தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உண்ணாவிரதம்

Go down

உண்ணாவிரதம் Empty உண்ணாவிரதம்

Post  birundha Sat Mar 23, 2013 4:16 pm

முதல் இரு வாரங்கள் வரையில் ஆலைத் தொழிலாளர்கள் அதிக தீரத்தோடும், தன்னடக்கத்துடனும் நடந்து கொண்டார்கள். தினந்தோறும் பெரிய பொதுக் கூட்டங்களும் நடந்தன. அச்சமயங்களில் அவர்களுடைய பிரதிக்ஞைகளைக் குறித்து அவர்களுக்கு ஞாபகப்படுத்துவேன். உயிரை விட்டாலும் விடுவோமேயன்றி அளித்த வாக்கை மாத்திரம் மீறிவிடமாட்டோம் என்று அவர்கள் உரக்கக்கூறி எனக்கு உறுதி கூறுவார்கள். ஆனால், கடைசியாக அவர்கள் சோர்வின் அறிகுறியைக் காட்டத் தலைப்பட்டு விட்டனர். உடம்பு பலவீனமாக ஆக மனிதன் சீக்கிரத்தில் கோபப்படுவதுபோல, வேலைநிறுத்தம் பலவீனம் அடைவதாகத் தோன்றியதும், கட்டுப்பாட்டை மீறி வேலைக்குப் போகிறவர்கள் விஷயத்தில் தொழிலாளர்கள் கொண்ட போக்கு மேலும் மேலும் ஆபத்தானதாகிக் கொண்டு வந்தது. எங்கேமுரட்டுத்தனமான செய்கைகளில் இறங்கி விடுவார்களோ என்று பயப்பட்டேன். தினந்தோறும் கூட்டத்திற்கு வரும் தொழிலாளரின் தொகையும் குறைந்து வந்தது.

கூட்டத்திற்கு வந்தவர்களும், சோர்வும் கிலேசமும் அடைந்திருந்தார்கள் என்பது அவர்களுடைய முகக்குறிகளிலிருந்து தெரிந்தது. கடைசியாகத் தொழிலாளர் உறுதி குலைந்து வருகின்றனர் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. இதனால், பெரும் கவலையடைந்தேன். இந்நிலைமையில் என் கடமை என்ன என்பதைக் குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கலானேன். தென்னாப்பிரிக்காவில் மகத்தானதொரு வேலை நிறுத்தம் நடத்திய அனுபவம் எனக்கு உண்டு. ஆனால், இங்கே எனக்கு ஏற்பட்ட நிலைமை முற்றிலும் மாறானது. நான் கூறிய யோசனையின் பேரிலேயே ஆலைத் தொழிலாளர்கள் பிரதிக்ஞை செய்துகொண்டனர். தினந்தோறும் அதை என் முன்னால் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியும் கூறிவந்தார்கள். அப்படியிருக்க அப்பிரதிக்ஞையை மீறி, அவர்கள் நடந்துகொண்டு விடக்கூடும் என்பதை என்னால் நினைக்கவும் முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட இந்த உணர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருந்தது, என் தற்பெருமையா, தொழிலாளர்களிடம் நான் கொண்டிருந்த அன்பா, அல்லது சத்தியத்தினிடம் எனக்கு இருந்த ஆர்வத்தோடு கூடிய பற்றா என்பதை யார் சொல்ல முடியும்?

இவ்வாறு திகைத்துத் தெளிவான வழி காண முடியாமல், நான் தத்தளித்துக்கொண்டிருந்த சமயத்தில், ஒரு நாள் காலை, ஆலைத் தொழிலாளர்களின் கூட்டத்தில் திடீரென்று எனக்கு ஓர் ஒளி தோன்றிற்று. முன் கூட்டி எண்ணிப் பாராமலே என் நாவில் பின்வரும் சொற்கள் பிறந்தன: வேலை நிறுத்தம் செய்திருப்பவர்கள் திடம் கொண்டு, ஒரு சமரச முடிவு ஏற்படும் வரையில் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினாலன்றி, அல்லது இப்போது வேலைக்குப் போகிறவர்கள் எல்லோரும் ஆலைகளிலிருந்து வெளி வந்துவிடும் வரையில், நான் உணவு கொள்ளப் போவதில்லை என்று அக்கூட்டத்தில் கூறினேன். இதைக் கேட்டதும் தொழிலாளர்கள் இடிவிழுந்ததைப் போல் திகைத்துப் போயினர். அனுசூயா பென்னின் கண்களிலிருந்து நீர் வழிந்து ஓடியது. நீங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். நாங்கள் உண்ணாமல் இருக்கிறோம். நீங்கள் பட்டினி இருப்பதைப் போன்ற பெருங்கொடுமை வேறு இல்லை. நாங்கள் செய்துவிட்ட தவறுகளுக்கு எங்களை மன்னித்துவிடுங்கள். இனி இறுதிவரையில் பிரதிக்ஞையில் நிச்சயமாக உறுதியுடன் இருக்கிறோம் என்று தொழிலாளர் எல்லோரும் ஒரே முகமாகக் கூறினார்.

நான் அப்பொழுது அவர்களுக்குக் கூறியதாவது: நீங்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டிய அவசியமில்லை. உங்களுடைய பிரதிக்ஞையிலிருந்து வழுவாமல் நீங்கள் இருந்தாலே போதும். நம்மிடம் நிதி இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். பொது ஜனங்களிடம் பிச்சையெடுத்து. அதைக்கொண்டு வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு போக நாம் விரும்பவில்லை. ஆகையால், வேலை நிறுத்தம் எவ்வளவு காலத்துக்கு தொடர்ந்து நடந்தாலும், அதைப்பற்றிய கவலையே இல்லாமல் நீங்கள் இருந்து வருவதற்கு ஏதாவது ஒரு வேலையைச் செய்து ஜீவனத்திற்கு வேண்டியதைத் தேடிக்கொள்ள நீங்கள் முயல வேண்டும். என்னுடைய உண்ணாவிரதத்தைப் பொறுத்த வரையில் வேலை நிறுத்தம் முடிந்தபிறகே நான் அதைக் கைவிடுவேன். இதற்கு மத்தியில் வேலை நிறுத்தம் செய்திருந்த தொழிலாளருக்கு முனிசிபாலிடியின் கீழ் ஏதாவது வேலை தேடிக் கொடுப்பதற்கு வல்லபாய் முயன்று வந்தார். ஆனால், இதில் வெற்றி பெற முடியும் என்பதற்கு அதிக நம்பிக்கை எதுவும் இல்லை. த்மகன்லால் காந்தி ஒரு யோசனை கூறினார்: நமது ஆசிரம நெசவுப் பள்ளிக்கூட அடித்தளத்தை நிரப்புவதற்கு நமக்கு மணல் வேண்டியிருக்கிறது.

இந்த வேலையில் பலரை அமர்த்திக் கொள்ளலாம் என்றார். இந்த யோசனையைத் தொழிலாளர்களும் வரவேற்றார்கள். அனுசூயா பென், தமது தலையில் முதலில் ஒரு கூடையைச் சுமந்து, அவர்களுக்கு வழிகாட்டினார். அவரைப் பின்பற்றித் தொழிலாளர்கள் வரிசை வரிசையாக ஆற்றிலிருந்து மணலை வாரிக் கூடைகளைத் தங்கள் தலைகளில் சுமந்துகொண்டு வந்து கொட்டிய வண்ணம் இருந்தனர். அது காண்பதற்கரிய காட்சியாக இருந்தது. தங்களுக்கு ஏதோ புதிய பலம் வந்திருப்பதாகவே தொழிலாளர்கள் உணர்ந்தனர். அவர்களுக்குச் சம்பளத்தைப் பட்டுவாடா செய்து சமாளிப்பதே கஷ்டமாக இருந்தது. என்னுடைய உண்ணாவிரதத்தில் பெரிய குறைபாடும் இல்லாது போகவில்லை. நான் முந்திய அத்தியாயத்தில் கூறியிருப்பதைப் போல, ஆலை முதலாளிகளிடம் நெருங்கிய தொடர்பும், அன்பான உறவும் எனக்கு இருந்து வந்தது. ஆகவே என்னுடைய உண்ணாவிரதம் அவர்களுடைய தீர்மானத்தைப் பாதிக்காமல் இருக்க முடியாது. அவர்களை எதிர்த்து நான் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்பதைச் சத்தியாக்கிரகி என்ற வகையில் நான் அறிவேன். தொழிலாளர் செய்திருக்கும் வேலை நிறுத்தம் ஒன்றைக் கொண்டே அவர்கள் சுயேச்சையான முடிவுக்கு வரும்படி விட்டிருக்க வேண்டும். நான் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டது,

ஆலை முதலாளிகள் செய்துவிட்ட தவறுக்காக அன்று. தொழிலாளர்கள் பிரதிக்ஞையிலிருந்து தவறி விட்டதற்காகவே உண்ணாவிரதம் இருந்தேன். அவர்களுடைய பிரதிநிதி என்ற வகையில், அவர்கள் செய்த தவறில் எனக்கும் பங்கு இருக்கிறது என்று கருதினேன். ஆலை முதலாளிகளிடம் நான் வேண்டிக் கொள்ளலாம். ஆனால், அவர்களுக்கு விரோதமாக உண்ணாவிரதம் இருப்ப தென்பது அவர்களை நிர்ப்பந்தப்படுத்துவதாகும். என்னுடைய உண்ணாவிரதம் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தியே தீரும் என்பதை நான் அறிந்திருந்தும் உண்மையிலேயே அது அவர்களை நிர்ப்பந்தப்படுத்தியது. உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்று எண்ணினேன். உண்ணாவிரதம் இருக்க வேண்டியதே என் கடமை என்று எனக்குத் தெளிவாகத் தோன்றியது. ஆலை முதலாளிக்குச் சமாதானம் கூற முயன்றேன். உங்களுடைய நிலைமையிலிருந்து எனக்காக நீங்கள் மாறியாக வேண்டிய அவசியம் கொஞ்சமேனும் இல்லை என்று அவர்களுக்குச் சொன்னேன். ஆனால், என் வார்த்தைகளால் அவர்கள் சமாதானம் அடையவில்லை. நயமான மொழிகளால், உள்ளம் வருந்தும்படியாக என்னை ஏளனம் கூடச் செய்தனர். அவ்விதம் செய்ய அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.

வேலை நிறுத்தம் சம்பந்தமாக ஆலை முதலாளிகள் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்து வந்ததற்கு மூலகாரணமாக இருந்தவர், சேத் அம்பாலால். அவருடைய தளராக உறுதியும், கபடமற்ற இயல்பும் அற்புதமானவை. அவை என் உள்ளத்தைக் கவர்ந்தன. அவரை எதிர்த்துப் போராடுவது என்பதே மகிழ்ச்சி அளிப்பதாகும். ஆகவே, அவரைத் தலைவராகக் கொண்ட எதிர்க்கட்சிக்கு என்னுடைய உண்ணாவிரதம் உண்டாக்கிய சங்கடமான நிலைமையைக் குறித்து நான் அதிக மனவேதனை அடைந்தேன். அவருடைய மனைவி சரளாதேவி, உடன் பிறந்த சகோதரியைப்போல் என்னிடம் அன்பு கொண்டிருந்தார். என்னுடைய செய்கையினால், அவர் மனவருத்தம் அடைந்ததைக் காண என்னால் சகிக்கவில்லை. அனுசூயா பென்னும், நண்பர்கள் பலரும், தொழிலாளரும், முதல் நாள் என்னுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆனால், அவர்கள் மேற்கொண்டும் உண்ணாவிரதம் இருப்பதைக் கொஞ்சம் சிரமத்தின் பேரிலேயே நிறுத்தி விடும்படி செய்தேன். இதனாலெல்லாம் ஏற்பட்ட பலன், எல்லோரிடமும் நல்லெண்ணச் சூழ்நிலை ஏற்பட்டதாகும். ஆலை முதலாளிகளின் மனமும் இரங்கியது. சமரசத்திற்கான வழியைக்காண அவர்கள் முன் வந்தார்கள். அனுசூயா பென்னின் வீட்டில் அவர்களுடைய விவாதங்கள் நடந்தன. ஸ்ரீ அனந்த சங்கர துருவாவும் இதில் தலையிட்டார். முடிவில் அவரையே மத்தியஸ்தராகவும் நியமித்தனர்.

நான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து மூன்று நாட்களுக்குப் பிறகு வேலை நிறுத்தமும் முடிவுற்றது. இந்த நல்ல முடிவைக் கொண்டாடுவதற்காக ஆலை முதலாளிகள், தொழிலாளருக்கு மிட்டாய்கள் வழங்கினர். இவ்விதம் இருபத்தொரு நாட்கள் வேலை நிறுத்தம் நடந்த பிறகு சமரச முடிவு ஏற்பட்டது. இந்தச் சமரச முடிவைக் கொண்டாடுவதற்காக நடந்த கூட்டத்திற்கு ஆலை முதலாளிகளும் கமிஷனரும் வந்திருந்தனர். இவ்வைபவத்தில் தொழிலாளருக்குப் புத்திமதி கூறிய கமிஷனர், ஸ்ரீ காந்தி கூறும் புத்திமதியை அனுசரித்தே நீங்கள் எப்பொழுதும் நடந்துகொள்ள வேண்டும் என்றார். இந்தச் சம்பவங்களெல்லாம் முடிந்தவுடனேயே இதே கனவானிடம் நான் ஒரு தகராறில் ஈடுபட வேண்டியதாயிற்று. ஆனால், நிலைமையோ இதற்கு மாறானது; அந்த நிலைமையை அனுசரித்து அவரும் மாறுதல் அடைந்து விட்டார். அப்பொழுது அவர், என் புத்திமதியைக் கேட்டு நடந்துவிட வேண்டாம் என்று கேடா பட்டாதார்களுக்கு எச்சரிக்கை செய்தார்! ஒரு சம்பவத்தைக் குறிப்பிடாமல் நான் இந்த அத்தியாயத்தை முடித்துவிடக் கூடாது. அச்சம்பவம் எவ்வளவு வேடிக்கையானதோ அவ்வளவு பரிதாபகரமானதுமாகும். மிட்டாய் வினியோகத்தில் நடந்த சம்பவம் அது. மில் முதலாளிகள் மிட்டாயை ஏராளமாகத் தருவித்திருந்தார்கள்.பல்லாயிரக்கணக்கான தொழிலாளரிடையே அதை எப்படி வினியோகிப்பது என்பதே பெரிய பிரச்னையாகி விட்டது.

வேறு எந்த இடத்திலும் அவர்களையெல்லாம் ஒன்றாகக் கூட்டி வைப்பது என்பது முற்றும் அசௌகரியமாக இருந்தது. ஆகையால், திறந்த வெளியில், அதுவும் அவர்கள் எந்த மரத்தின் அடியில், இருந்து பிரதிக்ஞை செய்தார்களோ அதே மரத்தின் அடியில், அவர்களுக்கு மிட்டாயை வினியோகிப்பதுதான் சரி என்று தீர்மானிக்கப்பட்டது. இருபத்தொரு நாட்கள் கண்டிப்பான கட்டுப்பாட்டை அனுசரித்து வந்திருக்கும் தொழிலாளர்கள், எந்தவிதமான கஷ்டமும் இன்றி ஒழுங்காக நின்று வினியோகிக்கப்படும் மிட்டாயை வாங்கிக் கொள்ளுவார்கள், மிட்டாய் வாங்கப் போட்டி போட்டுக் கொண்டு மேலே விழமாட்டார்கள் என்று நிச்சயமாக நம்பி இருந்துவிட்டேன். ஆனால், இதைச் சோதிக்கும் சமயம் நேர்ந்தபோது, வினியோகிப்பதற்கு அனுசரித்த எல்லா முறைகளும் பலிக்காது போயின. வினியோகிக்க ஆரம்பித்த இரண்டு நிமிஷங்களுக்குள் அவர்கள் வரிசையெல்லாம் கலைந்து விடும்; மீண்டும் மீண்டும் குழப்ப நிலைமை உண்டாகிவிடும். மில் தொழிலாளர்களின் தலைவர்கள், ஒழுங்கை நிலை நிறுத்த என்ன முயன்றும் பயனில்லை. குழப்பமும், நெருக்கித் தள்ளுவதும், போட்டியும் முடிவில் தாங்க முடியாதவை ஆகிவிட்டன. இக்குழப்பத்தில் காலில் மிதியுண்டு ஏராளமான மிட்டாய்கள் பாழாயின. கடைசியாகத் திறந்த வெளியில் வினியோகிப்பது என்பதையே கைவிட்டு விட்டனர். மிஞ்சிய மிட்டாய்களைச் சிரமப்பட்டு மிர்ஜா பூரிலிருந்த சேத் அம்பாலாலின் பங்களாவுக்குக் கொண்டு போனோம். மறுநாள் அந்தப் பங்களாத் தோட்டத்தில் எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல் மிட்டாய் வினியோகிக்கப் பட்டது.

இச்சம்பவத்தின் வேடிக்கையான அம்சம் தெளிவானதே. ஆனால், இதிலுள்ள பரிதாபப் பகுதியைக் குறித்து கொஞ்சம் சொல்ல வேண்டும். பின்னால் இதைப்பற்றி விசாரித்தால் உண்மை வெளியாயிற்று. பிரதிக்ஞை எடுத்துக்கொண்ட மரத்தடியில் மிட்டாய்கள் வினியோகிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டுவிட்ட அகமதாபாத்திலிருந்த பிச்சைக்காரர்கள் எல்லோரும் அங்கே ஏராளமாகப் போய்க் கூடி விட்டார்கள். பட்டினியால் வாடிய அவர்கள் மிட்டாய்களைப் பெற முண்டியடித்துக்கொண்டு போனதே அங்கே ஏற்பட்ட குழப்பத்திற்கும் ஒழுங்கின்மைக்கும் காரணம். நம் நாட்டில் வறுமையும் பட்டினியும் மக்களை வாட்டி வருகின்றன. இதனால், ஆண்டுதோறும் பிச்சைக்காரர்களின் தொகை பெருகிக் கொண்டே போகிறது. இவர்கள் வேறு கதியின்றி வயிற்றுச் சோற்றுக்காகப் போராடுவது, நேர்மை, சுயமரியாதை ஆகிய உணர்ச்சிகளே இல்லாதவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறது. நமது தருமப் பிரபுக்கள், அவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு வேண்டிய காரியங்களைச் செய்யாமல், வயிற்றுப் பாட்டுக்கு வேலை செய்தாக வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தாமல், அவர்களுக்குப் பிச்சை போடுகிறார்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum