தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில்.

Go down

திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில். Empty திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில்.

Post  birundha Thu Jan 17, 2013 2:20 pm

திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி
தமிழர் கடவுளான முருகனுக்கு தமிழ்நாட்டிலுள்ள அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக இருப்பது திருப்பரங்குன்றம்தான். மதுரை மாநகருக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்தத் திருப்பரங்குன்றத்தில்தான் முருகப் பெருமான் தெய்வாணையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடைபெற்றது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

கோயில் வரலாறு

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு “ஒம்” எனும் பிரணவ (பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடி மீது அமர்ந்திருந்த முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு மாற்றாக அமைந்து விட்டதால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்யத் தொடங்கினார்.

இதைப் பார்த்த சிவபெருமானும், பார்வதி தேவி அவர் முன் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று தோன்றி, அவரது தவத்தைப் பாராட்டினார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அதன்படி முருகப்பெருமான் சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துனபத்திலிருந்து விடுபட்டார்கள். இதனால் தனது நன்றியைச் செலுத்தும் விதமாக இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் - தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

இந்தத் திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி, பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப் பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

முருகப்பெருமான் - தெய்வயானை, வள்ளி திருமணத்தின் காரணம்

மகாவிஷ்ணுவின் கண்களிலிலிருந்து தோன்றிய அமிருதவல்லி, சுந்தரவல்லி ஆகிய இருவரும் முருகனையே மணக்க வேண்டும் என்று தவமிருந்தனர். முருகன் அமிர்தவல்லியைத் தேவலோகத்திலும், சுந்தரவல்லியை பூமியிலும் பிறக்கும்படி பணித்தார். கிரியா சக்தியாகிய அமிர்தவல்லி இந்திரன் மகளாகப் பிறந்து அவனது யானையான ஐராவதத்தினால் வளர்க்கப்பட்டாள். இதனால் அவளுக்கு தேவயானை என்ற பெயர் ஏற்பட்டது.

தேவயானைக்கு ஷஷ்டி தேவி என்ற பெயரும் உண்டு. இவள் பிரும்மாவிம் மானஸ புத்திரி. மாத்ருகா மண்டலத்தைச் சேர்ந்தவள். மூலப் பிருகிருதியான பரதேவதையின் சக்தியில் ஆறில் ஒரு பங்கு உள்ளவள். அதனால்தான் சஷ்டி தேவி எனப் பெயர் வந்தது. இவள் குழந்தையைக் காக்கும் தெய்வம்.

இச்சா சக்தியாகிய சுந்தரவல்லி வள்ளிமலைச் சாரலில் தவமிருந்தாள். பின்னர் ஒரு மானின் வயிற்றில் பிறந்து வள்ளிக் கிழங்குக் குழியில் கிடைக்கப் பெற்றதால் வள்ளி என்று பெயர் பெற்று வேடர்குலத் தலைவன் நம்பிராஜனால் வளர்க்கப்பட்டாள்.

இவர்கள் இருவரையும் முருகப் பெருமான் மணந்தார். செலவச் செழிப்பில் தோன்றிய தேவயானையையும், எளிய வேடர் குலத்தில் வளர்ந்த வள்ளியையும் மணந்து கொண்ட நிகழ்வு இறைவன் பக்குவமடையாத ஜீவனையும் சமமாகக் கருதி அருள் புரிகிறார் என்பதை உணர்த்துகிறது.

கோயில் முகப்புத் தோற்றம்
கோயில் அமைப்பு

இக்கோவில் கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திருவுருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லை. பாறையில் இடது புறம் முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். பக்கத்தில் முருகப் பெருமானின் திருமணக் கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுவது போல் இங்கு கருவறை அமைந்துள்ளது.

கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்தியகிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.

கருவறையில் முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இந்திரனுடைய மகளான தேவயானையை வளர்த்த ஐராவதம் அவளைப் பிரிய மனமில்லாமல், அப்படியே தன் வளர்ப்பு மகளான தேவயானைக்கும், முருகனுக்கும் தொண்டாற்ற அங்கேயே இருந்து விட்டதாக பெரியவர்கள் சொல்கின்றனர்.

கருவறையில் முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.

தற்போதுள்ள கோயிலுக்கு நேராக மலையில் மற்றொரு சிறிய கோயில் ஒன்று உள்ளது. இதுதான் மூலக் கோயில் என்றும் சொல்கிறார்கள்.

சரவணப் பொய்கை

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்குப் பக்கம் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கையிலுள்ள வேலினால் உண்டாக்கப்பட்டது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும் என்பதுடன் அவர்களது வேண்டுதலும் உடனடியாக நிறைவேறும் என்றும் சொல்கிறார்கள். இதனால் இங்கு வரும் பக்தர்கள் இங்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நக்கீரர் கோயில்

நக்கீரர் சிவபூசையின் போது வழுவியதால் பூதம் ஒன்று அவரைக் குகையில் கொண்டு போய் அடைத்து விட்டது. இதனால் அவர் அங்கிருந்தபடி திருமுருகாற்றுப்படையைப் பாட, முருகன் தோன்றி மலையைப் பிளந்து அவரை விடுவித்து அருளினார். நக்கீரர் அமர்ந்து பூசை செய்த இடத்தைப் பஞ்சாட்சரப் பாறை உள்ளது. சரவணப் பொய்கைக்கரையில் பஞ்சாட்சரப் பாறை எனுமிடத்தில் நக்கீரருக்குக் கோயில் இருக்கிறது.

திருப்பரங்குன்றம் பெயர்க் காரணம்

பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம். திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என வேறு சில பெயர்களும் உள்ளன.

திருப்பரங்குன்றம் கோயில் கோபுரம் மலையுடன் சேர்ந்த தோற்றம்
இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை தினமும் வலம் வந்து வழிபட்டால் வேண்டுவோரின் குறைகளெல்லாம் நீங்கி விடும் என்று திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரத்தில் பாடப்பட்டுள்ளது.

சிறப்பு விழாக்கள்

சிவபெருமானும் பார்வதிதேவியும் திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுக்கு தைப்பூசத்தன்று காட்சியளித்தனர் என்றும் இதனால் இங்கு வந்து சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் அவர்கள் வேண்டியதைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவின் போது இங்கு வந்து வணங்குவது மிகச் சிறப்பானது என்கிறார்கள். இங்கு தைப்பூசத் திருவிழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முருகன் தேவயானையை மணந்து கொண்டதாகக் கூறப்படும் பங்குனி உத்திரம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முருகன் கோயில்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலில் தினசரி பூசைகள் பிற முருகன் கோயில்களில் செய்யப்படுவது போன்றே செய்யப்படுகின்றன.

சிறப்புக்கள்



முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில் முதல்படைக் கோயில் என்பதுடன் இக்கோயில் அளவிலும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர் ஆகியோர் இங்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாகவே மேலே செல்ல வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு இயலாது.

நக்கீரர் முருகன் மீது திருமுருகாற்றுப்படையைப் பாடியது இத்தலத்தில்தான்.

முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பயண வசதி

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மதுரையின் அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்திற்கு மதுரை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையங்களில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு நேரடியாக நகரப் பேருந்து வசதி உள்ளது. இந்தப் பேருந்து நிலையங்களிலிலிருந்து திருமங்கலம், திருநகர் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் திருப்பரங்குன்றம் வழியாகத்தான் செல்கின்றன.

மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் ஒன்றும் உள்ளது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum