தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விடைபெற்றுக் கொள்ளுகிறேன்

Go down

விடைபெற்றுக் கொள்ளுகிறேன் Empty விடைபெற்றுக் கொள்ளுகிறேன்

Post  birundha Sat Mar 23, 2013 4:22 pm

இந்த அத்தியாயங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டிய சமயம் இப்பொழுது வந்திருக்கிறது. இந்தக் கட்டத்திற்கு மேல் என்னுடைய வாழ்க்கை மிகவும் பகிரங்கமாக ஆகிவிட்டது. அதில் பொதுமக்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. மேலும் 1921-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தலைவர்களுடன் அதிகமாக நெருங்கியிருந்து வேலை செய்து வந்திருக்கிறேன். ஆகையால், அவர்களுடன் எனக்குள்ள உறவைப் பற்றிக் குறிப்பிடாமல் என் வாழ்க்கைச் சம்பவங்களில் எதையுமே அக்காலத்திற்குப் பிறகு நான் விவரிக்கவே முடியாது. சிரத்தானந்தஜி, தேசபந்து, ஹக்கீம் சாகிப், லாலாஜி ஆகியவர்கள் காலஞ்சென்று விட்டார்கள். என்றாலும், பிரபலமான காங்கிரஸ் தலைவர்கள் பலர் இன்னும் வாழ்ந்து நம்முடன் இருந்து வேலை செய்துவரும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். நான் மேலே விவரித்துள்ளபடி, காங்கிரஸில் பெறும் மாறுதல்கள் ஏற்பட்ட பின்னரும் காங்கிரஸின் சரித்திரம் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது. மேலும், சென்ற ஏழு ஆண்டுகளாக நான் செய்து வந்திருக்கும் முக்கியமான சோதனைகளையெல்லாம் காங்கிரஸின் மூலமாகவே செய்து வந்திருக்கிறேன் ஆகையால், மேற்கொண்டும் நான் செய்த சோதனைகளைப் பற்றி நான் கூறிக்கொண்டு போவதாயின், தலைவர்களுடன் எனக்குள்ள தொடர்பைப் பற்றிச் சொல்லுவதைத் தவிர்க்கவே முடியாது.

நியாயஉணர்ச்சியை முன்னிட்டேனும் இப்போதைக்காவது அதை நான் செய்ய முடியாது. கடைசியாக, இப்பொழுது நான் செய்து வரும் சோதனைகளைப்பற்றிய முடிவுகள், திட்டமானவை என்று இன்னும் சொல்லிவிடுவதற்கில்லை. ஆகையால், இந்த வரலாற்றை இந்த இடத்தோடு முடித்துவிடுவதே என்னுடைய தெளிவான கடமை என்பதைக் காண்கிறேன். உண்மையில் என் பேனாவும், இயற்கையாகவே அதற்குமேல் இதை எழுதிக்கொண்டு போகவும் மறுக்கிறது. வாசகரிடமிருந்து இப்பொழுது நான் விடைபெற்றுக் கொள்ளுவதில் எனக்கு மன வருத்தம் இல்லாமலில்லை. என்னுடைய சத்திய சோதனைகள் அதிக மதிப்பு வாய்ந்தவை என்று நான் கருதுகிறேன். அந்த மதிப்பு நன்றாகப் புலப்படும்படி நான் செய்திருக்கிறேனோ என்பதை நான் அறியேன். உள்ளதை உள்ளபடியே எடுத்துக் கூறுவதற்கு என்னால் இயன்றவரை சிரமம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று மாத்திரமே நான் கூற முடியும். எந்தவிதமாக நான் சத்தியத்தைக் கண்டுகொண்டேனோ அதே விதமாக அதை விவரிப்பதே என் இடையறாத முயற்சியாக இருந்து வந்திருக்கிறது. இந்தப் பயிற்சி, அழித்துவிட முடியாத மனச்சாந்தியை எனக்கு அளித்திருக்கிறது. ஏனெனில், சந்தேகம் உள்ளவர்களுக்கும் சத்தியத்திலும் அகிம்சையிலும் அது நம்பிக்கையை உண்டாக்கும் என்று நான் ஆசையோடு நம்பி வந்திருக்கிறேன்.

சத்தியத்தைத்தவிர வேறு கடவுள் இல்லை என்பதை, ஒரே மாதிரியான என்னுடைய அனுபவங்களில் எனக்கு உறுதியாக உணர்த்தியிருக்கின்றன. சத்தியத்தைத் தரிசிப்பதற்குள்ள ஒரே மார்க்கம் அகிம்சைதான் என்பதை இந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு பக்கமும் வாசகருக்கு அறிவுறுத்தவில்லையாயின், இந்த அத்தியாயங்களை எழுதுவதற்கு நான் எடுத்துக் கொண்ட சிரமமெல்லாம் வீணாயின என்றே கொள்ளுவேன். இந்த வகையில் என் முயற்சிகளெல்லாம் பலனற்றவையே என்று நிரூபிக்கப்பட்டு விட்டாலும், அதன் குற்றம் என்னுடையதேயன்றி அம்மகத்தான கொள்கையினுடைய தல்ல என்பதை வாசகர்கள் அறிய வேண்டும். அகிம்சையை நாடுவதில் எவ்வளவுதான் உள்ளன்போடு நான் முயற்சிகள் செய்து வந்திருந்தாலும், அவை இன்னும் குறைபாடுடையவைகளாகவும், போதுமானவை அல்லாதனவாகவுமே இருந்து வருகின்றன. ஆகையால், சத்தியத் தோற்றத்தை அவ்வப்போது ஒரு கண நேரம் கண்டுகொண்டது, சத்தியத்தின் விவரிக்கவொண்ணாத பெருஞ் ஜோதியை நான் தெரிந்துகொண்டு விட்டதாகவே ஆகாது.

நான் தினந்தோறும் கண்ணால் பார்க்கும் சூரியனைவிட கோடி மடங்கு அதிகப் பிரகாசம் உடையது சத்தியத்தின் ஜோதி. உண்மையில் நான் கண்டிருப்பதெல்லாம், அந்த மகத்தான பரஞ்ஜோதியின் மிகச் சிறிய மங்கலான ஒளியையேயாகும். ஆனால், என்னுடைய எல்லாச் சோதனைகளின் பலனாகவும் ஒன்றை மாத்திரம் நான் நிச்சயமாகக் கூற முடியும். அகிம்சையைப் பூரணமாக அடைந்தால் மாத்திரமே சத்தியத்தின் பூரணமான சொரூபத்தையும் தரிசிக்க முடியும். பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொரூபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின். மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப்போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும். அந்த நிலையை அடைந்துவிட ஆசைப்படுகிறவர் யாரும், வாழ்க்கையின் எந்தத் துறையிலிருந்தும் விலகி நின்று விட முடியாது. அதனாலேயே, சத்தியத்தினிடம் நான் கொண்டிருக்கும் பக்தி, என்னை ராஜீயத் துறையில் இழுத்து விட்டிருக்கிறது. சமயத் துறைக்கும் ராஜீயத்திற்கும் எந்த விதமான சம்பந்தமுமே இல்லை என்று கூறுவோர், சமயம் என்பது இன்னதென்பதையே அறியாதவர்களாவர். இதைக் கொஞ்சமேனும் தயக்கமின்றி, ஆயினும் முழுப் பணிவுடன் கூறுவேன். தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொண்டு விடாமல், எல்லா உயிர்களிடத்திலும் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்ளுவது என்பது முடியாத காரியம்.

தம்மைத் தாம் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் அகிம்சை தருமத்தை அனுசரிப்போமென்பது வெறும் கனவாகவே முடியும். மனத்தூய்மை இல்லாதார் என்றுமே கடவுளை அறிதல் இயலாது. ஆகையால், தம்மைத் தாமே தூய்மைப்படுத்திக் கொள்ளுவது என்பது, வெகு விரைவில் மற்றவர்களுக்கும் தொத்திக்கொள்ளும் தன்மை உடையதாகையால், ஒருவர் தம்மைத் தாமே தூய்மைப்படுத்திக் கொள்ளுவதனால், அவசியமாக தம்முடைய சுற்றுச் சார்பையும் தூய்மைப்படுத்தி விடுவதாகிறது. ஆனால், ஆன்மத் தூய்மைக்கான மார்க்கம் மிகவும் கஷ்டமானதாகும். பூரணத் தூய்மையை ஒருவர் அடைவதற்கு, அவர் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் காமக் குரோதங்களை அறவே நீக்கியவராக இருக்க வேண்டும். அன்பு - துவேஷம், விருப்பு - வெறுப்பு என்னும் எதிர்ப்புச் சுழல்களினின்று அவர் வெளிப்பட்டவராகவும் இருக்க வேண்டும். அம்மூவகைத் தூய்மையையும் அடைவதற்காக இடைவிடாது நான் முயற்சி செய்து கொண்டு வருகிறேனாயினும், அந்த மூன்று தூய்மைகளும் இன்னும் என்னுள் இல்லை என்பதை நான் அறிவேன். இதனாலேயேதான் இவ்வுலகத்தின் புகழுரைகளெல்லாம் எனக்கு இன்பம் தருவதில்லை; உண்மையில் அவைகளினால் எனக்கு அடிக்கடி மனக் கஷ்டமே உண்டாகிறது.

ஆயுத பலத்தைக் கொண்டு உலகத்தையே வெற்றி கொண்டுவிடுவதைவிட, உள்ளுக்குள் இருக்கும் காமக், குரோத உணர்ச்சிகளை வென்று விடுவது அதிகக் கஷ்டமாக எனக்குத் தோன்றுகிறது. நான் இந்தியாவுக்குத் திரும்பியதிலிருந்து, என் உள்ளத்தினுள்ளே மறைந்துகொண்டு தூங்கிக் கிடக்கும் ஆசாபாசங்களை நான் அனுபவித்து வருகிறேன். அவை இன்னும் என்னிடம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதைப் பற்றிய எண்ணம், நான் தோல்வியுறும்படி செய்து விடவில்லையாயினும், அவமானப்படும்படி செய்கிறது. அனுபங்களும் சோதனைகளுமே என்னை நிலைபெற்றிருக்கச் செய்து எனக்கு ஆனந்தத்தையும் அளிக்கின்றன. ஆனால், இன்னும் நான் கடக்க வேண்டிய மிகக்கஷ்டமான பாதை என் முன்னால் இருக்கிறது என்பதை அறிவேன். என்னை நான் அணுவிற்கும் அணுவாக்கிக் கொண்டுவிட வேண்டும். தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் தன்னைக் கடையனாகத் தானே விரும்பி ஒரு மனிதன் வைத்துக்கொண்டு விடாத வரையில் அவனுக்கு விமோசனமே கிடையாது. அடக்கத்தின் மிகத் தொலைவான எல்லையே அகிம்சையாகும். தற்போதைக்கேயாயினும் வாசகரிடம் நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன். மனம், வாக்கு, காரியங்களில் அகிம்சை விரதத்தை எனக்கு அருளுமாறு சத்தியமேயான கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அந்தப் பிரார்த்தனையில் என்னுடன் கலந்து கொள்ளுமாறு வாசகரைக் கேட்டுக் கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.

birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum