்குக் கஷ்டத்தையும் கொடுத்தேன். கபடம் இல்லாதவர்களான வங்காளிகள் செய்துவிட்ட அதே தவறை நீங்களும் செய்து விடவேண்டாம் என்று உங்களை எச்சரிக்கை செய்யவே இங்கே வரும்படி செய்தேன் என்றார் அவர்.

இவ்வாறு கூறிவிட்டு, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தமது குமாஸ்தாவை அழைத்து, தமது ஆலையில் தயாராகும் துணிகளின் மாதிரிகளைக் கொண்டுவரும்படி கூறினார். அதைச் சுட்டிக்காட்டி அவர் என்னிடம் கூறியதாவது: இதைப் பாருங்கள்; எங்கள் ஆலையில் இப்பொழுது கடைசியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் துணியின் மாதிரி இது. இதற்குக் கிராக்கி ஏராளமாக இருந்து வருகிறது. வீணாகப் போகும் கழிவிலிருந்து இதைத் தயாரிக்கிறோம். ஆகையால், இயற்கையாகவே இது மலிவானது. வடக்கே ஹிமாலயப் பள்ளத்தாக்குகள் வரையில் இதை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். நாடெங்கும் எல்லா இடங்களிலுமே - உங்கள் குரலும், ஆட்களும் போகவே முடியாத இடங்களிலும்கூட - எங்களுக்கு ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். ஆகவே, எங்களுக்குப் புதிதாக, அதிகப்படியான ஏஜெண்டுகள் தேவை இல்லை என்பதை நீங்கள் காணலாம். அதோடு, இந்தியாவில் அதன் தேவைக்குப் போதுமான அளவு துணி உற்பத்தி ஆகவில்லை என்பதையும் நீங்கள் அறியவேண்டும். ஆகவே, சுதேசி இயக்கம், இங்கே துணி உற்பத்தி அதிகமாவதையே பெரிதும் பொறுத்திருக்கிறது.

நாங்கள் உற்பத்தி செய்வதைப் போதிய அளவு அதிகரித்து, அவசியமாகும் அளவுக்கு அதன் தரத்தையும் எப்பொழுது அபிவிருத்தி செய்துவிடுகிறோமோ அப்பொழுதே அந்நியத் துணி இறக்குமதி, தானே நின்று போய்விடும். ஆகையால், நான் உங்களுக்குக் கூறும் யோசனை என்னவென்றால், நீங்கள் இப்பொழுது நடத்தி வரும் முறையில் உங்கள் கிளர்ச்சியை நடத்திவர வேண்டாம்; ஆனால், புதிதாக ஆலைகளை அமைப்பதில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள் என்பதே. இப்பொழுது நமக்குத் தேவையெல்லாம் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டியதே அன்றி எங்கள் சரக்குகளுக்குத் தேவையை அதிகப்படுத்தப்பிரச்சாரம் செய்வதன்று. அப்படியானால், நீங்கள் குறிப்பிடும் இதே காரியத்திலேயே இப்பொழுதே நான் ஈடுபட்டிருக்கிறேனென்றால், என் முயற்சியை நீங்கள் வாழ்த்துவீர்களல்லவா? என்று கேட்டேன். கொஞ்சம் திகைத்துப்போய், அது எப்படி முடியும்? என்றார், அவர். ஆனால், புதிய ஆலைகளை அமைப்பதைக் குறித்து நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கலாம். அப்படியானால், நிச்சயமாக உங்களைப் பாராட்ட வேண்டியதே என்றார்.

நான் இப்பொழுது செய்துகொண்டிருப்பது அதுவல்ல. ஆனால், கைராட்டினத்திற்குப் புத்துயிர் அளிப்பதில் நான் இப்பொழுது ஈடுபட்டிருக்கிறேன் என்று அவருக்கு விளக்கிச் சொன்னேன். இன்னும் குழப்பமடைந்தவராகவே அவர், அது என்ன விஷயம்? என்று என்னைக் கேட்டார். கைராட்டினத்தைப் பற்றிய விவரங்களையும், அதைக் கண்டுபிடிப்பதற்காக வெகு காலம் தேடியலைந்ததைப் பற்றியும் அவருக்குச் சொல்லி நான் மேலும் கூறியதாவது: இவ் விஷயத்தில் என் அபிப்பிராயம் முற்றும் உங்கள் அபிப்பிராயமே ஆகும். ஆலைகளின் ஏஜெண்டாகவே நானும் ஆகிவிடுவதில் எந்தவிதமான பயனும் இல்லை. அப்படி ஆகிவிடுவதனால் நாட்டிற்கு நன்மையை விடத் தீமையே அதிகமாகும். நம் மில் துணிகளை வாங்குகிறவர்கள் இன்னும் வெகுகாலம் வரையில் குறையவே மாட்டார்கள். ஆகையால், கையினால் நூற்ற துணி உற்பத்திக்கு ஏற்பாடு செய்து, அவ்விதம் தயாரான கதர், விற்பனையாகும்படி பார்ப்பதே என் வேலையாக இருக்க வேண்டும், இருந்தும் வருகிறது. எனவே, கதர் உற்பத்தியிலேயே என் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.

இந்த வகையான சுதேசியத்திலேயே நான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஏனெனில், அரைப்பட்டினி கிடந்து, போதிய வேலையும் இல்லாமல் இருக்கும் இந்தியப் பெண்களுக்கு இதன்மூலம், நான் வேலை கொடுக்க முடியும். இந்தப் பெண்களை நூல் நூற்கும்படி செய்து, அந்த நூலைக்கொண்டு நெய்த துணியை இந்திய மக்கள் உடுத்தும்படி செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். இந்த இயக்கம் இப்பொழுது ஆரம்பக்கட்டத்திலேயே இருக்கிறது. ஆகையால், இந்த இயக்கம் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது தெரியாது. என்றாலும், இதில் பூரணமான நம்பிக்கை இருக்கிறது. எப்படியும் அதனால் எந்தவிதமான தீமையும் விளைந்துவிடப் போவதில்லை. அதற்கு மாறாக, நாட்டின் துணி உற்பத்தி நிலையை அது அதிகமாக்கும் அளவுக்கு - அந்த அளவு மிகக் குறைவானதாகவே இருந்தாலும், அந்த அளவுக்கு - அதனால் நிச்சயமான நன்மையே உண்டு. ஆகவே, நீங்கள் குறிப்பிட்ட தீமை எதுவும் இயக்கத்தில் கிடையாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதன் பேரில் அவர் கூறியதாவது: உங்கள் இயக்கத்தை நீங்கள் நடத்துவதற்கு நாட்டின் துணி உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கமென்றால், அதற்கு விரோதமாக நான் எதுவும் சொல்லுவதற்கில்லை. ஆனால், இயந்திர யுகமான இந்தக் காலத்தில் கைராட்டினம் முன்னேற முடியுமா என்ற விஷயம் வேறு இருக்கிறது. என்றாலும், நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum